அழகியசிங்கர்
நான் அமெரிக்கா வந்து 7 நாட்கள் முடிந்து விட்டது. நான் வைத்திருக்கும் ஒரு ஓட்டை லாப்டாப் மூலம் இதை அடித்துக்கொண்டிருக்கிறேன். அடிப்பதில் ஓரளவு வெற்றி என்று சொல்லலாம். அமெரிக்காவிலேயே குளிரை அதிகமாகக் காட்டாத இடம் பீனிக்ஸ்தான். ஆனால் அங்கயே என்னால் குளிரைத் தாங்க முடியவில்லை. 9 மணிக்குமேல்தான் நான் ஸ்வெட்டரைப் போட்டுக்கொண்டு வாக் செய்ய முடிகிறது. அற்புதமான இடம். பெரும்பாலும் நான் நடக்கும் இடத்தில் யாருமே என் கண்ணில் தட்டுப்படுவதில்லை. யாரையாவது தப்பித் தவறிச் சந்தித்ததால் குட்மார்னிங் என்று சொல்கிறார்கள். இந்த நாகரிகம் எனக்குப் பிடித்திருக்கிறது. வெப்பமும் நெரிசலுமிக்க சென்னை நகரத்தை விட்டு இங்கு தனிமையும் குளிரும் உள்ள இடத்திற்கு வந்திருக்கிறேன். என் பொழுதுபோக்கு பெரும்பாலும் புத்தகங்கள் படிப்பதுதான். இங்குள்ள அமெரிக்க நூலகத்திலிருந்து நான் 6 புத்தகங்களை எடுத்துக்கொண்டு வந்திருக்கிறேன். அவற்றைப் படிப்பதில் தீவிரமாக இருக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் காலையில் 8 மணிக்குக் குறைவாக எழுந்திருப்பதில்லை. ஆனால் நானோ 4 மணிக்கே எழுந்து விடுகிறேன். ஏனோ தூக்கமே வருவதில்லை. எழுந்தவுடன் ஒரு மணிநேரம் ஒரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறேன். பின் உட்கார்ந்தபடியே விளக்கை அணைத்துத் தூங்கி விடுகிறேன். திரும்பவும் எழுந்து கொள்கிறேன். இன்னொரு புத்தகத்தை எடுத்துப் படிக்கிறேன்.
Comments