Skip to main content

கசடதபற ஜøலை 1971 - 10வது இதழ்


அம்மாவின் பொய்கள்

ஞானக்கூத்தன்



பெண்ணுடன் சிநேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற்கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறத் தவிடடுக்காக
வாங்கினேன் என்னை என்றாய்
எத்தனைப் பொய்க் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்?
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா
எனக்கினி பொய்கள் தேவை
இல்லை யென்றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா?
உன் பிள்ளை உன்னை விட்டு
வேறெங்கு பெறுவான் பொய்கள்?

ஒருமுறை ஞானக்கூத்தன் சொன்னார்.  எழுத்து பத்திரிகையில் 
அவர் கவிதைகள் வரவில்லை என்று.  எனக்கு அதைக் கேட்டபோது நம்பமுடியாமல் இருந்தது.  சிசு செல்லப்பாவுடன் அவர் நெருங்கி பழகியிருந்தாலும், ஞானக்கூத்தன் கவிதைகளை ஏன் அவர் பிரசுரம் செய்யவில்லை என்று தெரியவில்லை.

ஞானக்கூத்தன் கவிதைகள் அதன் பின் 'நடை', 'கசடதபற' பத்திரிகைகளில் வெளிவந்தன.  கசடதபற வரும்போது ஞானக்கூத்தன் ஒரு முக்கியமான கவிஞர்.  முதன்மையான கவிஞரும் கூட.  

'அம்மாவின் பொய்கள்' என்ற இந்தக் கவிதை எல்லோராலும் பேசப்பட்ட ஒரு முக்கியமான கவிதை. இதில் ஒரு வரி எழுதியிருக்கிறார்: வயதானோர்களுக்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும் பொறுப்பினி அரசாங்கத்தைச் சார்ந்ததாய்க் கருதினாயா? என்று.

10வது இதழ் கசடதபற அட்டையில் இடம் பெற்ற கவிதை இது.

Comments