அழகியசிங்கர்
இந்த முறை விளக்குப் பரிசு மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன் அவர்களுக்குக் கிடைத்துள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பாளருக்குக் கிடைத்த கௌரவம். தமிழில் மொழிபெயர்ப்பாளர்களின் பங்கு முக்கியமானதாக கருதுகிறேன். பல அரிய படைப்புகள் மொழிபெயர்ப்பாளர்கள் மூலம்தான் நமக்குக் கிடைத்துள்ளன. அதேபோல் தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், மற்ற மொழிகளுக்கும் செல்லாமல் இல்லை. ஆனால் மிகக் குறைவான படைப்புகளே அவ்வாறு மற்ற மொழிகளுக்குச் சென்றுள்ளன. ஒரு மொழி பெயர்ப்பாளரின் விருப்பத்திற்குத்தான் ஒரு படைப்பு தேர்ந்தெடுக்கப்படுகிறது. அந்த மொழிபெயர்ப்பாளர் விரும்பவில்லை என்றால் மொழிபெயர்ப்பு நிகழ வாய்ப்பு இல்லை.
ஒரு திறமையான மொழிபெயர்ப்பாளரை எல்லோரும் விரும்புவார்கள். கல்யாணராமன் அப்படிப்பட்ட ஒருவர். எனக்குத் தெரிந்து கே எஸ் சுப்பிரமணியன் என்ற மொழிபெயர்ப்பாளர் உள்ளார். இவர் ஜெயகாந்தன் நாவல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் பல படைப்புகளைக் கொண்டு வந்துள்ளார். ஆனால் இவரும் அவருக்குப் பிடித்த படைப்பாளிகளைத்தான் மொழிபெயர்ப்பார்.
ஆனால் தமிழில் பல படைப்பாளிகளின் படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு எல்லோருக்கும் எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் மொழிபெயர்ப்பாளரின் கருணை இருந்தால்தான் இதெல்லாம் நடக்கும்.
கல்யாணராமன் மொழிபெயர்த்த ஒரு எழுத்தாளரின் புத்தகங்களை நான் தமிழிலேயே படிக்கவில்லை. ஒரு எழுத்தாளருக்கு ஒரு நல்ல மொழிபெயர்ப்பளர் கிடைத்துவிட்டால், அது எழுத்தாளருக்குக் கிடைத்த அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும்.
இந்த இடத்தில் வே ஸ்ரீராம் அவர்களைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். பிரான்சு மொழியிலிருந்து அல்பெர் கம்யூவின் அந்நியன் என்ற நாவலை அவர் மொழி பெயர்த்துள்ளார். அவர் இன்னும் கூட பல புத்தகங்களைக் கொண்டு வந்துள்ளார். அனால் அவர் தமிழ் மொழியிலிருந்து எந்தப் படைப்பையாவது பிரான்சு மொழிக்கு மொழி பெயர்த்துள்ளாரா என்பது அடியேனுக்குத் தெரியாது.
இந்த மொழிபெயர்ப்பாளர்கள் பரிதாபத்துக்குரியவர்கள். யாரும் இவர்களை படைப்பாளிகளாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அதேசமயம் படைப்பாளர்களுக்கும் தங்கள் படைப்புகளை வெளிக்கொண்டு போக நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் கிடைப்பார்களா என்ற ஏக்கம் இருந்துகொண்டே இருக்கும். அந்தோன் சேகவ்வின் சிறுகதைகளும் குறுநாவல்களும் முன்னேற்றப் பதிப்பகம் மூலம் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது. மொழி பெயர்ப்பாளர் : ரா கிருஷ்ணையா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1975ஆம் ஆண்டு வந்துள்ளது இந்தப் புத்தகம். அவர் இப்போது எங்கு உள்ளார் என்பது கூட தெரியாது.
கல்யாணராமனுக்கு பரிசு கிடைத்ததுபோல் இன்னும் பலருக்கும் விளக்கு பரிசு கிடைக்க வேண்டும். இந்த விழாவில் மூத்த எழுத்தாளர் அசோகமித்திரன் கையால் விளக்கு விருதை கல்யாணராமன் பெற்றுக்கொண்டார். இந்திரா பார்த்தசராதி கூட இந்த விழாவில் கலந்துகொண்டார். என்ன வேடிக்கை என்றால், இவர்கள் யாரும் விளக்கு விருது இன்னும் பெறாத மூத்த எழுத்தாளர்கள்.
Comments