அழகியசிங்கர்
திங்கட் கிழமை (20.02.2017) காலையில் நானும் மனைவியும் மயிலாடுதுறை சென்றோம். காலையில் திருச்சி எக்ஸ்பிரஸில்..ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு முடித்தேன். மதியம் இரண்டு மணிக்கு இறங்கியவுடன் மயிலாடுதுறை பஸ் ஸ்டான்ட் போக டாக்ஸிகாரர் 100 ரூபாய்க் கேட்டார். நாங்கள் பஸ்ஸில் பத்து ரூபாய்க்குச் சென்றோம். பஸ் ஸ்டான்டிலிருந்து மயூர விலாஸ் என்ற ஓட்டலுக்குச் சென்று ரொம்ப லைட்டாக ஒரு சாப்பாடு சாப்பிட்டோம். சுவையாக இருந்தாலும் காரம் தாங்க முடியவில்லை. தர்மபுரம் தெருவில் உள்ள வீட்டிற்கு வந்தவுடன், அப்பாடா என்று இருந்தது. மயிலாடுதுறை இடம் பயங்கரமான அமைதியாக இருக்கும்போல் இருந்தது. இந்த அமைதியை உணரத்தான் முடியும். விவரிக்க முடியாது. எதிரில் இருந்த நண்பர் குடும்பம் எங்களுக்கு எல்லாவித உதவிகளையும் செய்தது. இந்தக் காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்களா என்ற ஆச்சரியம் வந்து போனது.
அடுத்தநாளிலிருந்து நண்பரின் டூ வீலர் கிடைத்தது. அந்த டூ வீலர் எப்படி என்று விவரிக்கப் போவதில்லை. ரொம்ப உபயோகமாக இருந்தது. ஆட்டோவில் உட்கார்ந்த கொஞ்ச தூர இடத்திற்குப் போனால் கூட கொள்ளை அடித்துவிடுகிறார்கள்.
பிரம்மாண்டமான ராஜன் தோட்டத்தைச் சுற்றி சுற்றி நடந்து வந்தோம். ஒரு ரவுண்ட் சுற்ற 10 நிமிடம் ஆகிறது. மூன்று முறை சுற்றினோம். அங்கு நான் முன்பு இருந்தபோது சந்தித்த பல நண்பர்களைச் சந்தித்தேன். என்னை ஞாபகம் வைத்துக்கொண்டு பேசினார்கள்.
திருஇந்தளூர் என்ற இடத்தைப் போயப் பார்த்தோம். அங்குதான் ஞானக்கூத்தன் பால்யக் காலத்தில் வளர்ந்த வீடு இருந்தது. பாழ் அடைந்து யாரும் கவனிப்பாரற்று கிடந்தது. அங்கிருந்தவர்களைப் பார்த்து அந்த வீடைப் பற்றி கேட்டேன். üபரம்பரையாக வசித்து முடித்து விட்டார்கள். இப்போ யாருமில்லை,ý என்றார்கள். ஞானக்கூத்தன் அங்குள்ள மண்டபத்தை வைத்தும் குளத்தை வைத்தும் கவிதைகள் எழுதி உள்ளார். காவேரியில் தண்ணீரே இல்லை. அதன் காய்ந்துபோன நிலத்தைப் பார்த்து கண்கலங்கினேன் என்று வசனம் எழுத விரும்பவில்லை.
திருஇந்தளூரில் உள்ள பெருமாள் சயனித்திருப்பார். ஒருமுறை நான் அங்கு வந்தபோது, எலிகள் பெருமாள் மேல் ஓடிக்கொண்டிருந்தன.
அடுத்தநாள் கும்பகோணம் என்ற வசீகரமான இடத்திற்குச் சென்று கோயில்களைச் சுற்றினோம். மகாமகம் குளத்தில் காலை நனைத்தோம். பிரான்சிலிருந்து ஒரு ஆங்கிலப் பேராசிரியர் வந்திருந்தார். அவருக்கு 38 வயதாம்..கல்யாணம் செய்து கொள்ளவில்லையாம்..திருவண்ணாமலை போய்விட்டு இங்கு வந்திருக்கிறாராம். உற்சாகமாக இருந்தார். கும்பகோணம் ஒரே களேபரமாக சப்தமாக இருந்தது. மயிலாடுதுறையின் அமைதி இல்லை.
இதற்கு முன் மயிலாடுதுறையில் உள்ள எங்கள் வங்கிக்கிளையில் பணிபுரியும் நண்பரைப் பார்க்கச் சென்றேன். ஓடி வந்து விட்டேன்.ஒரே கூட்டம் அவரைச் சுற்றி.
எனக்கு உதவிய நண்பர் அவர் எழுதிய கவிதைகள் சிலவற்றை என்னிடம் காட்டி அபிப்பிராயம் கேட்டார். நான் அபிப்பிராயம் சொன்னதைக் கேட்டப் பிறகு, அடுத்த முறை ஞாபகமாய் என்னிடம் எந்த அபிப்பிராயத்தையும் கேட்க மாட்டார் என்று தோன்றியது.
ஒரு கவிதையில் ஆரம்பிப்பதும் முடிப்பதும் முக்கியம்.
மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு கவிதை ஒரு பக்கத்தில் ஒரு சில வரிகளுடன் நின்று விட வேண்டும். இரண்டு மூன்று பக்கங்கள் என்றால் படிப்பவர்களுக்கு அலுப்பு வந்து விடும்.
கவிதையை எழுதுபவரும் சரி, படிப்பவரும் சரி, சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. புரிந்து கொண்டவர்கள் யாரிடமும் அபிப்பிராயம் கேட்க மாட்டார்கள்.
நம்முடைய கவிதைகளுடன் மற்றவர்களின் கவிதைகளையும் வாசிக்க வேண்டும்.
நான் சென்னை கிளம்பி வரும்போது தினமும் ஒரு கவிதை எழுதுங்கள் என்று அறிவுரை கூறினேன். நான் வந்த இரண்டாவது நாள் நண்பரை காலையில் பார்த்தபோது, ஜெயமோகனின் வெண்முரசைப் படித்துவிட்டேன் என்று உற்சாகமாக சொன்னதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. நான் திரும்பவும் கவிதைகளைப் பற்றிப் பேசலாமென்றேன். ஓடியே போய்விட்டார். உழவன் எக்ஸ்பிரஸ் ஏறும்வரை கவிதையைப் பற்றி மூச்சை விடவில்லை.
நேற்று மாலை முனைவர் மு சிவச்சந்திரன் என்ற பேராசிரியர் தமிழ்ச் சுரங்கம் என்ற தலைப்பின் கீழ் செம்மொழித் தமிழ் வகுப்பு நடத்திக்கொண்டிருந்தார். 30 பேர்களுக்குமேல் வந்திருந்தார்கள். பொரும்பாலோர் கல்லூரி மாணவ, மாணவிகள். நான் வாங்கிய சில தலவரலாறு புத்தகங்கள் : 1. திருக்குடந்தை அருள்மிகு ஆதிகும்பேசுவரர் திருக்கோயில் 2. ஸ்ரீசார்ங்கபாணிசுவாமி திருக்கோயில் தலவரலாறு 3. அருள்மிகு நாகேசுவரசுவாமி திருக்கோயில் வானமுட்டி பெருமாள் கோயில் போனோம். பெருமாள் நின்றுகொண்டே கண்களை அகலவிரித்துப் பார்த்துக் கொண்டிருப்பது வித்தியாசமாக இருந்தது.
இரண்டு மூன்று நாட்கள் முகநூல் பக்கமே போகவில்லை.
வியாழக்கிழமை ஆகிய இன்று காலை சென்னை வந்து சேர்ந்து விட்டேன்.
Comments