Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 47 - நாபிக் கமலம் - 2



அழகியசிங்கர்






சி சு செல்லப்பா 'ராமையாவின் சிறுகதை பாணி' என்ற  ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.  அப் புத்தகத்தில் ராமையாவின் 200க்கும்  மேற்பட்ட சிறுகதைகளைப் படித்து விமர்சனம் செய்துள்ளார்.  ஒவ்வொரு கதையையும் படித்து அக் கதையை சுருக்கமாக எழுதி பின் அக் கதையைப் பற்றி ஒற்றை வரியில் விமர்சனம் செய்திருப்பார்.  உண்மையில் ராமையாவின் மொத்த கதைகளும் புத்தகமாக வரவில்லை.  ஆனால் சி சு செல்லப்பாவின்  புத்தகத்தைப் படித்தால் ராமையா எப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் என்று தெரிந்துவிடும்.  கதைகளைப் படிக்கும் எண்ணமும் போயிருக்கும்.  கதைச் சுருக்கம் போதும் என்று விட்டுவிட்டிருக்கலாம்.  நானோ  வண்ணதாசன் 13 கதைகளின் முன் கதைச் சுருக்கத்தைத் தராமல் கதையின் தன்மையை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறேன்.  என் குறிப்புகளைப் படிக்கும் ஒருவர், வண்ணதாசனின் கதைகளைப் படிக்கும் எண்ணம் வராமல் இருக்காது. 


1. சற்றே விலகி -

இந்தக் கதையில் கபாலியா பிள்ளை பகவதி என்ற பெயரை உச்சரிப்பது ஏன்?  பகவதி போய் விட்டாளா என்கிறார். எல்லோருடைய ஏச்சுக்கும் அவர் ஆளானாலும் அவருடைய இயல்பை அவரால் மாற்றிக்கொள்ள முடியவில்லை.  அவர் வெறித்துப் பார்க்கிற எல்லாப் பெண்களையும் பகவதியாகப் பார்க்கிறாரா? அதனால்தான் அவருக்கு எந்தக் குற்ற உணர்வு ஏற்படவில்லை. மனோரீதியாக எழுதப்பட்ட கதை.

2. போதாமை

முழுவதும் வெளிப்படுத்த முடியாத உணர்வை காசிநாதன் தாயம்மாளிடம் எதிர்பார்க்கிறான்.  பெரிய ஏமாற்றம்தான் கிடைக்கிறது.  'அவரு என்ன சொல்கிறதுங்க? எனக்கே போதும்னு தோணிடுச்சு,' என்கிறாள் தாயம்மாள். இந்த வார்த்தைகளில் எல்லாவற்றையும் உதறி விடுகிறாள் தாயம்மாள். காசிநாதன் இந்தப் பதிலை எதிர்பார்க்கவில்லை.  அவன் கற்பனை செய்து பார்க்க வந்த தாயம்மாள் அங்கு இல்லை. 

3. எது தெரிகிறதோ அது

விருப்பம் இல்லாத திருமணம்.  தன் இயலாமையை ஊஞ்சல் ஆடுவதன் வெளிப்படுத்துகிறாள் பிரேமா. 

4. காற்று வெளியிடை 

ஒரு சிலரை நமக்குப் பிடித்துவிட்டால் அவர்களைப்பற்றிய தப்பான அபிப்பிராயங்களை நாம் ஏற்றுக்கொள்வதில்லை  குறுமணி டீச்சரைப் பற்றி ராஜாங்கத்திற்கு ஏற்பட்ட உணர்வுதான் அது.  ஒரு சித்திரம்போல குறுமணி டீச்சரை நம் கண் முன் நிறுத்துகிறார்.  

5. தரையோடு தரையாக

ரத்னவேல் மாமா என்பவரைப் பற்றி ஒரு நீளமான கதை. யாரும் எதிர்பாராத விபத்து ரத்னவேல் மாமாவின் வாழ்க்கையில் நடந்து நிலைகுலைய வைக்கிறது. விபத்துக்குப் பிறகு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் விதமதான் இக் கதை  

6. நாபிக் கமலம்

சதாகாலமும் கணவனைச் சந்தேகிக்கிற மனைவியாக கனகம் சங்கரபாகத்திற்கு அமைந்து விடுகிறாள்.  அவள் பிரிவு அவரை ரொம்பவும் வாட்டி விடுகிறது.  அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்கிறார். மிகக் குறைந்த வசனத்தைக் கொண்டு முழுமையான கதையாகத் தென்படுகிறது.  ஆண் பெண் உறவில் ஏற்படும் விரிசலை வெளிப்படுத்துவதில் வண்ணதாசன் தனித்துவம் மிக்கவராகத் தென்படுகிறார்.
                                                                                                                    (இன்னும் வரும்)


Comments