அழகியசிங்கர்
'மனதுக்குப் பிடித்த கவிதைகள்' என்ற தொகுப்பை கூடிய விரைவில் கொண்டு வர உள்ளேன். இது முதல் தொகுப்பு. இதைத் தொடர்ந்து இரண்டாவது தொகுப்பு மூன்றாவது தொகுப்பு என்று வர உள்ளது. ஒவ்வொரு தொகுப்பிலும் 100 கவிதைகள் வரை இடம் பெறும். தொகுப்பாளராக நான் இருந்தாலும் இத் தொகுப்பில் முன்னுரை எதுவும் இடம் பெறாது. ஏன் என்றால் கவிதைகள்தான் முன்னுரை. தொகுக்கப்பட்டுள்ள கவிதைகளை ஒருவர் வாசித்தால்தான் இதன் அருமை தெரியும்.
நான் இதுவரை 400க்கும் மேற்பட்ட கவிதைத் தொகுதிகள் வைத்திருக்கிறேன். ஒருநாள் தற்செயலாக ஒரு கவிதைத் தொகுதியை எடுத்து வாசித்தேன். அத் தொகுதியில் உள்ள கவிதைகளைப் படித்து நான் அசந்து விட்டேன். நாம் ஏன் ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எதாவது ஒரு கவிதையைத் தேர்ந்தெடுக்கக் கூடாது என்று அப்போது தோன்றியது. அந்த முயற்சிதான் தொடருகிறது. இப்போது என்னிடம் உள்ள கவிதைத் தொகுதியிலிருந்து 400க்கும் மேற்பட்ட கவிதைகளை என்னால் எடுக்க முடியும். இதெல்லாம் கவிதைப் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகள். இதே பத்திரிகைகளில் பிரசுரமாகும் கவிதைகளை நான் தேர்ந்தெடுத்தால் அது ஆயிரக்கணக்கில் போய்விடும்.
தமிழில்தான் அதிகமாகக் கவிதைத் தொகுதிகள் வருகின்றன என்பது என் யூகம். அதேபோல் கவிதைப் புத்தகம் போல் விற்காமல் இருப்பதும் தமிழில்தான். நான் இதுமாதிரியான கவிதைத் தொகுப்புகளிலிருந்து கவிதைகளைத் தேர்ந்தெடுக்கும்போது நம்மிடம் எவ்வளவு திறமையானவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்காமல் இருப்பதில்லை.. நாம் யாரையோ ஒரு கவிஞரை மட்டும் கடவுளாக நினைத்துத் தொழுகிறோம். உண்மை அப்படி இல்லை. யாருக்கும் தெரியாமல் நம்மிடம் பல கவிஞர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்.
இளையபாரதி கவிதை
முக்காலத்து
மழையையும் வெயிலையும் எதிர்க்கும் சக்தியை
என் கவிதைகளுக்கு ஊட்டிச் செல்கிறேன்
அண்டவெளியைத் தழுவி காலப்புழுதி படியாமல்
காற்றைச் சிறகாக்கி நீச்சலிடும் கலை
கலந்திருக்கிறது அதன் குருதி அணுக்களில்.
அதனுடன் பிறந்த கூரிய வாளும் கேடயமும் உண்டு
அதன் கைகளில்.
அதன் சொற்களில் சூடேறிக்கிடக்கின்றன
ஆயிரம் தலைமுறைக்கான வெப்பமும் வெளிச்சமும்.
அதன் வரிகளில் காற்றில் உலராத கண்ணீரின் இசை. -
அமுதக் கடலுறங்கும் அதன் தனங்கள்
அனாதை உதடுகளுக்காகச் சுரந்துகொண்டே இருக்கின்றன.
மானும் மழுவும் ஏந்திய மனசில்
காலங்களால் அணையாத அக்னிச்சட்டிகள்.
கண்களில் கருணையும் காந்தமும் கொண்ட அதன்
கொவ்வைச் செவ்வாயின் குமிழ் சிரிப்பில்
பூரணம் புன்னகையாகிறது.
காலத்தின் கம்பிகளில்
இடைவிடாத பயணம் நடத்திடும் மின்சாரத்தைக்
குமுறும் இருதயங்களிலிருந்தே
திரட்டிக் கொட்டியிருக்கிறேன்.
கொத்தும் மரணக் குருவியின் அலகிலிருந்து தப்பிய தானியம் நான்.
என் இனத்தின் பசிக்கான கனிகள்
இந்த ஒற்றை விதையிலிருந்தே விளைந்து பெருகும்.
பறிக்க முடியாத ஆழத்தில் பாவியிருக்கின்றன
என் தொன்மத்தின் வேர்கள்
தொப்புள்கொடியின் தொடர்ச்சியாய்.
நன்றி : மரணத்தின் நட்சத்திரங்கள் - கவிதைகள் - இளையபாரதி - பக்கங்கள் : 110 - வெளிவந்த ஆண்டு : 1999 - விலை : ரூ.35 - சாந்தி பிரசுரம் - 7 முதல் தளம், நான்காவது தெரு, அஞ்சுகம் நனர், அசோக்நகர், சென்னை 600 083
Comments