Skip to main content

கிராமீயப் பாடல்கள்

தொகுப்பாசிரியர் : வானமாமலை
ஆண்டிற்கொரு விழா



நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்து, உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான்.  பிள்ளையாரும அத் தெய்வங்களுள் ஒருவர்.  இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல.  இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர்.  நல்லமேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரததடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம் - எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
வட்டார வழக்கு :

கொளபபடை - கொட்டகை
பண்ணி - பன்றி

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                இடம் : சேலம் மாவட்டம்

Comments