அழகியசிங்கர்
இது என் 23வது கதை. இந்தக் கதை வாசிக்கும்போது இரண்டு நிமிடங்களுக்கு குறைவாக முடிந்து விட்டது.
கிட்ட நெருங்கிப் பேசாதே...
இன்று வீட்டைவிட்டு கடைக்குப் போவதென்று முடிவு செய்தேன். ஒரு சவர பிளேடு குச்சி வேண்டும். நான் கடைக்குப் போய் இரண்டு பால் பாக்கெட்டுகளையும், இஞ்சி, பச்சை மிளகாவும் வாங்கச் சென்றேன்.
இந்தச் செருப்பை
மாட்டிக்கொண்டு போவது எனக்கு அவ்வளவு சுலபமாகத் தெரியவில்லை. சிலசமயம்
கடுப்பாகக் கூட இருக்கிறது. தெரு முனைக்குத்தான் போயிருந்தேன். ஒரு
பெரியவர் எதிர்ப்பட்டார். என்னையே பார்த்தபடியே நின்றுவிட்டார். யாரையோ தேடுகிறாரோ என்று நினைத்தேன். ஆனால் அது மாதிரியும் தெரியவில்லை.
ஏன் நின்று என்னையே முறைத்துப் பார்க்கிறாரென்று எனக்குத் தோன்றியது.
அவருக்கு எதாவது பணம் தேவையா? உண்மையில் அவருக்குப் பணம் தேவையாக
இருந்தாலும் என்னிடம் கொடுக்க முடியாது. எல்லாம் நூறு ரூபாய்
நோட்டுகளாகவும் இருநூறு ரூபாய் நோட்டாகவும் வைத்துக் கொண்டிருந்தேன்.
"என்னிடம் சில்லறை இல்லை," என்றேன் அவரைப் பார்த்து. வந்தது வினை. அவர் என்னிடம் நேராக வந்தார்.
"உங்களிடம் பைசா கேட்டேனா," என்றார்.
"இல்லை," என்றேன்.
"பின் ஏன் நீங்கள் பிச்சைக்காரன் போல் என்னை நினைத்துக் கொண்டிருந்தீர்கள்."
"மன்னிக்கவும். தவறாக நினைத்து விட்டேன்."
"நான் தள்ளாமையால் நிற்கிறேன்."
"நினைத்தது தப்பு. நீங்கள் முகக் கவசம் போடாமலிருக்கிறீர்கள்."
"என் பையில் இருக்கிறது அது."
"மன்னித்து விடுங்கள். நான் போகிறேன்," என்று கூறியபடியே நடக்க ஆரம்பித்தேன்.
கொஞ்ச தூரம் நடந்தவுடன், ஒரு கடையின் வாசலில் நிற்பவர் என்னை உற்றுப் பார்த்தார். ஏன் அப்படிப் பார்க்கிறார் என்று யோசித்தேன்.
"தலை முடி வெட்டிக்கொள்ள வேண்டாமா?" என்றார்.
"வேண்டாம்," என்று கூறியபடியே நடந்தேன். அந்த வியாபாரிக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். அவன் வைத்திருக்கும் கடை. ஒரு சிறிய பெட்டிக் கடை மாதிரி இருந்தது. உண்மையில் தலை முடியை வெட்டிக் கொள்ளும்படி தான் வளர்ந்திருந்தது. மார்ச்சு மாதத்திலிருந்து நான் தலை முடி வெட்டவில்லை. இரண்டு நாட்கள் முன்னால் என்தலை முடியை என் மனைவிதான் வெட்டிவிட்டாள்.
நான் திரும்பவும் கடையில் எல்லாம் வாங்கிக்கொண்டு வந்து கொண்டிருந்தேன்.
முடிவெட்டிக்கொள்ளும் கடை முன் வேற யாரோ நின்று கொண்டிருந்தான்.
நான் பேசாமல் போயிருக்கலாம். ஆனால் அவனைப் பார்த்து, "ஏன் இப்போதெல்லாம்
முடி வெட்டிக்கொள்ள யாரும் வருவதில்லையா?" என்று கேட்டேன்.
ஆனால் அவன் பதிலே சொல்லவில்லை.
Comments