Skip to main content

நீங்களும் படிக்கலாம்...27


நீங்களும் படிக்கலாம்... 27


நிறைவு செய்ய முடியாத கற்பனை


அழகிய்சிங்கர்ரொம்பநாள் கழித்து லாசராவின் புத்தகம் ஒன்றை எடுத்துப் படித்துள்ளேன். நான் முன்பு அவர் எழுத்தைப் பற்றி மற்றவர்கள் சிலாகித்துக் கூறியதைக் கேட்டிருக்கிறேன்.  நானும் அவருடைய கட்டுரைகள் சிலவற்றைப் படித்திருக்கிறேன்.  அவருடைய சிறுகதைகளோ நாவல்களோ அவ்வளவாய்ப் படித்ததில்லை.  அதற்குக் காரணம் அலட்சியம் என்பதல்ல.  இன்னும் கேட்டால் அவருடைய புத்தகங்கள் என் அலமாரியில் இருந்தாலும், எடுத்துப் படிப்பதற்கான சந்தர்ப்பத்தை நான் உருவாக்கிக் கொள்ள வில்லை என்றுதான் தோன்றுகிறது.
அபிதா என்ற இந்த நாவல் 1970ல் வாசகர் வட்டம் மூலம் வெளிவந்தது.  இந்த நாவலை லாசரா மூன்று பெண்களை மையமாக வைத்து எழுதி உள்ளார்.  சாவித்திரி, சகுந்தலா, அபிதா என்ற மூன்று பெண்கள்தான் அவர்கள். 
இந்த நாவலை லாசரா கொண்டுபோகிற விதம் அபாரம்.  எல்லா இடங்களிலும் வார்த்தை ஜாலம். வார்த்தை ஜாலம் இல்லாவிட்டால் இந்த நாவலே எழுத முடியாதுபோல் தோன்றுகிறது. 
நாவல் எழுதிக்கொண்டு வருபவர் திடீர் திடீரென்று கவிதை வரிகள் எழுதி விடுகிறார்.  ஆனால் ஒரு நேர்பேச்சில் லாசராவிற்கு கவிதைகள் மீது ஆர்வம் இல்லை என்று நினைக்கிறேன்.
இதோ புத்தகத்தின் ஒரு பகுதியில் எழுதியிருப்பதை உங்களுக்கு அளிக்கிறேன்.

பித்தத்தின் உச்சம்
தேன் குடித்த நரி
புன்னகையாலேயே ஆக்கி
புன்னகையாலேயே ஆகி
புன்னகை மன்னன்.
ஆண்டவனும் ஒரு ஆணி மாண்டவ்யனே

லாசரா வெகு சுலபமாய் வார்த்தைகளை வைத்து விளையாடிக்கொண்டே பலவற்றைச் சொல்லிக்கொண்டே போகிறார். சாவித்திரி என்ற பெண் வசதி படைத்தவள்.  அவள் ஒரு ஏழையை அல்லது கிட்டத்தட்ட ஒரு அனாதையை திருமணம் செய்துகொள்கிறாள்.  வாழ்க்கையில் அதிர்ஷ்டம் என்பது ஒரு சிலருக்குத்தான் கிட்டும்.  அந்த அதிர்ஷ்டம் இந்த நாவலின் வரும் கதாநாயகனுக்குக் கிடைக்கிறது.  பட்டினியில் சத்திரத்துத் திண்ணையில் படுத்துக் கிடந்தவனுக்கு அடிக்கும் அதிர்ஷ்டத்தில் ஒரு பெண்ணும் கிடைக்கிறாள். அவளை ஏற்றுக்கொண்டவனுக்கு ஒருவித சந்தேகப் புத்தி.  அவன் இப்படி சொல்கிறான். 
ராஜா மணந்த பிச்சைக்காரி ராணியாகிவிடலாம்
ஆனால் ராணி மணந்த ஏழை, ராஜா இல்லை, என்றும் அவன் பிரஜைதான்.
அவனுக்கும் அவன் மனைவி சாவித்திரிக்கும் இருக்கும் முரண்பாடை எளிதில் கொண்டு வருகிறார் லாசரா.  அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.  அவன் இணக்கமாக வாழ வேண்டுமென்று நினைத்த கரடிமலையில் இருந்த சகுந்தலை அவன் நினைவுக்கு வருகிறாள்.  
அடிக்கடி வியாபார நிமித்தமாக அவன் வெளியூர் செல்பவன், அவன் மனைவி சாவித்திரியை அவன் எங்கும் அழைத்துப் போவதில்லை.  முரண்பாடுடன் அவர்கள் வாழ்க்கை தொடராமல் இல்லை.  அதன் தொடர்ச்சியாக அவர்கள் இருவர்கள்தான் இருக்கிறார்கள்.  அவர்கள் வாரிசாக யாரும் உருவாக இல்லை.  இந்த அலுப்பான வாழ்க்கையில் அவன் அவளை தன் இருந்த கரடிமலை என்ற ஊருக்கு அழைத்துக்கொண்டு போகிறான்.  
சாவித்திரியுடன் அவன் அந்த ஊருக்குப் போனாலும், அவனுக்கு சகுந்தலையின் ஞாபகமே வருகிறது.  இதோ ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் :
....குன்றையே அணைப்பதுபோல், அந்த இடத்தில் ரயில் லாடமாய் ஒடிந்தது.  எத்தனை நாள் இந்த வளைவை நானும் சகுந்தலையும் நின்று வேடிக்கை பார்த்திருப்போம்.  ரயில் கடந்த சூட்டில் துண்டித்து விழுந்து கிடக்கும் பாம்பின் துடிப்புப் போல், தண்டவாளத்துக்கு மூச்சு இறைப்பதுபோல் எங்களுக்கு ஒரு ப்ரமை....
என்ன அந்நியாயம் பக்கத்தில் மனைவி இருக்கும்போது பால்ய காலத்தில் பழகிய சகுந்தலையை ஞாபகம் வைத்துக்கொண்டு வருகிறார்.  அவர் கரடிமலையை விட்டுப் பிரியும்போது, வயது முதிராத ஒரு ஆணும் பெண்ணும் பேசுகிற பேச் இருந்தாலும், வெளிப்படுத்த முடியாத காதல் அதில் அடிநாதமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
சகுந்தலையைப் பார்த்து கோயில் மலை அடிவாரத்தில் நின்றிருக்கும்போது, அவன் ஒரு கேள்வியைக் கேட்கிறான் :
"சக்கு, நீ என்னோடு வந்துடறையா?" 
இந்தக் கேள்வியில் எல்லாமே முடிந்து விடுகிறது.  அந்த இடத்தைவிட்டுப் போகிற நிர்ப்பந்தம், பின் ஒரு சத்திரத்தில் அனாதையாகக் கிடந்தவனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம், அதன் மூலம் அவனுக்குக் கிடைத்த சாவித்திரி.  லாசரா இந்தக் கதையை விவரித்துக்கொண்டு போனாலும் சாவித்திரியிடம் காணததை சகுந்தலையிடம் என்ன கண்டார் என்ற கேள்வி மனதில் ஓடாமல் இல்லை.  
ஆனால் இந்தக் கதையை அவர் எடுத்துக்கொண்டு போகும் விதம். அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலையைப் பார்க்கிறமாதிரி இக் கதையின் நாயகனுக்குத் தெரிகிறது.  சக்குவா அபிதாவா என்ற குழப்பம் ஏற்படுகிறது.  சகுந்தலை யாரை நினைத்துக்கொண்டு அழுதகொண்டு இருக்கிறாள்.  அவள் மரணம் ஏன் இப்படி கோயிலில் உள்ள சிவலிங்கத்தை அணைத்தபடி நடக்கிறது.  இப்படிப் பல புதிர்கள் இந்த நாவலில்.
அபிதாவைப் பார்க்கும்போது சகுந்தலாவைப் பார்க்கும் உணர்வு ஏற்பட்டு, அவர் உடலெல்லாம் துடியாய் துடிக்கிறது.  ஆனால் இது தகாத உறவாகும் என்றும் தோன்றுகிறது.  இந்த நாவலைப் படிக்கும்போது எனக்கு நபக்கோவின் லோலிதா என்ற நாவல் ஞாபகம் வருகிறது.   
ஒரு இடத்தில் 

'நீ என்னைக் கைவிட்ட கதையை, நானே உன்னிடம் சொல்லத்தான், அபிதாவாய்த் திரும்பி வந்திருக்கிறேன்.  என்னைக் கொன்னாச்சு.  அவளை என்ன செய்யப் போகிறாய்?  என்னைப் பழி வாங்கிக்கத்தான் நான் அபிதா.ýý என்று வருகிறது.  இது விபரீத உணர்வு நிலையும் நம்ப முடியாத கற்பனையாகத் தோன்றுகிறது. ஆனால் எப்போதும் அபிதாவைப் பார்க்கும்போது காம உணர்வோடுதான் இந்தப் பாத்திரத்தை உருவாக்கி உள்ளார்.  
இந்நாவலின் முடிவுதான் ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.  மரணம் ஒரு தீர்வாக இருக்குமா என்பது தெரியவில்லை. ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. நிறைவு செய்ய முடியாத கற்பனை என்று சொல்லலாமா?


அபிதா - லாசரா - நாவல் - பக்கங்கள் : 104 - வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ், கே கே நகர் மேற்கு, சென்னை 78 - விலை: 80 - தொலைபேசி எண் : 044 65157525 

  

Comments

Popular posts from this blog