Skip to main content

துளி - 113 - அசிக்காடு வீரனும், சொகுசு விடுதிகளும்

அழகியசிங்கர்




சமீபத்தில் நான் அசிக்காடு சென்றேன்.  மயிலாடுதுறையிலிருந்து அசிக்காடு என்ற கிராமம் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது.  அசிக்காடில் உள்ள புராதன சிவன் கோயிலுக்கும், பெருமாள் கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடத்தும் முகாந்தரமாக ஒரு யாகம் நடத்தினார்கள். எல்லோரும் பல இடங்களிலிருந்து வந்திருந்து அசிக்காடில் குமிழியிருந்தோம்.  நல்ல வெயில்.  

முதல் நாளில் ருத்திர யாகம். அசிக்காடு வீரன் கோயிலில்.  காலை ஏழு மணியிலிருந்து மதியம் வரை நீண்டிருந்தது.  காலையில் டிபன் சாப்பிட்டு விட்டு உட்கார்ந்திருந்தோம்.  எனக்கு யாகத்தில் எழும் புகை கண்ணிற்கு ஆகாது.  அதனால் தள்ளிப்போய் உட்கார்ந்திருந்தேன். 

பல ஆண்டுகளுக்கு முன்னால் அசிக்காடு கிராமம் வருவதென்றால் உற்சாகமாக இருக்கும்.  முன்பு அங்கிருந்து பலர் வேற இடங்களுக்குக் குடிபெயர்ந்து போய்விட்டார்கள்.  அக்கிரகாரத் தெருவிஙூருந்த பல வீடுகளை விற்று விட்டுப் போய்விட்டார்கள். தெருவில் ஈ காக்காய் கிடையாது.  இரண்டு குளங்கள் உண்டு. ஒன்று மேல குளம்.  இன்னொன்று கீழ குளம்.  மேல குளத்தில் தண்ணீர் வற்றி விட்டது.  

அந்த மேல குளத்திலிருந்து மண்ணை லாரி லாரியாக வாரி எடுத்துக்கொண்டு போய் விற்றுவிட்டார்கள்.  விவசாய கிராமம் என்றாலும், சொல்லும்படி விளைச்சல் இல்லை.  

எங்கள் பாட்டனாரின் நிலம் நீச்சு எல்லாம் விற்றாகி விட்டது.  வீரன் கோயில்தான் உண்டு.  அங்கிருக்கும் சிவன் கோயிலும், பெருமாள் கோயிலும்தான் உண்டு.

ருத்ர யாகம் நடந்து கொண்டிருக்கும்போது அங்கு வசிக்கும் ஏழைகள் எங்களைச் சுற்றி உட்கார்ந்திருந்தார்கள்.  அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது ஒரு வயதானவள் அழ ஆரம்பித்தாள்.
“ பிறந்ததிலிருந்து இங்கதான் சார் இருக்கோம்.  இப்ப சாப்பிட ஒண்ணும் கிடக்கலை சார்.. எங்க பசங்க எல்லாம் இந்த இடத்தை விட்டுப் போயிட்டாங்க..நாங்க போறதுக்கு வழி தெரியலை.. என் வீட்டுக்காரரு சம்பாதிக்க வழி தெரியாம...வீட்டில கிடக்காங்க.. சார் காலையிலிருந்து ஒரு டீ சாப்பிடக் கூட வழி தெரியலை சார்..".என்று அழுதபடியே சொல்ல, நான் உருகி விட்டேன்.  ஒரு 20ரூபாயைக் கொடுத்தேன்.  அதை எடுத்துக்கொண்டு டீ குடிக்க ஓட்டமாய் ஓடினாள்.  அந்த அழுகை நிஜம்.  நடிப்பில்லை.

அதே அசிக்காட்டில் இன்னொரு பக்கம்.  வற்றிப் போன மேல குளம் இருக்கும் அருகில். தனித்தனியாக சொகுசு விடுதிகள் கட்டுகிறார்கள்.  கட்டிய விடுதிகளைப் பார்க்கும்போது பிரமிப்பு அடங்கவில்லை.  நம்ம அசிக்காடா என்பதை நம்ப முடியவில்லை. நீச்சல் குளம் தனியாக கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.  ஒரு பக்கம் புராதன பெருமாள் கோயிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்து விட்டது.   ஆனால் கருமுத்து தியாகராஜன் குடும்பத்தைச் சேர்ந்த வாரிசுகள் அசிக்காட்டின் வேறொரு பகுதியில் பெரிய இடத்தை வளைத்துப் போட்டு சொகுசு வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

விஜாரித்ததில் விடுதிகளில் தங்க மேலை நாட்டினர்தான் வரவேண்டுமாம்.  அசிக்காடு இன்னும் சில மாதங்களில் பெரிய மாற்றத்தை உருவாக்க உள்ளது. என்ன இருந்தாலும் நாங்கள் பார்த்த அசிக்காடு இருக்கப் போவதில்லை.




Comments