Skip to main content

எதையாவது சொல்லட்டுமா 100......

நீங்கள் இயற்கை வைத்தியரா?

                                                              அழகியசிங்கர்


.

நான் வங்கியில் சேர்ந்தபோதுதான் அந்த இயற்கை வைத்தியரைச் சந்தித்தேன்.  அவரும் என்னைப் போல் ஒரு வங்கி ஊழியர்.  ஊழியராக இருந்தாலும் அவர் இயற்கை வைத்தியர்.  அவர் அந்தத் துறைக்கு வந்ததும் தற்செயலான நிகழ்ச்சி.  அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தது.  அதைத் தடுக்க அலோபதி மருத்துவர்கள் கொடுத்த மாத்திரைகளை அவர் எடுத்துக்கொள்ள வில்லை.  அதற்குப் பதில் பச்சைக் காய்கறிகள், பழங்கள் சாப்பிட ஆரம்பித்தார்.  அப்போதுதான் அவர் இயற்கை வைத்தியத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  ஒரு புத்தகம் கூட எழுதினார்.  அது ஆயிரக்கணக்கில் விற்று அவர் பெயர் பிரபலமானது.  அந்தச் சமயத்தில் நான் கவிதைப் புத்தகம் போட்டதால் என் பெயர் இருக்கிற இடம் தெரியாமல் போய்விட்டது.

அவர் ஒழுங்காக பயிற்சி எடுத்துக்கொண்ட இயற்கை வைத்தியர் இல்லை.  இருந்தாலும் அவர் தன்னை இயற்கை வைத்தியர் என்று கூறிக்கொண்டார்.  பல ஊர்களுக்குச் சென்று இயற்சை வைத்தியத்தைப் பற்றி பிரச்சாரம் செய்தார்.   

அலுவலகத்தில் அவரை மதியம் சந்திப்பேன்.  அவர் கையில் காரேட், தக்காளிப் பழம், வெள்ளரிக்காய், தேங்காய் இருக்கும்.  அவற்றை பச்சையாக சாப்பிட்டுக் கொண்டிருப்பார்.  அலுவலக வாசலில் விற்கும் வாழைப்பழங்கள், பப்பாளிப்பழங்கள், கொய்யாப் பழங்கள் எல்லாம் வாங்கி வாங்கி வாயில் திணித்துக் கொள்வார்.  என்னையும் அவர் அப்படி சாப்பிடச் சொல்வார்.  அப்படி சாப்பிட்டால், ரத்த அழுத்தம் ஓடிப் போய்விடும் என்பார்.  தனக்கு அப்படி ஓடிப் போய்விட்டது என்றும் சொல்வார்.  எனக்கு அவர் சொல்ல சொல்ல ஆச்சரியமாக இருக்கும்.  நறுக் நறுக்கென்று தேங்காயை திருகிச் சாப்பிடும்போது பொறாமையாக இருக்கும்.

"சமைக்கிற உணவையே சாப்பிட மாட்டீர்களா?" என்று கேட்பேன்.

"தொட மாட்டேன்.  எனக்கு ஒரு நோயும் கிடையாது.  பிபியெல்லாம் பறந்து போய்விட்டது," என்பார்.

ஒருநாள் கான்டினில் அவர் பூரி வாங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டேன்.   மதியம் சிறிது நேரம் கழித்து வந்து திருட்டுத்தனமாக சாப்பிடுவதுபோல் தோன்றியது.  "என்ன இன்னிக்கு பூரி சாப்பிடுகிறீர்கள்? இயற்கை உணவு என்ன ஆயிற்று?" என்று கேட்டேன். 

அவர் சிரித்துக்கொண்டே, "எவ்வளவு வருஷம் சமைச்ச உணவையே சாப்பிட்டிருக்கிறோம்.  என்னிக்காவது சாப்பிடத் தோன்றும்,"என்பார்.

நானும் அவரைப் பார்த்துச் சிரிப்பேன்.  இந்த இயற்கை வைத்தியர் வித்தியாசமாக இருக்கிறாரே என்று நினைத்துக் கொள்வேன்.  அவர் டீ காப்பி எல்லாம் சாப்பிட மாட்டார்.  

நானும் அந்தச் சமயத்தில் பிபி மாத்திரை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  அவரைப் போல தைரியமாக இயற்கை உணவில் இறங்க எனக்கு தைரியம் இல்லாமல் இருந்தது.

நான் பார்த்துக்கொண்டிருக்கும்போதே அவர் வாழ்க்கையில் மடமடவென்று உயர்ந்து விட்டார்.  இயற்கை வைத்தியம் நடத்துவதற்காக ஒரு க்ளினிக் வைத்தார்.  அதில் பலர் நோய் தீர்வதற்கு சேர்ந்தார்கள்.  

எல்லோருக்கும் அவர் சொல்வது: பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுங்கள்.  சமைச்ச உணவைச்  சாப்பிடாதீங்க,  பால் எதுவும் குடிக்காதீங்க.  தீங்கு அது என்பதுதான்.  

அவர் சொல்வதை யாராலும் செய்து பார்க்க முடியாது.  எனக்குக் கூட சந்தேகமாக இருக்கும்.  வீட்டில சமைச்ச உணவை ஒரு அடி அடிக்கிறாரோ என்று.

அவரை மாதிரி காரெட்டைத் தின்பது, முட்டைக்கோûஸக் கொரிப்பதெல்லாம், வயிற்றை எப்போதும் நிரப்பாது.  

ஒரு முறை தஞ்சாவூரில உலகத் தமிழ் மாநாடு நடந்தது.  நானும் கலந்து கொண்டேன்.   என் புத்தகங்களை எல்லாம் எடுத்துக்கொண்டு விற்பதற்குக் கலந்து கொண்டேன்.  ஒரே இருமலுடன் ஒரு மூட்டை நிறையா புத்தகங்களை எல்லாம் கட்டி எடுத்துக்கொண்டு போனேன்.  எனக்கு ஒரு ஸ்டால் கொடுத்தார்கள்.  உண்மையில் என் ஸ்டாலுடன் இன்னொருவரையும் சேர்த்து விட்டார்கள்.  அந்த இன்னொருவர் வேற யாருமில்லை.  என்கூட பணிபுரியும் இயற்கை வைத்தியர்தான்.  எனக்கு திகைப்பாக இருந்தது.  கவிதைப் புத்தகங்கள் விற்கிற இடத்தில் இயற்கை வைத்தியர் என்ன செய்யப் போகிறார் என்று குழப்பமாக இருந்தது.  எங்கள் இருவரையும் சேர்க்க எப்படி விழா ஏற்பாடு செய்தவர்களுக்குத் தோன்றியது?

ஆனால் நான் புத்தகங்களைக் கொண்டு வந்ததுபோல் அவர் பல பொடிகளைப் பொட்டலங்களாக அள்ளிக் கொண்டு வந்தார்.  அவர் கடையைப் பார்த்துக்கொள்ள இரண்டு பேர்களை ஏற்பாடு செய்திருந்தார்.  ஸ்டைலாக முதல்நாளும் கடைசி நாளும் வந்தார். உண்மையில்  என் கடைக்கு ஏகப்பட்ட கூட்டம்.  என்னைப் பார்த்த இலக்கிய நண்பர்களுக்கெல்லாம் என் மேல் பொறாமை.  

"என்ன உன் கடையில் ஏகப்பட்ட கூட்டம்.  கவிதைப் புத்தகமெல்லாம் கலை கட்டுதா?" என்றார்கள்.

"அதெல்லாம் இல்லை.  வருபவர்கள் எல்லாம் பொட்டலம் பொட்டலமாய் வாங்கிக் கொண்டு போகிறார்கள்.  விருட்சம் பத்திரிகையைக் கூட யாரும் தொட மாட்டேங்கிறார்கள்,"என்றேன் சிரித்துக்கொண்டே.

அந்த முறை இயற்கை வைத்தியருக்கு ஏகப்பட்ட வருமானம்.  எனக்கு ஒன்றுமில்லை. யாரும் என் புத்தகத்தை மதிக்கவே இல்லை. மருந்துக்குக் கூட யாரும் புத்தகத்தைப் புரட்டியும் பார்க்கவும் இல்லை.  வாங்கவும் இல்லை.  அப்போதுதான் நினைத்துக் கொண்டேன்.  இதுமாதிரி உலகத் தமிழ் மாநாட்டுக்கெல்லாம் தலையே வைத்துப் படுக்கக் கூடாதென்று.  

இயற்கை வைத்தியர் அன்றிலிருந்து கொடிகட்டிப் பறக்க ஆரம்பித்தார்.  ஒரு கட்டத்தில் அவர் வேலையை விட்டுப் போய்விட்டார்.  அதன்பின் நான் அவரைச் சந்திப்பதில்லை.  ஆனால் அவர் தயாரிக்கும் பவுடர்கள் சின்ன சின்ன பிளாஸ்டிக் பைகளில் நாட்டு மருந்து கடைகளில் விற்றுக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன்.  அந்தக் கடைமகளில் அவர் எழுதிய புத்தகங்குளம் தொங்கிக் கொண்டிருக்கும். 

தஞ்சை பிரகாஷ் உடல்நிலை சரியில்லாதபோது அவர் மருத்துவமனையில்தான் தங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டார்.

என் கேள்வி?  உண்மையில் ரத்த அழுத்தம் என்றால் என்ன? அதற்கு தொடர்ந்து அலோபதி மருந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டுமா?  மருந்து எடுத்துக்கொள்பவர்கள் அதை நிறுத்தினால், என்ன மாதிரி பிரச்சினை வருமென்று சொல்ல முடியாது என்று பயமுறுத்துகிறார்கள்.   

என் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த ஒரு டீச்சருக்கு ரத்த அழுத்த நோய் பல ஆண்டுகளாக. மாத்திரைகளை  ஒருவாரம் சாப்பிடாமல் இருந்து பார்த்தார்.  அவருக்கு ஒரு பக்கம் பக்கவாத நோய் வந்துவிட்டது.  அவரால் அதிலிருந்து அவ்வளவு சுலபமாய்  குணமாக முடியவில்லை.  படுத்தப் படுக்கையாக ஆகிவிட்டார்.  

இப்போது அந்த இயற்கை வைத்தியர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.  ஆனால் அவர் நல்ல மனிதர்.

குறிப்பு : 

எதையாவது சொல்லட்டுமா என்ற பெயரில் நான் பெரிதும் சிறியதுமாக பல கட்டுரைகள் எழுதி உள்ளேன்.  நான் சந்தித்த மனிதர்கள், இடங்கள், புத்தகங்கள் என்ற பலவற்றை பதிவு செய்திருக்கிறேன்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக இத் தலைப்பில் நான் எழுதியது தொடராக அமிருதா இதழிலு; மாதம் ஒரு முறை தொடராகவும் வந்தது.  எனக்கு வாய்ப்ளித்த திலகவதி அவர்களுக்கும், தளவாய் சுந்தரத்திற்கும் என் நன்றி.  

இந்த எதையாவது சொல்லட்டுமா 100 என்ற இலக்கை எட்டி உள்ளது.  இதை ஒரு புத்தகமாகக் கொண்டு வர நான் முயற்சி செய்து வருகிறேன்.





Comments

krish said…
புத்தகமாக விரைவில் கொண்டு வாருங்கள்.