Skip to main content

கிராமீயப் பாடல்கள் - 4



தொகுப்பாசிரியர் : வானமாமலை   

மாரியம்மன் பாட்டு 2




சின்ன முத்தாம் சிச்சிலுப்பை சீரான கொப்பளிப்பான் வண்ண முத்தாம் வரகுருவி வாரிவிட்டா தோணியிலே
மாரியம்மா தாயே, நீ மனமிரங்கித்தந்த பிச்சை,
தற்காத்து நீ கொடும்மா உன் சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா, இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசைந்த எல்லை என்று மாரி தனித்து அடித்தாள் கூடாரம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்.
முகத்திலே போட்ட முத்தை மாரி முடிச்சா இறக்கிடுவாள்
கழுத்திலே போட்ட முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்
பதக்கத்து முத்துக்களை மாரி மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்தை மாரி உடனே இறக்கிடுவாள்
தோளிலே போட்ட முத்தை மாரி துணிவாக இறக்கிடுவாள்.
 வயிற்றிலே போட்ட முத்தை மாரி வரிசையாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முத்தை மாரி முடித்திருந்து இறக்கிடுவாள்
கரண்டக்கால் முத்தை மாரி காணாமல் இறக்கிடுவாள்.
பாதத்து முத்தை மாரி பாராமல் இறக்கிடுவாள்.
ஐந்து சடை கொஞ்சிவர, மாரி அழகு சடைமார் பிறழ,
கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு குயில் இருந்து தாலாட்ட
 உன் பம்பை பிறந்ததம்மா பளிங்குமாம் மண்டபத்தில்
உன் உடுக்கைப் பிறந்ததம்மா உத்திராட்ச மேடையிலே
கரகம் பிறந்ததம்மா, கண்ண நல்லூர் மேடையிலே
சூலம் பிறந்ததம்மா துலுக்க மணி மண்டபத்தில்.
நாகம் குடைப் பிடிக்க, மாரியாத்தாளுக்கு நல்ல பாம்பு தாலாட்ட
முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு முதல் மண்டபமாம்
சக்தி உடையவளே சாம்பிராணி வாசகியே       
நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா நாடெங்கும் போட்டுவந்தாள்
உழக்கிலே முத்தெடுத்து மாரி ஊரெங்கும் போட்டு வந்தாள்
எல்லை கடந்தாளோ இருப்பங்குடி மாரியம்மா
முக்கட்டுப் பாதைகளாம், மூணாத்துத் தண்ணிகளாம்
மூணாத்துப் பாதையிலே இருந்து மாரியம்மா வரங் கொடுப்பாள்.
தங்கச் சரவிளக்காம் மாரிக்குத் தனித்திருக்கும் மண்டபமாம்
எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு எதிர்க்கக் கொடிமரமாம்.
தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத் தவசிருக்கும் மண்டபமாம்
சப்பரத்து மேலிருந்து சக்தி உள்ள மாரி அவ
சரசரமாமாலை, மாலை கனக்குதுணு மயங்கிவிட்டாள் மாரி
ஆத்துக்குள்ள அடை கிடக்கு அஞ்சு தலை நாகம்
அது ஆளைக் கண்டால் படமெடுக்கும் அம்மா சக்தி
வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
வெத்திலைக் கடடவே பறத்துங்கடி
வேரத்து  வார சந்தன மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
பாசிப் பயறு எடுத்து பத்தினியாள் கையெடுத்து
உழுந்தம் பயறெடுத்து உத்தமியாள் கையெடுத்து

சேகரித்தவர் : குமாரி பி சொர்ணம்     

 இடம் : சிவகிரி, நெல்லைமாரியம்மன்மாரியம்மன்
   
   

Comments