அழகியசிங்கர்
லெகின்ஸ் ஆபாசம் என்ற தலைப்பில் இந்த வார குமுதம் ரிப்போர்ட்டர் ஒரு கட்டுரையை பிரசுரம் செய்திருந்தது. அந்தக் கட்டுரையை வெளியிட்ட விதம் இன்னும் ஆபாசமாக இருந்தது. அதைப் படிக்கும்போது எல்லாமே ஆபாசமாக இருந்தது.
ஒருமுறை ஜே கிருஷ்ணமூர்த்தியை அவருக்கு உதவி செய்யும் பெண் ஒருவள் ஒரு கேள்வி கேட்கிறாள். "கிருஷ்ணாஜி. உங்களுக்கு செக்ஸ் உணர்வே இல்லையா?" என்பதுதான் கேள்வி. அதற்கு அவர் பதில் சொல்கிறார்: எனக்கு ஒரு பெண்ணின் கையைத் தொடும்போதே அந்த உணர்வு ஏற்பட்டுவிடும் என்று. அவருடைய பதில் என்னை பலவாறு சிந்திக்கத் தூண்டியது.
உண்மையில் ஒரு பெண்ணைப் பார்க்கும்போதோ தொடும்போதோ ஒரு ஆணிற்கு ஏற்படும் இயல்பான நிலையில் செக்ஸ÷ம் ஒரு அங்கம்தான். இதில் எந்த ஆணும் தப்பித்து விட முடியாமா என்பது தெரியவில்லை.
ஒரு பெண் எந்த ஆடையைப் போட்டிருந்தாலும் ஆணின் கபட பார்வையிலிருந்து தப்ப முடியாது. நான் அலுவலகத்தில் பணிபுரிந்தபோது டீ ஷர்ட் போட்டுக்கொண்டு அலுவலகத்திற்கு பணிபுரிய ஒருவர் வந்திருந்தார். மேலதிகாரி அவரைக் கூப்பிட்டு, "இது மாதிரி டிரஸ் செய்துகொண்டு அலுவலகத்திற்கு வரக்கூடாது," என்று மிரட்டி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.
ஆனால் விளையாட்டில் கலந்து கொள்ளும் ஒரு பணிபுரியும் பெண்மணியைப் பார்த்து மேலதிகாரி யாரும் ஒன்றும் சொல்வதில்லை. அப்படி வருபவர் 'பேன்ட், ஷர்ட்' போட்டுக்கொண்டு வருவார்.
ஒரு ஆணின் கண்களில் ஒரு பெண் படாமல் தப்பிக்க முடியாது. அதனால் எல்லா ஆண்களின் பார்வையும் மோசமானது என்றும் சொல்லமுடியாது. எனக்கு இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது. நானும் ஒரு நண்பனும் அக்கொளன்டன்சி கற்றுக்கொள்ள ஒரு ஆசிரியர் வீட்டிற்குச் சென்றோம். சொல்லிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்போது ஆசிரியருடைய தங்கை அந்தப் பக்கம் தலையைக் காட்டிவிட்டாள். அவள் எங்களைத் தாண்டி எதோ எடுத்துக்கொண்டு போக வேண்டும். வாத்தியார் கண் ஜாடை மூலமாக அந்தப் பெண் ணை எங்களைத் தாண்டி வரவேண்டாம் என்று தடுத்து விட்டார்.
இந்தக் காட்சியை நினைத்துப் பார்த்து நானும், நண்பரும் ஒவ்வொருமுறையும் சிரிப்போம். அந்தச் சமயத்தில் உண்மையில் நாங்கள் நல்லவர்கள். எந்த கெட்ட எண்ணமும் இல்லாதவர்கள்.
தமிழ்நாட்டில் பஸ்ஸில் சென்றால் ஒரு பெண் பக்கத்தில் ஒரு ஆண் அமர்ந்துகொண்டு செல்லமுடியாது. ஆனால் வடநாட்டில் ஏன் பெங்களூரில் ஒரு பஸ்ஸில் சென்றால் எந்தப் பெண்ணும் பக்கத்தில் அமர்ந்திருக்கும் ஆணைப் பார்த்து எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. முதலில் நான் டில்லி சென்றபோது இதைப் பார்த்து எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பெண்கள் சகஜமாக உட்கார்ந்துகொண்டு பயணம் செய்தார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருந்தால் ஏதோ ஆகிவிட்டதுபோல் பெண்கள் லபோ திபோ என்று கத்த ஆரம்பித்து விடுவார்கள். அதுவும் மாயவரம் பக்கமாக உள்ள கிராமத்தில் நீங்கள் பஸ்ஸில் பயணம் செய்தால் தெரிந்துகொள்ளலாம்.
இப்படிச் சொல்வதால் பெண்கள் பக்கம் நியாயம் இல்லை என்று சொல்லவில்லை. பெண்களை இடிப்பதற்காகவே பஸ்ஸில் பயணம் செய்யும் ஆண்களும் உண்டு.
சமீபத்தில் நான் என் வங்கியில் பாஸ்புக்கில் என்டிரி போடச் சென்றேன். அப்போது கவுண்டரில் உட்கார்ந்திருந்த பெண்மணி சொன்ன விஷயம் என்னைத் திகைக்க வைத்தது.
"சார், என்னதான் சொல்லுங்கள்...ராத்திரி ஆகிவிட்டால் வீதியில் நாங்கள் ஆண் துணையில்லாமல் வெளியே வர முடியுமா?"
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் அவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருப்பதாகப் படுகிறது. இது மாதிரி ஒரு நிகழ்வு நடக்கும்போது பெண்கள் எதுமாதிரி உடை போட்டுக்கொண்டிருந்தால் என்ன...
ஒரு பெண்ணின் பிரச்சினை ஆணின் கண்களுக்குத் தெரியாமல் பெண்ணின் எந்தப் பகுதியும் தெரியாமல் இருக்க வேண்டும் என்பதுதான். அதற்கேற்றாற் போல் துணியை அவர்கள் அணிந்துகொள்ள வேண்டும். ஆனால் ஆணின் பார்வையோ பெண்ணின் எந்தப் பகுதி கண்ணில் படுகிறது என்பதை ஆராய்வதுதான். இந்த சங்கடம் ஒரு பெண்ணிற்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும். அதனால் எந்தப் பெண்ணிற்கும் ஆணைப் பார்த்தால் மரியாதை பெரிதாக இருக்காது.
ஆனால் உண்மையில் ஒரு பெண் ஒரு ஆணை எப்படிப் பார்க்கிறாள் என்பதும் தெரிந்துகொள்ள வேண்டும். ஆணைப் பார்க்க பெண்ணும் விரும்புவாளா?
இன்று மதியம் வெங்கடேஸ்வரா போளி ஸ்டாலில் மசால்வடை வாங்கச் சென்றேன். எப்போதும் அங்கே ஆண்கள்தான் தின்பண்டங்களை எடுத்துக் கொடுப்பார்கள். இன்று அதிசயமாக ஒரு பெண் உதவி செய்து கொண்டிருந்தாள். நான் வீடு வரும்வரை அந்தப் பெண் அத்தனை ஆண்களின் நடுவில் என்ன யோஜனை செய்து கொண்டு இருப்பாள் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். அந்தப் பெண் தொடர்ந்து அங்கு பணிபுரிவாளா என்ற சந்தேகமும் எனக்குத் தோன்றியது.
ஒரு கேள்வி பதில் கூட்டத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி பிரமாதமாக உடை உடுத்திக்கொண்டு அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து கூட்டத்தில் உள்ள ஒருவர் ஒரு கேள்வி கேட்டார். "நீங்கள் ஏன் இப்படி டிரஸ் செய்து கொண்டு வருகிறீர்கள்?" என்று. எனக்கோ திகைப்பு. எப்படி இதற்கு பதில் சொல்லப் போகிறார் என்ற திகைப்புதான். ஆனால் அவர் பதிலைக் கேட்டு நான் அசந்து விட்டேன். "மற்றவர்களுக்கு மரியாதைக் கொடுப்பதற்குத்தான் இதுமாதிரி டிரஸ் செய்து கொள்கிறேன்," என்று.
அதைத்தான் நானும் பெண்களிடம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் வீட்டில் எப்படி வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் வெளியே வரும்போது, உங்களைப் பார்க்கும்போது மற்றவர்களுக்கு மரியாதை வரவேண்டும். இப்படி சொல்வது ஆண்களுக்கும் சேர்த்துதான்.
Comments