Skip to main content

துளிகள் 151 - விருட்சம சூம் கவிதை வாசிக்கும் கூட்டத்தில் வாசித்த கவிதை

அழகியசிங்கர்





நேற்று நடந்த சூம் கூட்டத்தில் நானும் ஒரு கவிதை வாசித்தேன். உண்மையில் வாசிக்க நினைத்தது சீப்பு என்ற கவிதையை. ஆனால் வேறு இருவர் தலையைப் பற்றி கவிதைகள் வாசித்ததால் அழகி என்ற கவிதையை வாசித்தேன்.

என் தொகுப்பில் இது 152வது கவிதை. 2003ஆம் ஆண்டில் இக் கவிதையை எழுதினேன். 'அழகியசிங்கர கவிதைகள்' என்ற தொகுப்பில் நான் 1975முதல் 2018ஆம் ஆண்டு வரை தொகுத்து கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளேன்.
முகநூல் நண்பர்களுக்கு இந்தக் கவிதையை வாசிக்க அளிக்கிறேன்.


152. அழகி

அடுக்குமாடி
கட்டிடத்திலிருந்து
வெளியில் வந்த
அழகி அவள்
ஒயிலாய்
படி இறங்க

எதிர் அடுக்குமாடி
இளைஞன்
அவளையே
பார்த்து வாய்பிளந்தான்

அழகி
அவனைப் பார்த்து
கையசைத்தாள்
திகைத்த இளைஞன்
உற்சாகத்துடன்
காற்றில் ஈந்தான் முத்தங்களை

அழகி
நாணுவதுபோல்
தலைகுனிந்து
சிரித்தபடி சென்றாள்

ஒவ்வொரு நாளும்
இளைஞன் காத்திருக்க
அழகியோ
காணவில்லை

இலைகளை உதிர்த்தவண்ணம்
மரமொன்று
எள்ளி நகையாடியது

Comments