Skip to main content

ஆம் ஆத்மியும் அண்ணா ஹஸாரேவும் நியாயமும்

WRITTEN BY :
பிரபு மயிலாடுதுறை


சில நாட்களுக்கு முன், ஒரு நண்பரின் அலுவலகத்துக்கு சென்றிருந்தேன்.அவர் ஒரு கட்டிடப் பொறியாளர்.கட்டிட வரைபடங்களை வரைந்து கொடுப்பவர்.ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் கட்டித் தருபவர்.மயிலாடுதுறைக்காரர்.பழகுவதற்கு இனிமையானவர்.கடுமையான சொற்களை எவ்விஷயத்துக்கும் பயன்படுத்தாதவர்..சில நாட்கள்  சென்னையில் ஒப்பந்தக் கட்டுமானத் தொழில் புரிந்தார்.இப்போது முழுமையாக மயிலாடுதுறைக்கு வந்து விட்டார்.அவரது அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.

எனக்கு பொதுவாக ஒரு தயக்கம் உண்டு.ஒருவரை தொழில் நிமித்தமன்றி, நட்பார்ந்த ரீதியில் அவர்கள் பணி புரியும் இடத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ சந்திப்பது எந்த அளவு சரி என தயங்குவேன்.குறிப்புகள் கேட்டுப் பெற பணியாளர் காத்திருக்கக் கூடும்.வாடிக்கையாளர்களின் பணிகள் பற்றி-பணி முன்னேற்றம் பற்றி அவர்களுக்குள் மட்டுமே பேச வேண்டிய விஷயங்கள் இருக்கும்.பணம் கொடுக்கல் வாங்கல் இருக்கும்.புதிய வாடிக்கையாளர் சந்திக்க வருவர்.அவர்கள் ஒரு இடத்தில் நிறைய பேர் இருப்பத்தைக் கண்டு திகைப்பர்.எனவே நண்பர்கள் பணி புரியும் அல்லது தொழில் புரியும் இடத்திற்கு சென்று சந்திப்பதை தவிர்ப்பேன்.ஆனால் எல்லா நாட்களும் ஒரே நாள் போல இருப்பதில்லை.அவர்கள் பணிச்சுமையின்றி இருக்கக் கூடிய நாட்களும் சாத்தியமே.எனவே அங்கு சென்று சூழலை அவதானித்து அதற்கு தகுந்தாற்போல் நடந்து கொள்வேன்.

எனது நண்பரின் அருகில் அமர்ந்து அவரின் கம்ப்யூட்டர் திரையைப் பார்த்தேன்.திரையின் வலது கோடியின் மேல் பக்கத்தில் மேல் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.அவர் வரைந்த வரைபடத்தில் கீழ் நோக்கிய அம்புக்குறி வடதிசையை சுட்டியது.வடதிசையை வரைதாளில் மேல் நோக்கியவாறு அமைத்தே வரைபடம் வரைய வேண்டும் அல்லவா  ஏன் இப்படி உள்ளது என நண்பரிடம் வினவினேன்.நீங்கள் சொல்வது சரிதான்;கணிணி வடதிசையை மாற்றமில்லாமல் காட்டும்.ஆனால்  சாலையை வைத்தே இடங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள்.எனவே எளிமையான புரிதலுக்காக இவ்வாறு செய்வதுண்டு எனக் கூறினார்.

நண்பர் வரைந்த வரைபடத்தில் சில சர்வே எண்களும் அதன் உட்பிரிவு எண்களும் இருந்தன.நெற்றியில் நீறணிந்த வெள்ளை சட்டையும் வேட்டியும் அணிந்த ஒரு கிராமத்து மனிதர் என்னருகே அமர்ந்திருந்தார்.அவரிடம் நண்பர் ஒரு ஏ-4 அளவில் அச்சான வரைபடத்தைக் கொடுத்தார்.நீங்கள் உத்தேசித்தவாறு இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள்; திருத்தம் ஏதும் இருந்தால் கூறுங்கள் என்றார்.சில திருத்தங்கள் கூறினார்.திருத்தப்பட்ட வரைபடம் வரைபடத்தாளில் ஏ-1 அளவில் அச்சேற்றப்பட்டு அம்மோனியா பிரிண்ட் போடப்பட்டது.கிராம ஊராட்சி ஒன்றின் ஒப்புதல் ஒன்றுக்காக அனுப்பப்பட உள்ளது என என்னிடம் கூறினார்.ஒப்பீட்டளவில்,ஊராட்சியின் ஒப்புதல் என்பது எளிமையானதுதானே என கேட்டேன்.நண்பர் இந்த கேஸ் வித்தியாசமானது எனக் கூறினார்.கிராமத்து மனிதர்  முழு விபரத்தையும் சொன்னார். 

அவரது பெயர் இராமமூர்த்தி.அவர் மயிலாடுதுறையில் வசிப்பவர்.அவரது சொந்த ஊர் பாளையமங்கலம். மயிலாடுதுறை பாளையமங்கலம் இடையேயான தூரம் ஒன்பது கி.மீ.சில ஆண்டுகளுக்கு முன்னால் அவரது மனையை தமிழகத்தின் பெரிய கட்சிகளில் ஒன்றின் மாவட்டப் பொறுப்பாளர் ஒருவர் ஆக்கிரமித்தார்.ஆக்கிரமித்த முறை நூதனமானது.இராமமூர்த்தியின் மனைக்கும் அரசியல்வாதியின் மனைக்கும் இடையே ஒரு புறம்போக்கு நிலம் இருந்துள்ளது.அதனை மெல்ல ஆக்கிரமித்த அரசியல்வாதி இராமமூர்த்தியின் இடமே புறம்போக்கு என்ற பொய் பிரச்சாரம் மேற்கொண்டு சிலரை நம்பவைத்தார்.கிராம நிர்வாக அலுவலர் அரசியல்வாதிக்கு உடந்தை ஆனார்.இராமமூர்த்தியின் மனையில் இருந்த மரங்கள் புறம்போக்கு மரங்கள் என வெட்டப்பட்டன.காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார் இராமமூர்த்தி.காவல்துறை அதனை ஏற்கவில்லை.நீதிமன்றத்தில் சிவில் வழக்காக பதிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறி விட்டனர்.மயிலாடுதுறை நீதி மன்றத்தில் வழக்கு நடந்தது.தீர்ப்பு இராமமூர்த்திக்கு சாதகமாக வந்தது .நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் அரசியல் புள்ளி.அதிலும் இராமமூர்த்தியின் தரப்பே வென்றது.

நில அளவை பதிவேடுகளில் ஏமாற்று செய்து இராமமூர்த்தியின் இடத்தின் ஒரு பகுதியை தனது இடம் எனக் கூறி வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய கிரய உடன்படிக்கை செய்தார் அரசியல்வாதி.அது தொடர்பாக ஒரு வழக்கு தொடரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி அதனை ஒப்படைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் அரசியல் பிரமுகர்.

நீதிமன்ற வழக்குகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்ததால் இராமமூர்த்தி மீது,கிராமத்தில் வசித்து வந்த ஒருவரை பணம் கொடுத்து தூண்டி விட்டு சாதிப்பெயர் சொல்லி திட்டினார் என புகார் அளிக்கச் செய்து தீண்டாமைச் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய வைத்தார் அரசியல்வாதி.தன் மீது தொடுக்கப்பட்டது பொய் வழக்கு என நீதிமன்றத்தில் நிரூபித்து வழக்கிலிருந்து வெளியே வந்தார் இராமமூர்த்தி.
நீதிமன்றத்தின் அனைத்து வழக்குகளிலும் தோல்வி கண்டதால் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி நில ஆர்ஜிதம் மூலம் அதனை அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப் பார்த்தார் அரசியல்வாதி.கிராம நிர்வாக அலுவலர்,வட்டாட்சியர்,கோட்டாட்சியர்,சார் ஆட்சியர் மற்றும் ஆட்சியர் ஆகியோரிடம் மீண்டும் மீண்டும் நிலைமையை விளக்கி மனு அளித்து தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் தனது மனுவின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என கேள்வி கேட்டு அரசை இயங்கச் செய்து வெற்றிகரமாக அதிகாரிகளுக்கு உண்மை நிலையை புரியவைத்தார் இராமமூர்த்தி.இவரது முழுக்கதையையும் கேட்ட மாவட்ட ஆட்சியர் வட்டாட்சியரிடமும் சார் ஆட்சியரிடமும் இராமமூர்த்தியின் முன்னிலையிலேயே தொலைபேசியில் பேசி அரசியல் குறுக்கீடுகளை புறந்தள்ளி நியாயப்படி நடக்க  ஆணையிட்டுள்ளார்.  தகவல் பெறும் உரிமைச் சட்டம் தனக்கு பெருமளவில் உதவி புரிந்ததாக கூறுகிறார் இராமமூர்த்தி.அரசின் நிர்வாக இயங்குமுறையையும் அதிகாரப் படிநிலைகளையும் அதிகாரிகளின் மனோபாவங்களையும் புரிந்தவராகி ஒரு இணை அரசாங்கமாக உருவெடுத்துள்ளார் இராமமூர்த்தி.நீதித்துறை,காவல்துறை.வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அலுவலகங்களின் படிக்கட்டுகளில் பல ஆண்டுகள் ஏறி இறங்கியிருக்கிறார்.மெல்லிய குரலில் பேசுகிறார்.யார் மீதும் கசப்போ வெறுப்போ அற்றவராக இருக்கிறார் என்பதை கவனித்த போது வியப்பாக இருந்தது.அரசாங்கத்தின் மூடப்படும் கதவுகளைக் கண்டு தனக்கு அச்சமில்லை தகவல் பெறும் உரிமைச் சட்டம் அரசின் மூடப்படும் கதவைத் திறக்கும் சாவியை நம் கைகளில் கொண்டு வந்து சேர்த்துள்ளது என்கிறார்.

சில மாதங்களுக்கு முன் ரலேகான் சித்தியில் திரு.அண்ணா ஹஸாரே அவர்களை சந்தித்து வணங்கி ஆசி பெற்றேன் என அவரிடம் கூறினேன்.தகவல் பெறும் உரிமைச் சட்டம் உருவாக அவரே காரணமாக இருந்தார் என்பதால் தான் நிகழ்த்திய சமரில் அண்ணாஜிக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது என நெகிழ்வுடன் குறிப்பிட்டார்.
அரசு இயந்திரம் பெரியதுதான் ஆனால் அது ஆம் ஆத்மிகளுக்கானதே.ஓர் எளிய மனிதனின் வெற்றி தார்மீக ரீதியில் மிகப் பெரியதே.சாமானியர்களின் தார்மீக பலத்தின் உருவமாக அண்ணா ஹஸாரே இருக்கிறார் என நினைத்துக் கொண்டேன்.இவ்விஷயம் துவங்கி எத்தனை ஆண்டுகள் ஆகின்றன என கேட்டேன்.பன்னிரண்டு ஆண்டுகள் என்றார்.ஒரு மகாமக காலம்.பாண்டவர்களின் வனவாச காலம்.
இப்போது போடப்படும் கட்டிட பிளான் எதற்கானது என கேட்டேன்.ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட இடத்தில் எனது மகனுக்காக கட்ட உத்தேசித்துள்ள இல்லத்தின் வரைபடம் என்றார்.அது கட்டப்படும் போது ஒரு வீடாக மட்டும் இருக்காது;ஓர் எளிய மனிதர் நியாயத்தினால் மட்டுமே அடைந்த வெற்றியின் சின்னமாகவும் இருக்கும் என எண்ணிக் கொண்டேன்.

Comments

sivanarul said…
article express the positive attitude of an amm admi.A good work by Prabu.
M.Sivakadaksham
sivakadaksham@gmail.com