Skip to main content

இரண்டு மாதம் கழித்துத் திரும்பி விட்டேன்

 அழகியசிங்கர்




Add caption



எங்கள் அடுக்ககத்தில் இரண்டாவது மாடியில் குடியிருப்போர் ஒருவர் வீட்டில் 3 நபர்களுக்குக் கொரானா தொற்று. . இது ஆகஸ்ட் மாதம் நடந்தது.  நானும் மனைவியும் ஆகஸ்ட் 15ஆம் தேதி கிளம்பி மடிப்பாக்கத்திலுள்ள என் பெண் வீட்டிற்குச் சென்றோம்.

மேல் வீட்டில் தொற்று சரியாய் போய்  மருத்துவமனையிலிருந்து திரும்பி விட்டார்கள்.  ஆனால் நாங்கள் இன்று மதியம்தான் (11.10.2020) பெண் வீட்டிலிருந்து திரும்பிவிட்டோம். எப்படித்தான் இரண்டு மாதம் போயிற்று என்று தெரியவில்லை.

கிட்டத்தட்ட 2 மாதங்கள் இருந்து விட்டோம்.  2019ஆம் ஆண்டு அப்படி அமெரிக்காவில் உள்ள பையன் வீட்டிலிருந்தேன். பொதுவாக நான் எங்குப் போனாலும் தங்குவது எனக்குக் கஷ்டமாக இருக்கும். என் வீட்டில் இருப்பதுபோல் என்னால் உணர முடியாது.

எப்படிப் பெண் வீட்டில் இரண்டு மாதம் தாக்குப் பிடித்தேன் என்று தெரியவில்லை.  பெண் வீடு தனி வீடு.  காலையில் மொட்டை மாடியில் நடை பயிற்சி செய்வேன்.  என் வீட்டில் மனைவியுடன் இருக்கும்போது சற்று தாமதமாகத்தான் சாப்பிடுவேன்.  கிட்டத்தட்ட 12 மணி ஆகிவிடும்.  ஆனால் பெண் வீட்டில் 10.30 மணிக்கே சாப்பிடுவேன்.

நான் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி போனவுடன் நெருங்கிய உறவினர் ஒருவர் திடீரென்று இறந்து விட்டார்.  அவருக்கு தொற்று இல்லை.  ஹார்ட் அட்டாக்.  சிலநாட்கள் அதிர்ச்சியாக இருந்தது.  நம்ப முடியவில்லை. 

ஆனால் பெண் வீட்டில் தீர்மானமாக ஒரு பெரியப் புத்தகத்தை எடுத்துப் படித்துவிட்டேன்.  தஸ்தயேவ்ஸ்கி யின் கரமாஸவ் சகோதரர்கள் என்ற புத்தகம் அரும்பு சுப்ரமணியன் ருஷ்ய மொழியிலிருந்து மொழி பெயர்த்தது.  காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது.  இந்தப் புத்தகத்தை 28.06.2014ல் வாங்கியது.  அப்போது 180 பக்கங்கள் வரை படித்துவிட்டுக் கைவிட்டுவிட்டேன். இப்போது வீராப்பாக முழுவதும் படித்து விட்டேன்.  இந்நாவல்களில் பெயர்கள் என்னைக் குழப்பாமலிருப்பதில்லை.  தன் தந்தையைக் கொலையே செய்யாத திமித்ரி கொலை தண்டனைக்கு ஆளாகிறான்.  யாரும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

என்னைப் பொறுத்தவரை மொழி பெயர்ப்பு சரியாகச் செய்திருந்தார் அரும்பு.  ஆனால் சத்திரத்தில் சந்தித்துக் கொள்வதாக எழுதப்பட்டிருந்தது.  இந்த நாவலைப் படித்துக் காட்டியபோது என் நண்பர் சத்திரம் என்பது சரியாக இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

குறைந்தபட்சம் நான் பத்து கட்டுரைகளைத் திண்ணைக்கு அனுப்பி பிரசுரமானது.  என் பெண் வீட்டில் புதியதாக 15 கவிதைகள் எழுதினேன்.  ஒரு கவிதையை ஒரு போட்டிக்கு அனுப்பி உள்ளேன்.  அதேபோல் சிறுகதை ஒன்றையும் எழுதி போட்டிக்கு அனுப்பி உள்ளேன். தீபாவளி மலர் ஒன்றிற்குக் கட்டுரையும்.

என் நீண்டகால அலுவலக நண்பர் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் கோவுட் பாதிப்பால் இறந்து போனது அதிர்ச்சியாக இருந்தது.    நான் வங்கியில் சேர்ந்ததிருந்து எனக்கு நண்பர்.  தீவிர வாசகர்.  என் புத்தகங்களை வாங்கி விரும்பிப் படிப்வர்.  பதவி மூப்பு அடைந்தவுடன் கோவில்பட்டியில் செட்டில் ஆக நினைத்தார். அதேபோல் எஸ்.பி.பி என்ற பாடகர். சற்றும் எதிர்பாராத தருணத்தில் கி.அ.சச்திதானந்தம் என்ற இலக்கிய நண்பரின் மரணம்.   எல்லாம் கோவிட் என்ற விஷக் கிருமியால்  அதேபோல் தேவகோட்டை வா மூர்த்தி புற்றுநோயால் இறந்து விட்டார். நான் என் பெண் வீட்டில் இருந்ததால் இந்த மரணங்களும் மனதில் ஆழமாய் பதிந்துவிட்டன.  

முக்கியமாக 114வது நவீன விருட்சம் இதழ் அச்சில் கொண்டு வந்து விட்டேன்.

  
இந்த இதழ் தாயரிப்பு விலை சற்று அதிகம்தான்.  மிகக் குறைவாக அச்சிட்டு சந்தாதாரர்களுக்குத்  தபாலில்   அனுப்பி விட்டேன். மடிப்பாக்கத்தில் தபால் அலுவலகம் ஒரு கேவலமான இடத்திலிருந்தது.  ஆனால் தபாலில் போட்டவுடன் அடுத்தநாள்  போய்ச் சேர்ந்து விட்டது.  தபால் அலுவலகத்தில் ஒரு வயதான பெண்மணி பொறுமையாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார்.

Comments