அழகியசிங்கர்
பார்க்கும் புத்தர்
பேயோன்
நேற்று புத்தர் வீட்டிற்கு வந்திருந்தார்
தள்ளுவண்டிக் கடையில் வாங்கியவர்
பீங்கானில் செய்த முனிபுங்கவர்
தாடி வைத்தால் திருவள்ளூவர்
போட்டிசெல்லி முகபாவி
சுருட்டைமுடிக் காந்தார உருவி
தொங்கட்டானை இழந்த காது
மூக்கென்னவோ கிழக்காசியம்
நகைச்சுவைத் துணுக்கொன்று
சொல்லி முடித்த புன்னகை
மனக்கண்ணில் எதையோ பார்க்க
விரும்பி மூடிய கண்கள்
கண் திறந்தால் தெரிந்துவிடுமோ
என்று மூடிய கண்கள்
எனக்கு புத்தரைப் பிடிக்கும்
பார்த்தால் அமைதி தருகிறார்
என்றெண்ணவைக்கும் ஆளுமை
கிளர்ந்தெழும் அன்போடு
கண்வாங்காமல் பார்க்கிறேன் அவரை
பிறவியிலேயே மூடிய கண்களால்
அவரும் என்னைப் பார்க்கிறார்
ஆனால் பீங்கானுக்குள்ளிருந்தல்ல
எங்குமில்லா ஓர் இடத்திலிருந்து
அவர் பார்ப்பது எனக்குத் தெரியும்
நான் பார்ப்பது அவருக்குத் தெரியாது.
நன்றி : வாழ்வின் இயக்கத்தில் மனிதனின் தனிமை - பேயோன் - கவிதைகள் - பக்கங்கள் : 243 - விலை : 200 - வெளியீடு : சஹானா, 26/1 சிபிடபூள்யூடி குவார்ட்டர்ஸ், பெசண்ட் நகர், சென்னை 90
Comments