Skip to main content

தவிர்க்க வேண்டியவை

தவிர்க்க வேண்டியவை 


அழகியசிங்கர்




சிலசமயம் நம்மை அறியாமல் சில காகிதங்கள் கிடைக்கும். அந்தக் காகிதங்களில் எதாவது அச்சடித்திருக்கம்.  அது நமக்கு உபயோகமாக இருக்கும். அப்படி ஒரு அச்சடித்தக் காகிதம் கிடைத்தது.  சரவணா காபி அச்சடித்த 2016 காலண்டரின் பின் பக்கம் உள்ள வாசகம்தான் அது.  

சில தவறான செயல்கள், தவிர்க்க வேண்டியவை என்று எழுதியிருந்தது. அதைப் படித்தவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது.  இது எல்லோரும் தெரிந்துகொண்டால் நல்லது என்று நினைத்தேன்.  இதோ உங்களுக்கும் படிக்க அளிக்கிறேன்.  இதில் காணப்பட்ட வாசகங்களைக் குறித்து நீங்கள் கூற விரும்புவது என்ன என்பதையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.


1. இரவில் துணி துவைக்கக் கூடாது
2. இரவில் குப்பை வெளியில் கொட்டக்கூடாது
3. இரவில் மரத்தின் கீழ் தூங்கக்கூடாது
4. விரதம் இருக்கும் தினத்தில் அடிக்கடி நீர் அருந்தக்கூடாது.  பகலில்
தூங்கக் கூடாது.  வெற்றிலை பாக்குப் போடக் கூடாது.  உணவில் கத்திரிக்காய் சேர்க்கக் கூடாது.
5. முகத்தை இடது கையால் தொடக்கூடாது
6. ஓரடி நடவேன், ஈரடி கடவேன்,
   இருந்தும் உண்ணேன். படுத்து உறங்கேன்
இது பழம் பாடல்.  இதன் பொருள்.

தனது உடலின் நிழல் கால் அளவில் ஒரு அடியாக இருக்கும் நேரமாகிய உச்சிப் பொழுதில் வெளியே திரிய மாட்டேன்.  ஈரமான இடங்களில் நடக்க மாட்டேன்.  ஏற்கனவே சாப்பிட்டது வயிற்றில் இருக்க மேலும் உண்ண மாட்டேன்.  தூக்க வராமல் படுக்கைக்குச் செல்ல மாட்டேன்.

7. பயணம் செய்யும்போது அதிர்ச்சி இருந்தால் படிக்கக்கூடாது.
8. சளி பிடிக்கும்போது மூக்கை பலமாகச் சீந்தக் கூடாது.
9. தலைக்கு வைக்கும் தலையணை மீது உட்காரக்கூடாதுü
10. ஒரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது.
11. பிறர் பயன்படுத்திய ஆடை, செருப்பு முதலியவற்றை அணியக்கூடாது.
12. காலில் ஈரம் இருக்கும்பொழுது படுக்கக்கூடாது.  ஈரம் காய்ந்த பின் படுக்க வேண்டும்.
13. வடக்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு ஆகிய திசைளில் தலை வைத்துப் படுக்கக்கூடாது.

மேலே குறிப்பிட்ட கட்டளைகளில் சிலவற்றை நான் ஏற்றுக்கொள்கிறேன். சிலவற்றை ஏற்க முடியாது.  உதாரணமாக பகலில் தூங்கக் கூடாது என்று ஒரு கட்டளை.  உண்மையில் பகலில்தான் எனக்கு தூக்கம் வரும்.  சரியாக சாப்பிட்ட 12 அல்லது ஒரு மணி சுமாருக்கு கண் தானகவே தூக்கத்தைத் தந்து விடும்.  நான் ஒரு நாற்காலியில் அமர்ந்து என்னை அறியாமல் தூங்கி விடுவேன். அப்போது வருகிற அந்தத் தூக்கத்திற்கு இணை எதுவும் கிடையாது.  அதேபோல் ஓரே ஆடையுடன் உணவு உட்கொள்ளக்கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் என்பது தெரியவில்லை.  உணவில் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது என்று சொல்வது ஏன் என்று தெரியவில்லை. கத்திரிக்காய் போல ருசியான காய்கறி யாராலும் தவிர்க்க முடியாது. வெற்றிலைப் பாக்கும் போடக்கூடாது என்பதையும் நம்ப முடியவில்லை. வெற்றிலை சீரணமாக உதவும்.  அதை ஏன் போடக்கூடாது.

  நாமே முகத்தைத் தொடும் வழக்கம் அற்றவர்கள்.  முகத்தை அலம்பும்போதுதான் முகத்தைத் துடைப்போம்.  அப்போது வலது கை இடது கை என்பதை அறிய மாட்டோம்.


Comments