அழகியசிங்கர்
வாசக சாலை என்ற அமைப்பு கடந்த ஓராண்டாக ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். நேற்று விடாமல் மழை பெய்தாலும் அவர்கள் கூட்டத்தை நிறுத்தவில்லை. திருவான்மியூரில் உள்ள பனுவல் புத்தக விற்பனை நிலையத்தில் கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள். முக்கியமான எழுத்தாளர்களைப் பற்றி கூட்டம் நடத்தி வருகிறார்கள். நேற்று (22.11.2015- sunday) கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கூட்டம நிகழ்த்தினார்கள். கமலி பன்னீர் செல்வம், தமிழ் செல்வன், அபிலாஷ், நான் நால்வரும் பேசினோம்.
திருவான்மியூரை அடைந்த போது மழை பிய்த்து உதறியது. வாசக சாலை நண்பர்கள் போன் செய்து மழையால் கூட்டம் இல்லை என்று சொல்வார்கள் என்று நினைத்தேன். அதுமாதிரி எதுவும் நடக்க வில்லை. மழையில் கொஞ்சம் நனைந்தபடி பனுவல் சென்றேன். எனக்கு ஆச்சரியம் எப்போதும் கூட்டத்திற்கு வருபவர்கள் இந்த மழையிலும் வந்திருந்தார்கள்.
மழையில் நனைந்தபடி கோபிகிருஷ்ணனைப் பற்றி பேசியது புது அனுபவமாக இருந்தது. கோபி 2003ல் இறந்து விட்டார். கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் கழித்து இதுமாதிரியான கூட்டம் நடைபெறுகிறது. 12 ஆண்டுகள் முன் கோபிகிருஷ்ணனுடன் பேசியதெல்லாம் ஞாபகத்தில் கொண்டு வந்தேன்.
1022 பக்கங்கள் கொண்ட கோபிகிருஷ்ணன் படைப்புகள் என்ற புத்தகத்தை சி மோகன் தொகுத்ததை நற்றிணை என்ற பதிப்பகம் துணிச்சலாகக் கொண்டு வந்துள்ளது. இந்தப் புத்தகம் விலை ரூ.800.
கோபிகிருஷ்ணன் ஒரு வித்தியாசமான மனிதர். உளவியல் பிரச்சினை உடைய எழுத்தாளர். மனப்பிறழ்வை இலக்கியமாக மாற்றியவர். அவருடைய எழுத்துக்களைத் தொடர்ந்து யாராலும் வாசிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வாசிக்க வேண்டும். அபபடித் தொடர்ந்து வாசித்தால் மனப்பிறழ்வு நிலைக்கு வாசிப்பவர் ஆளாக நேரிடும். தமிழில் இதுமாதிரியான எழுத்தை உருவாக்கியவர் கோபிகிருஷ்ணன் ஒருவராகத்தான் இருக்க முடியும்.
ஒருமுறை விருட்சம் கூட்டத்திற்கு கோபிகிருஷ்ணனைப் பேசக் கூப்பிட்டேன். ஒருநாள் விடுமுறை எடுத்துக்கொண்டு என்ன பேச வேண்டுமென்று தயார் செய்து கொண்டு கட்டுரையாக எழுதி வாசித்தார். வாசிக்கும்போது நடுக்கமான நடுக்கம் அவருக்கு.
விருட்சம் பத்திரிகை ஆரம்பித்தபோது கோபிகிருஷ்ணனைத்தான் இணை ஆசிரியராக சேர்த்திருந்தேன். முதல் இதழ் வந்தது. இரண்டாவது இதழ் வெளிவருவதற்கு முன் கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கடிதம். தன்னை விருட்சம் இதழிலிருந்து விலக்கிக் கொள்ளும்படி. 1988ல் மாறுபட்ட எழுத்தாளர்களைப் பிணைப்பது பிரச்சினையாக இருந்தது. கோபிகிருஷ்ணனால் அப்படி ஒரு நிலையைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நேற்று பேசிய கூட்டத்தில் நான் இன்னும் சிலவற்றை தெளிவாகப் பேசியிருக்க வேண்டும். உதாரணமாக ஒவ்வொரு புத்தாண்டின் போது கோபிகிருஷ்ணனிடமிருந்து ஒரு கார்டு வரும் புத்தாண்டு வாழ்த்துத் தெரிவித்து. இதை சொல்ல மறந்து விட்டேன்.கார்டில் புத்தகாண்டு வாழ்த்துகள் என்றுதான் எழுதியிருப்பார். இந்தக் கார்டை அனுப்பும் அவர் மனநிலை எனக்குப் பிடிக்கும்.
கோபி தானாகவே தன்னை அழித்துக் கொண்டு விட்டார். தொடர்ச்சியாக விடாமல் அவர் சிகரெட் பிடித்துக் கொண்டிருப்பார். எந்த வேலையிலும் நிலைத்து நிற்க மாட்டார். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. வேண்டுமென்றே குளிர் பானங்கள் குடிப்பார்.
இப்போது இருந்தால் கோபிக்கு 70 வயது இருந்திருக்கும். ஒரு நாள் கோபி போன் செய்தார். 'ஆஸ்பத்ரி விஷயமாக என் செலவுக்குப் பணம் வேண்டும்,' என்று கேட்டார். அவர் அதிகமாகப் பணம் கேட்கப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர் கேட்டது வெறும் 200 ரூபாய்தான். 'அலுவலகம வந்து வாங்கிக் கொள்ள முடியுமா?' என்று கேட்டேன். 'நீங்கள்தான் வர வேண்டும். என் உடல்நிலை சரியில்லை,ýý என்றார். üüநான் சனிக்கிழமை வந்து உங்களைப் பாரக்கிறேன்,' என்றேன்.
ஆனால் சனிக்கிழமை லதா ராமகிருஷ்ணன் அவர்களிடம் இருந்து, கோபிகிருஷ்ணன் இறந்து விட்டார் என்ற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. அதே சமயத்தில் வருத்தமாக இருந்தது.
அவர் மரணம் அடைநத சமயத்தில் நான் கோபிகிருஷ்ணனைப் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். 'நானும கோபிகிருஷ்ணனும்' என்பதுதான் தலைப்பு. நேர் பக்கம் என்ற என் கட்டுரைப் புததகத்தில் இக் கட்டுரை வர உள்ளது.
திடமான மனநிலையில் நீங்கள் இருந்தால்தான் அவர் புத்தகத்தை வாசிக்க முடியும். நான் கொஞ்சம் கொஞ்சமாக அவர் புத்தகத்தை வாசித்துக் கொண்டிருக்கிறேன்.
அவர் புத்தகத்தைப் பெறுவதற்கு கீழ்க்கண்ட முகவரியை அணுகவும்.
கோபிகிருஷ்ணன் படைப்புகள் - பக்கம்: 1022 - விலை: ரூ800 - நற்றிணை பதிப்பகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை 5 - தொலை பேசி எண் : 9486177208, 9442956725
Comments