Skip to main content

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - தொகுதி - 2 - 135

அழகியசிங்கர் 




புத்தரின் படுகொலை



எம்.ஏ.நுஃமான்





நேற்று என் கனவில்
புத்தர் பெருமான் சுடப்பட்டிறந்தார். 
சிவில் உடை அணித்த 
அரச காவலர் அவரைக் கொன்றனர். 
யாழ் நூலகத்தின் படிக்கட்டருகே 
அவரது சடலம் குருதியில் கிடந்தது. 

இரவில் இருளில் 
அமைச்சர்கள் வந்தனர்
 'எங்கள் பட்டியலில் இவர்பெயர் இல்லை
 பின் ஏன் கொன்றீர்?'
 என்று சினந்தனர்.

 'இல்லை ஐயா, 
தவறுகள் எதுவும் நிகழவே இல்லை 
இவரைச் சுடாமல்
 ஓர் ஈயினைக் கூடச் 
சுடமுடியாது போயிற்று எம்மால் 
ஆகையினால். 
என்றனர் அவர்கள்.
'சரி சரி
 உடனே மறையுங்கள் பிணத்தை'
 என்று கூறி அமைச்சர்கள் மறைந்தனர். 

சிவில் உடையாளர் 
பிணத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
தொண்ணூறாயிரம் புத்தகங்களினால் 
புத்தரின் மேனியை மூடி மறைத்தனர் 
*சிகாலோகவாத சூத்திரத்தினைக் 
கொழுத்தி எரிந்தனர்.
புத்தரின் சடலம் அஸ்தியானது 
*தம்ம பதமும்தான் சாம்பரானது.

(சிகாலோகவாத சூத்திரம், தம்மபதம் ஆகியன பௌத்தமத அறநூல்கள்.)


நன்றி : மழை நாட்கள் வரும் - எம்.ஏ.நுஃமான் - பக்கங்கள் : 80 - வெளியீடு : அன்னம் வெளியான ஆண்டு : 1983 - விலை : ரூ.5  



பின் குறிப்பு : மனதுக்குப் பிடித்த கவிதைகள் என்ற தலைப்பில் 100 கவிதைகள் அடங்கிய தொகுதியை ஏற்கனவே கொண்டு வந்துள்ளேன். இது இரண்டாவது தொகுதி.  கவிதைத் தொகுதிகளிலிருந்து மட்டும் கவிதைகள் எடுக்கப்படுகின்றன.

Comments