கவிஞர் வைதீஸ்வரன் பிறந்த தினம் 22ஆம் தேதி செப்டம்பர் மாதம். இன்று நம்முடன் இருப்பவர் எழுத்து காலத்திலிருந்து கவிதை எழுதி வரும் வைதீஸ்வரன். அவர் ஒரு ஓவியர், ஒரு சிறுகதை ஆசிரியர், ஒரு கட்டுரையாளர். அவருடைய எதாவது ஒரு கவிதையை எடுத்து வாசித்து என் ரசனையைத் தெரியப்படுத்தலாமென்று நினைக்கிறேன். நான் எடுத்துக்கொண்ட கவிதை 'உபதேசம் நமக்கு' என்ற கவிதை. இந்தக் கவிதையைப் படிக்கும்போது எளிதாக நமக்குப் புரிந்து விடுகிறது. வைதீஸ்வரனின் கவிதையில் எந்தக் குழப்பமும் இல்லை. பக்கத்து வீட்டுக்காரனுடன் பகைத்துக் கொள்ளாதே என்கிறது கவிதை. அதுவும் பல் தேய்த்துக் கொண்டிருக்கும்போது வெள்ளையாகச் சிரித்துவிடு தொல்லை இல்லை. ஏன் இப்படிச் சொல்கிறது? கவிதை மூலம் நமக்கு வைதீஸ்வரன் படிப்பவர்களுக்கு அறிவுரை கூற வருகிறாரா? ஆமாம் அப்படித்தான் தோன்றுகிறது. நம்மிடம் இல்லாத ஒன்று கட்டாயம் பக்கத்து வீட்டுக்காரனிடம் இருக்கும். அவனுடைய தயவு நமக்கு வேண்டியிருக்கும். இந்தக் கவிதையை ஆராயும்போது, மழை பெய்யும்போது நம்மிடம் குடை தட்டுப்படாமல் இருக்கும்போது பக்கத்து வீட்டுக்காரனிடம் குடை இருக்கும். நம் வீட்டுச் செடியை ஆடு கடிக்கும்போது அந்த ஆட்டைத் துரத்த அவனிடம் கம்பு இருக்கும். அவன் வீட்டில் குழந்தைகள் இருக்கிறதா என்பதைக் கவிதை சொல்லவில்லை, ஆனால் நம் வீட்டுக் குழந்தைகள் ஓடியாட அவன் வீட்டுத் தாழ்வாரம் நீளமாயிருக்கும் என்கிறது கவிதை. அதற்காகவாவது அவனுடன் சண்டை போடாதே என்கிறது கவிதை. அவனை அனுசரித்துப் போக இன்னும் ஒன்று சொல்கிறது கவிதை. தினந்தினம் வேலியோரம் சற்றே கால் சொறிந்து நில்லு என்று. அடுத்தது அவன் பாட்டி செத்தால் உனக்குப் போன துக்கம் என்கிறது. ஊருக்குள் நடக்கும் திருட்டு, கற்பழிப்பு, உணவுத் தட்டு, கருப்பு மார்க்கெட், லாட்டரிச் சீட்டு, எவனுக்கோ பிறந்துவிட்ட இரண்டு தலைப் பிள்ளை, இன்னும் கிரஸின் விலை, காக்காய் விலை, கழுதை விலை எல்லா நிலையிலும் பந்தமுடன் பல்திறந்து பேசிவிட்டு வாயைக் கொப்பளித்து வந்துவிடச் சொல்கிறது. அப்படி இருப்பது தொந்தரவாக இருக்கிறது. இது எப்படிப்பட்ட உபதேசம். பக்கத்து வீட்டுக்காரனுடன் மேம் போக்காகப் பழகச் சொல்கிறார். எப்போதும் பக்கத்து வீட்டுக்காரன் உதவி செய்வான். உன் உதவி அவனுக்குத் தேவையில்லை. அவன் உதவிதான் உன்க்கு எப்போதும் தேவை. கவிதையில் உபதேசம் நமக்கு என்று கூறப்படும் அர்த்தம் நமக்கு நன்கு விளங்கி விடுகிறது. பாருங்கள் என்றோ நின்றுபோகும் நம் சுவர்க் கடிகாரம் கூட அவன் வீட்டில் அடிக்கும் மணியை ஒட்டுக் கேட்குமாம். இந்தக் கவிதையின் கிண்டல் இறுதி வரியில்தான் வருகிறது. ஏசுவும் புத்தனும் எதற்குச் சொன்னார்கள்? அடுத்தவனை நேசி என்று. அவனால் கிடைக்கும் போகும் உபகாரங்கள் ஆயிரமாம். தவறிப்போய் கூட நீயும் எதாவது அவனுக்கு உதவி செய் என்று இந்தக் கவிதை சொல்லவில்லை. மேல் உதடு அசையப் பக்கத்து வீட்டுக்காரனுடன் உறவு வைத்துக்கொள்பவன் யார்? அவன் ஒரு நகரவாசி. இறுதியில் எல்லா நகர வாசிகளும் அப்படித்தான் இருப்பார்கள் என்ற முடிவுக்கு வருகிறார் கவிஞர். உறவு என்பது போலித்தனமாக இருப்பதை இந்தக் கவிதை நன்றாகத் தோலுரித்துக் காட்டுகிறது. நகரவாசியில் இருப்பவர்கள் பெரும்பாலோர் போலித்தனமான அன்புடன் இருப்பார்கள் என்கிறார் கவிஞர். கவிதையை ஆரம்பிக்கும்போது, அடுத்த வீட்டுக்காரனிடம் அன்பாய் இருந்து தொலைத்துவிடு என்கிறார். அன்பு என்பது தானாகவே உருவாக வேண்டும். ஆனால் இங்குப் போலியாக அன்பாக இருக்கும்படி வற்புறுத்துகிறார். ஆனால் கவிஞர் சொல்வது ஓரளவு உண்மை. ஒவ்வொருவரும் இன்னொருவரிடம் போலியாகத்தான் அன்பாக இருப்பார்கள். அல்லது இருக்க வேண்டும். அதுவும் அப்படி அன்பு காட்டுபவர்கள் நகரவாசி என்கிறார். ஏன் நகரவாசி என்கிறார்? நகரவாசிதான் அதிகமாகக் கெட்டுப் போகிறான். உண்மையாக அன்பு செலுத்தாமல் நடிக்கிறான். இவ்வளவு சூட்சுமம் உள்ளது இந்தக் கவிதையில். இப்படிப்பட்ட சிந்தனைகள் நவீன கவிதையில்தான் சாத்தியம்.
(அக்டோபர் 4 2020, திண்ணையில் வெளிவந்த கட்டுரை)
உபதேசம் நமக்கு
அடுத்த வீட்டுக்காரனிடம்
இருந்து தொலைத்துவிடு
வம்பில்லை .
பல்தேய்த்துக் கொண்டிருக்கும்போது
பக்கத்து வீட்டுக்காரனிடம்
வள்ளையாக சிரித்துவிடு.
தொல்லை யில்லை.
என்றாவது உன் வீட்டில்
மழை பெய்யும்போது
அவன் வீட்டில்
குடை இருக்கும்.
என்றாவது உன் செடியை
ஆடு கடிக்கும்போது,
அவன் கையில் ஆளுயரக்
கம்பு இருக்கும்.
உன் வீட்டுக் குழந்தைகள்
ஓடியாட
அவன் வீட்டுத் தாழ்வாரம்
நீளமாயிருக்கும்.
எதற்கும்
ஒருவிதமான தவமாக,
தினந்தினம்
வேலியோரம் சற்றே
கால்சொறிந்து நில்லு.
உளுந்தூரில் அவன் பாட்டி செத்ததால்,
உனக்குப் போன தூக்கம்,
ஊருக்குள் திருட்டு, கற்பழிப்பு
உணவுத்தட்டு, கருப்பு மார்க்கட்டு,
லாட்டரிச் சீட்டு,
எவனுக்கோ பிறந்துவிட்ட
இரண்டு தலைப் பிள்ளை ,
இன்னும்
கிரஸின் விலை, ஊசி விலை
கழுதை விலை, காக்காய் விலை
எல்லா நிலையும், பந்தமுடன்
பல்திறந்து பேசிவிட்டு
வாய்கொப்பளித்து வந்துவிடு.
தொந்தரவில்லை.
என்றாவது நின்றுபோகும்
உன் சுவர் கடிகாரம்கூட
அவன் வீட்டில் அடிக்கும் மணியை
ஒட்டுக் கேட்கட்டும்.
ஏசுவும் புத்தனும்
எதற்குச் சொன்னான் பின்னே,
அடுத்தவனை நேசி என்று.
அவனால் உபகாரம்
ஆயிரங்கள் உனக்கு இருக்கும்
அதை மட்டும் யோசி
நீ ஒரு நகரவாசி.
Comments