Skip to main content

துளி : 11 - சொல்லாமலே....


அழகியசிங்கர்

                                                                        


சமீபத்தில் தமிழ்ச் சினிமாவில் கதைத் திருட்டு பெரிய விஷயமாக யூ டியூப்பில் போய்க் கொண்டிருக்கிறது.  எல்லாம் உடனே உடனே தெரிந்து விடுகிறது.  பலதரப்பட்ட வாதங்கள் விவாதங்கள் எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.  என்னைப் போன்றவர்களுக்கு இது சம்பந்தமே இல்லை.   ஆனால் யூ டியூப்பில் பார்க்க  நன்றாகப் பொழுது போகிறது. 
ஒரு காலத்தில் ஸ்டெல்லா புரூஸ் அவர்கள் கதை விவாதத்திற்குக் காரை வைத்து அழைத்துப் போனதாக என்னிடம் பெருமையாக சொல்லுவார். ஹோட்டலில் ரூம் போட்டுக் கதை விவாதம் செய்வதாக அவர் குறிப்பிடுவார். எனக்குத் தோன்றும் என்ன அப்படி விவாதம் செய்வார்கள் என்று.
உண்மையில் படத்தை இயக்குபவர் படத்தை மட்டும் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  அதேபோல் கதை எழுதுபவர் ஒருவராக கதை, திரைக்கதை, வசனம் என்றெல்லாம் எழுதத் தெரிந்திருக்க வேண்டும். எல்லாமே இயக்குநர் என்கிறபோது பிரச்சினை ஏற்படுவதாகத் தோன்றுகிறது. 
என் அலுவலகத்தில் ஒருவர் கூட இப்படித்தான் கதையைச் சொல்லி தயாரிப்பாளரைப் பார்த்து படம் தயாரித்து விடலாம் என்கிற மாதிரி பேசுவார்.  அவர் புத்தகங்கள் பத்திரிகைகள் என்று எதையும் படிக்காதவர்.  அவரால் எப்படி இதெல்லாம் முடியும் என்று யோசிப்பேன்.  அவர் சொன்னாரே தவிர அப்படியெல்லாம் நல்லகாலமாய் நடக்கவில்லை.
பி எஸ் ராமையா, புதுமைப்பித்தன் எல்லாம் மேல் நாட்டுக் கதைகளைத் தழுவி கதைகள் எழுதியிருப்பதாக சி சு செல்லப்பா குறிப்பிட்டுள்ளார்.  
கமல்ஹாசன் நடித்த மஹா நதி கூட ஸ்டெல்லா புரூஸ் உறவினரின் கதைத் திருடப்பட்டதாகக் கூறியிருக்கிறார் ஸ்டெல்லா புரூஸ் .   இதனால் கதை சொல்பவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  சினிமாக்காரர்கள் என்றால் ஒரு லைன் கதையைச் சொல்லவே கூடாது.  
1995ஆம் ஆண்டு நான் ஒரு கவிதைத் தொகுதியைக் கொண்டு வந்தேன்.  கவிதைத் தொகுதியின் பெயர் யாருடனும் இல்லை. 
அதில் ஒரு கவிதையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்: 

இத்தனை நாட்கள்
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
ஏதோவொன்று
சொல்லாமலே....

என்று அக் கவிதை முடியும்.  இதில் சொல்லாமலே என்ற வரியில் ஒரு தமிழ் படம் வந்திருந்தது.  அந்தப் படம் வந்தபோது என் கவிதையிலிருந்து ஒரு வரி எடுத்துள்ளார்கள் என்றேன்.  அது எப்படி உங்கள் வரியிலிருந்து அந்தப் படம் வந்தது என்று என் நண்பர்கள் திருப்பிக் கேட்டபோது நான் பேசாமல் இருந்து விட்டேன்.  

Comments