Skip to main content

கிராமீயப் பாடல்கள்



தொகுப்பாசிரியர் : வானமாமலை   


திருவல்லிக்கேணி செல்லும்போதெல்லாம் கோஷ் ஆஸ்பத்ரிக்கு எதிரில் உள்ள பிளாட்பார நடைபாதைக் கடைகளில் வாரிக் குவித்திருக்கும் புத்தகக் குவியல்களைப் பார்வையிடாமல் இருக்க மாட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்னால் அந்தக் கடைகளில் ஒன்றில் ஒரு அபூர்வமான புத்தகம் கிடைத்தது.  கிட்டத்தட்ட மோசமான நிலையில்தான் இந்தப் புத்தகம் கிடைத்தது. புத்தகம் உள்ளே கரையான் அடையாளம் பொட்டு பொட்டாக இருந்தது. 1964 ஆம் ஆண்டு வெளிவந்த புத்தகம் இது.  கிராமீயப் பாடல்கள் என்ற தலைப்பில் இப்புத்தகம் உள்ளது.  இப் புத்தகத்தைத் தொகுத்தவர் நா. வானமாமலை.  எஸ் எஸ் போத்தையா, எஸ் எம் கார்க்கி, பி எம் ராஜவேலு, குமாரி பி சொர்ணம், கவிஞர் எஸ் எஸ் சடையப்பன், கு சின்னப்ப பாரதி, வாழப்பாடி சந்திரன் என்று பலர் தொகுத்த கிராமீய்பாடல்களை மொத்தமாக தொகுத்திருக்கிறார் நா வானமாமலை.  

    இதுமாதிரி புத்தகம் திரும்பவும் வந்திருக்கிறதா என்பது தெரியவில்லை.  எந்தப் பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது என்பதும் தெரியவில்லை.  இதில் உள்ள எல்லா கிராமீயப் பாடல்களையும் தினமும் ஒன்றாக அடித்து முகநூலில் பதிவு செய்யலாமென்று நினைக்கிறேன்.  முதல் பாடலை ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். இதோ இரண்டாவது பாடலை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.    பிள்ளையார் பூசை

    உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள்.  அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள்.  ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும் பழமும் படைப்பார்கள்.  விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலததில் விளைய அருள் சுரக்குமாறு  அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம்.  விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார்.  இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார்.  இவர் சிவனையும், விஷ்ணுவையும், போலப் பணக்காரத் தெய்வமல்ல.  இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.

            காளையே ஏறு....
            முந்தி முந்தி வினாயகனே
            முக்கண்ணனார் தன் மகனே
            கந்தருக்கு முன் பிறந்த       
            காளைக் கணபதியே - (காளையே)
           
            வேலருக்கு முன் பிறந்த   
            விக்கினரே முன் நடவாய்,
            ஊருக்கு மேற்காண்டே
            ஒசந்த தொரு வெப்பாலை.
            வெப்பாலை மரத்தடியில்
            சப்பாணி பிள்ளையாராம்.
            சப்பாணி பிளளையார்க்கு,
            என்ன என்ன ஒப்பதமாம்
            நீரு முத்தும் தேங்காயாம்,
            நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
            கொத்தோடு தேங்காயாம்
            குலைநிறைய வாழைப்பழம்
            இத்தனையும் ஒப்பதமாம் - எங்க
            சப்பாணி பிள்ளையார்க்கு - (காளையே)

            வண்டு மொகராத - ஒரு
            வண்ண லட்சம் பூ வெடுத்து
            தும்மி மொகராத
            தொட்டு லட்சம் பூ வெடுத்து
            எறும்பு மொகராத
            எண்ணி லட்சம் பூவெடுத்து
            பாம்பு மொகராத       
            பத்து லட்சம் பூவெடுத்து
            வாரி வந்த பூவையெல்லாம்
            வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
            கொண்டு வந்த பூவையெல்லாம்
            கோபுரமா கொட்டி வச்சேன்
            குளத்திலே ஸ்நானம் பண்ணி
            கோலு போல நாமமிட்டு
            ஆத்துல ஸ்நானம் பண்ணி
            அருகு போல நாமமிட்டு
            பொழுதேறிப் போகுதிண்ணு
            வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
            இத்தனையும் ஒப்பதமாம் - எங்க
            சப்பாணிப பிள்ளையார்க்கு
 
வட்டார வழக்கு:

    மேற்காண்டே - மேற்கில்
    வெப்பாலை -  வேம்பு
    நிமித்தியம் - நைவேத்தியம்
    மொகராத - முகராத
    ஒரைச்சி - உரைத்து

சேகரித்தவர் : கவிஞர் சடையப்பன்                  இடம் : சேலம் மாவட்டம்

    பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை.  தீ வளர்த்து ஓமம் வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை.  ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன.  ஆனால் தமிழ் உழவர் பெருமக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை. 
       
           
           
           
   

Comments