Skip to main content

புத்தக விமர்சனம் 12


அழகியசிங்கர்



தேவேந்திரபூபதியின் 'நடுக்கடல் மௌனம்' என்ற கவிதைத் தொகுதியை எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். இத் தொகுதியில் உள்ள கவிதைகள் எல்லாம் என்னுடன் அமர்ந்து பேசும் என்று நினைத்தேன். ஆனால் அதற்கெல்லாம் கட்டுக்கடங்காமல் இக் கவிதைகள் எங்கோ சஞ்சாரித்துக் கொண்டிருக்கின்றனவோ என்றும் தோன்றியது. 

திரும்ப திரும்ப இக் கவிதைளைக் கூப்பிட்டு அதனூடன் உரையாட முயற்சி செய்தேன். தனக்குத் தெரிந்ததை சில கவிதைகள் சொல்லிச் சென்றன. பல கவிதைகள் ஒன்றும் சொல்லாமல் முறைத்தபடி சென்றுவிட்டன.

நான் என்ற தன்னை சாட்சியாக வைத்து பல கவிதைகள் எழுதிக் கொண்டே போகின்றன. சிலசமயம் சுயபுராணமாக இருக்குமோ என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் நிச்சயமாக சொல்ல முடியவில்லை.

கவிதையில் பூடகத் தன்மையைப் பற்றி குறிப்பிட விரும்புகிறேன். அது ஓரளவுதான் இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது. படிக்க வருகிற வாசகன் என்ன எழுதி உள்ளார் என்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமில்லாமல் இருப்பான்.

இத் தொகுப்பை மூன்று விதமாகப் பிரிக்கிறார் தேவேந்திரபூபதி. முதல் பகுதியை அலைமுகம் என்று பிரிக்கிறார். இரண்டாவது பகுதியை காயல் என்று பிரிக்கிறார். மூன்றாவது பகுதியை நங்கூரம் என்று பிரிக்கிறார். 

படிக்கும் வாசகனாகிய எனக்கு ஏன் இப்படிப் பிரிக்கிறார் என்பது புரியவே இல்லை எல்லாக் கவிதைகளையும் ஒரே மாதிரி இயற்றிக் கொண்டு போவதாகத்தான் தோன்றுகிறது.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது அலைமுகம் என்றால் கடலைச் சுற்றிய அவர் வாழ்க்கையைப் பற்றி கவிதை மூலம் சொல்ல வருகிறாரா என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் காயல் என்ற தலைப்பில் கவிதைகள் எழுதி இருப்பது எந்த அர்த்தத்தில் என்பது தெரியவில்லை. அதேபோல் நங்கூரம் என்ற தலைப்பில் எழுதப் பட்டதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.



பக்கம் 44ல் உள்ள 'தப்பிக்கும் கேள்விகள்' என்ற கவிதையை எடுத்துக் கொள்ளுங்கள்.

கவிதை ஆரம்பமாகும் இடத்தில்,
மிகச் சிறந்த கேள்விகளிலொன்று
என் மூன்றாம் தலைமுறை தாண்டியும் தொடர்கிறது
நான் யார் எனச் சொல்ல....

இதற்கான சரியான பதிலை யாராலும் சொல்ல முடியவில்லை. அதனால் இறுதியில் காம்யுவின் துப்பாக்கியைத் தேடுகிறார். இந்தக் கேள்வி சன்னல் வழியாக பதற்றத்துடன் தப்பி ஓடிவிடுகிறது. இங்கே அவர் சொல்ல வருவது பதற்றத்துடன் என்கிறார். இந்தக் கவிதையில் இன்னொரு இடத்தில், கடநத முறை வந்த பூனை, என்னை உற்றுப் பார்க்கிறது, அதே பூனைதானா என நானும், அவனேதானா எனப்பூனையும் மீச்சிறு கணத்திலிருந்தோம். இதைச் சொல்ல வரும்போது நான் யார் என்பதைக் கண்டுபிடிக்கவே மறந்து போய் விடுகிறது. தேவேந்திர பூபதி இப்படி பல கவிதைகள் எழுதி உள்ளார்.


பக்கம் 69ல் உள்ள ஒரு கவிதையைப் பாருங்கள்.

கவிதையின் தலைப்பு 'எதிரெதிர் நிஜம்'

எதிரெதிரே கண்ணாடிகளில்
என்னுருவம் பல்கிப்பெருகுவதால்
கடைசிப் பிம்பத்தில் முடித்திருத்தும்
சலூனில் இருந்து வெளியேறுகிறேன்
திருத்துனர் எதிர் கண்ணாடியின்
முதல் பிம்பத்தில் பணம் பெற்றுக்கொண்டிருந்தார்..



முடித்திருத்துவோர் அதற்குரிய கூலியைப் பெற்றுக் கொண்டு விட்டார். ஆனால் இக் கவிதை அது மட்டுமல்ல. முடித்திருத்துவதால் முகபாவம் பல மாற்றங்களுக்கு உட்படுகிறது. அவற்றை முடித்திருத்தம் இடத்தில் உள்ள கண்ணாடிகள் வெளிப்படுத்திய வண்ணம் இருக்கிறது. மனித சுபாவத்தை கண்ணாடிகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

துயரத்தையும் நளீனமாகக் குறிப்பிடுகிறார். பக்கம் 64ல் உள்ள குளவிக் கூடு என்ற கவிதையில் அனிமேஷன் குருவிகளை வளர்க்கும் மகனுக்கு தானியங்கள் பற்றி சொல்லிக் கொடுக்கிறார். 

இயற்கை சார்ந்த உணர்வுகளை இவர் கவிதைகள் மூலம் பல இடங்களில் குறிப்பிடுகிறார். 'கண் பட்டு கொள்வது (பக். 51)' என்ற கவிதையில் 'மழை இருந்தது மாதிரி நிலம் கிடந்தது' என்கிறார். மேற்கே நற்செய்தி (பக். 28) என்ற கவிதையில் என் வளைவில் பறவைகளும் மலர்களும் தனிமையில் இருக்கின்றன என்கிறார். 

இன்னும் மூன்று கவிதைகளைப் பற்றி சொல்ல வேண்டும். ஒன்று20ம் பக்கத்தில் உள்ள 'நீல நாளை வேண்டுதல்', இன்னொரு கவிதை பக்கம் 38ல் உள்ள 'சந்திராஷ்டமம்' என்ற கவிதை. மூன்றாவது கவிதை பக்கம் 59ல் 'சாவில் என்ன சந்தேகம்.' மூன்று கவிதைகளிலும் ஒரே வார்த்தையை பலவிதமாக மாற்றி மாற்றி கவிதை விளையாட்டை விளையாடிக்கிறார். 

இத் தொகுப்பு படிக்க வேண்டிய தொகுப்பு.



நடுக்கடல் மௌனம் - கவிதைகள் - பா தேவேந்திர பூபதி - பக்கம் : 71 - விலை ரூ.70 - காலச்சுவடு பதிப்பகம், 669 கே பி சாலை, நாகர்கோவில் 629001 - முதல் பதிப்பு : டிசம்பர் 2014 -தொடர்புக்கு :
தொலை பேசி எண் : 04652 - 278525

Comments