Skip to main content

நீங்களும் படிக்கலாம் - 47 - நாபிக் கமலம் - 3


அழகியசிங்கர்






பிப்ரவரி மாதம் வண்ணதாசனின் எல்லாக் கதைகளையும் படித்துவிட்டு நான் குறிப்புகள் எழுதினாலும் திரும்பவும் கதைகள் எல்லாவற்றையும் இப்போதும் படித்தேன்.  
நீங்களும் படிக்கலாம் தொகுதி 1 புத்தகத்தை அசோகமித்திரனிடம் கொடுத்தபோது அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஒரு புத்தகத்திற்கு விமர்சனம் எழுதுவது அவ்வளவு சுலபமில்லை.  சிலசமயம் என்ன எழுத வேண்டுமென்று தோன்றாமல் போய்விடும்.ý  அவர் சொன்னது உண்மை என்பதை வண்ணதாசனின் சில கதைகளைப் படிக்கும்போது என்னால் உணர முடிந்தது.  அவர் கதைகள் சொல்லாமல் ஏதோ சொல்ல வருகிறார்.  வாசகன்தான் கவனமாகப் படிக்க வேண்டும். கதைகள் மூலம் மறைமுகமான அனுபவத்தைத்தான் உணர முடியும்.     

7. அகஸ்தியம் 
மனித உறவுகளுக்குள் நடப்பதெல்லாம் புரியாத புதிராக உள்ளது.  நடேச கம்பர் மகன் தனுஷ்கோடிக்கும் அகஸ்தியர் அத்தைக்கும் இடையில் நடந்தது என்ன?  

8.  மகா மாயீ
உணர்வு முழுவதையும் வெளிப்படையாகக் கூறாமல் எதிரொலிக்கும் கதை.  குடும்பத்திற்கு எதிராக திலகா தனக்குப் பிடித்த ஆணை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறாள்.  அதற்கு முழு சம்மதத்தை மாமு ஆச்சி வெளிப்படுத்துகிறாள். üஒப்படைசாச்சுý என்ற ஒற்றை வரியில் கதையின் போக்கு முடிவுக்கு வருகிறது.  

9. சல்லாத் துணிகளின் ஊடாக மலைகள்
முதல் முறையாக இந்தக் கதையைப் படித்துக் குறிப்புகள் எழுதினாலும், இப்போது இன்னும் இரண்டு மூன்று முறைகள் இக் கதையைப் படித்துப் பார்த்தேன்.  கதை மூலம் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை.  சொல்லாமல் சொல்லும் கதை வண்ணதாசனுக்கு அமைந்திருக்கிறது.  பாண்டியம்மாளைப் பார்த்த இளம்பிறைக்கு அண்ணன் செழியன் ஞாபகம் வருகிறது. முறிந்துபோன உறவு.  ஒரு வார்த்தை கூட அண்ணன் செழியனைப் பற்றி பாண்டியம்மாள் விஜாரிக்கவில்லை என்பதை நினைத்து வருத்தப்படுகிறாள். 

10. இக்கரைக்கும் அக்கரைக்கும்
எப்படி பாட்டு எல்லோருடைய உணர்வுகளையும் ஒருங்கிணைக்கிறது என்பதுதான் இக் கதை. 

11. ஸ்படிகம்

இந்தக் கதையில் காதல் என்கிற அனுபவம் நுணுக்கமாகச் செயல்படுகிறது.  செல்வக்குமாரிடமிருந்துதான் கதை ஆரம்பிக்கிறது.  பல பெண்களிடம் அவன் காட்டும் அன்புதான் 
அவனை தற்கொலை செய்துகொள்ளத் தூண்டுகிறது. மனம் ஒரு வித்தியாசமானது. அதைப் பிடித்து வைத்துக்கொள்வது அவ்வளவு சுலபமானதல்ல.  

12..  இனிமேல் என்பது, இதில் இருந்து

எதிர்பார்த்தபடி அம்மா இறந்து விடுகிறாள்.  அவளுடன் கொண்ட பாசப்பிணைப்புதான் இக் கதை.  ஒரு புதல்வனின் உணர்வுகள் அழுத்தமாக வெளிப்படுகின்றன.  

13. கருப்பும் வெள்ளையும்

ஒரு புகைப்படம் எடுப்பவரின் கதை. சர்க்கரைப் பாண்டி.  üஇப்படியான முகங்கள் புகைப்படக்காரர்களின் பரவசம்.  அது அவனை வேட்டையாட வைத்து விடுகிறது,ý என்கிறார் சர்க்கரைப் பாண்டி ஆனந்தவல்லியைப் பார்த்து.  அவள் கணவன் பாப்புராஜ்  அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இருக்கிறானா என்பதைக் கதையின் கடைசி வரியில் தெரியவரும்.  

நாபிக் கமலம் - வண்ணதாசன் - சிறுகதைகள் - வெளியீடு : சந்தியா பதிப்பகம், புதிய எண் : 77, 53வது தெரு, 9வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 83 - தொலைபேசி : 044-24896979 - பக் : 160 -விலை : 140

Comments