அழகியசிங்கர்
2011ஆம் ஆண்டு இதே அமெரிக்காவிற்கு வந்திருந்தோம். ப்ளோரிடா என்ற இடத்தில் தங்கியிருந்தோம். ஒரு ஆங்கிலப்படம் பார்க்க அழைத்துச் சென்றான். இதே ஒரு பெரிய கட்டடத்தில் ஏகப்பட்ட திரை அரங்குகள். ஒரு ஆங்கிலப்படம் பார்த்தோம். இரவு நேரத்தில். வழக்கம்போல் அந்தப் படம் பார்க்க நாலைந்து பேர்கள்தான் தென்பட்டார்கள். படம் என்னவென்று புரியவில்லை. படம் பார்க்காமல் தூங்கி வழிந்தேன்.
8 ஆண்டுகள் கழித்து இப்போது பீனிக்ஸ் என்ற இடத்திற்கு வந்திருக்கிறேன். போனவாரம் ஹார்க்கின்ஸ் திரையரங்கத்தில் தடம் என்ற தமிழ்ப் படம் பார்த்தேன். அது குறித்து எழுத உள்ளேன். திரை அரங்கத்தில் முதியவர்களுக்கு டிக்கட் விலை 8 டாலர்கள். மற்றவர்களுக்கு எட்டரை டாலர்கள்.
தடம் தமிழ்ப் படத்தைப் பற்றி எழுத விரும்புகிறேன் மகிழ் திருமேனி இயக்கியுள்ள படம். பொதுவாக திரை அரங்கில் தமிழ்ப் படங்களைப் பார்க்கும்போது சிறிது நேரத்தில் நெளியாமல் இருக்க மாட்டேன். ரொம்ப தாங்க முடியாவிட்டால் எழுந்து போய்விடுவேன். ஆனால் தடம் படத்தை முழுவதும் ரசித்தேன். கடைசி வரை பார்த்தேன். வித்தியாசமான கதை அம்சம்.
ஆனால் இந்தப் படத்தில் தென்பட்ட பிரச்சினையும் புரிந்து விட்டது. இரட்டை வேடத்தை எடுத்து முக்கியமான பாத்திரம் ஏற்று நடித்த நடிகர் அதைச் சரிவர செய்யவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது.
இரட்டை வேடத்தில் நடிக்கும்போது ஒரு வேடத்திற்கும் இன்னொரு வேடத்திற்கும் நடிப்பால் வேறுபடுத்திக் காட்ட வேண்டும். உதாரணமாக üஎங்கள் வீட்டுப் பிள்ளைý என்ற படத்தில் எம்.ஜி.ஆர் இரண்டு வேடங்களையும் வேறு படுத்திக் காட்டி நடித்துள்ளார்
இதில் நடித்த நடிகருக்கு அது சரியாக வரவில்லை. ஆரம்பத்தில் இப் படத்தைப் பார்க்கும்போது எனக்குக் குழப்பமாக இருந்தது. ஆனால் போகப்போகத்தான் புரிந்தது.
இப்படி ஒரு நல்ல படத்தை இந்த நடிகர் ஓரளவு நடிப்பு மூலம் மட்டுப்படுத்தி விட்டாரா என்று தோன்றுகிறது.
பொதுவாக இரட்டை வேடம் என்றால் ஒரு கதாநாயகன் வீரனாகவும் இன்னொருவன் கோழையாகவும் காட்டுவார்கள். அல்லது ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் கெட்டவனாகவும் காட்டுவார்கள். பிறகு அதில் ஒரு சிக்கலை ஏற்படுத்தி அந்தச் சிக்கல் அவிழ்ப்பதுபோல் கதை போகும்.
இந்தப் படமும் அதற்கு விதிவிலக்கல்ல. படத்தில் முக்கியமாக நான் கருதுவது போலீஸ் ஸ்டேஷன், கோர்ட். போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் வித்யா ஸ்மிருதி சிறப்பாக நடித்துள்ளார்.
அப்பாவுடன் இருக்கும் எழில் நன்றாகப் படித்து சிறப்பாக வளர்கிறான். அடுக்குமாடி கட்டடம் கட்டுபவராக மாறுகிறான். ஆனால் அம்மாவால் வளர்க்கப்படும் கவின் சரியாக வளர்க்கப் படாமல் கிட்டத்தட்ட ரௌடி மாதிரி திரிகிறான்.
படத்தில் சில விஷயங்களை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. சோனியா அகர்வால் நடித்திருக்கும் அம்மா பாத்திரம்.
இப் படத்தில் காணப்படும் காதல் காட்சிகள் நம்பும்படி இல்லை. காதல் என்றாலே நெருக்கத்தை உண்டாகப்பட வேண்டும். உணர்வு மூலம் ஏற்பட வேண்டிய ஒன்று. அந்த நெருக்கம் ஏனோ இதில் உணர முடியவில்லை. இரும்புத்திரை என்ற படத்தில் சிவாஜியும் வைஜெயந்திமாலாவும் நடித்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் தொட்டுக்கூட நடித்திருக்க மாட்டார்கள். அதில் வெளிப்படும் காதல் நம்பும்படி இருக்கும். ஆனால் எப்போதும் ஞாபகத்தில் இருக்கும் ஒன்றாக இருக்கும். அவர்கள் ஒரு பாடல் பாடுவார்கள். கானா இன்பம் என்று ஆரம்பமாகும் பாடல். இன்னும் அந்தக் காட்சியை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் இந்தப் படத்தில் காதல் விரசமாகக் காட்டுவதுபோல் தோன்றுகிறது. அமெரிக்காவிற்கு விமானத்தில் பயணம் செய்துகொண்டு வரும்போது குளோபல் படம் ஒன்றைப் பார்த்தேன். அதில் ஒரு காதல் படம். படம் பெயரெல்லாம் குறித்து வைத்துக்கொள்ளவில்லை. ஒரு பெரிய பஸ் மாதிரி ஒன்றை ஒருத்தி ஓட்டிக்கொண்டு பல இடங்களுக்குச் சென்று கொண்டிருக்கிறாள். வழியில்; ஒரு வாலிபனைச் சந்திக்கிறாள். அவளுடன் அவனும் பயணம் செய்கிறான். . பயணத்தின்போது அவர்களிடையே காதல் ஏற்படுகிறது. அவனுடன் சேர்ந்து செல்வதுதான் கதை. நிகழ்ச்சிகள் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.
தடம் படத்தில் முக்கியமாக நான் கருதுவது கதைக்களம். அது சிறப்பாக அமைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. போலீஸ் வேடத்தில் நடிக்கும் வித்யா ப்ரதீப் பார்வையாலேயே எல்லோரையும் வசியப்படுத்துபவராகத் தென்படுகிறார்.
எழில் செய்யும் கொலையை மறைக்க கவினும் போலீசில் மாட்டிக்கொள்கிறான். அப்போதுதான் எனக்குப் புரிகிறது. இரண்டு வேடஙகளில் நடிக்கப்படுகிற படம் என்று. அதுவரை ஒன்றும் புரியவில்லை. யாரைக் குற்றவாளி என்பதில் ஒரு குழப்பம் ஏற்படுகிறது. கடைசியில் உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்று நினைத்துக்கொண்டு பார்த்தேன். ஆனால் கதை வேறு விதமாகப் போபய் விடுகிறது.
இப்போதெல்லாம் சிறப்பான முறையில் தமிழ்ப்படங்கள் எடுக்கப்படுகின்றன. நான் சென்னையிலிருந்து புறப்பட்டு வரும்போது செழியன் இயக்கிய டுலெட் என்ற படத்தைப் பார்க்க நினைத்தேன். முடியாமல் போய்விட்டது.
மகிழ் திருமேனி பாடலே இல்லாமல் 2 மணி நேரத்திற்குப் பார்வையாளர்களை ரசிக்க வைத்திருக்கிறார். இதில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
Comments