அழகியசிங்கர்
விருட்சம் இலக்கியச் சந்திப்பின் 16வது கூட்டம் நேற்று நடந்தது.
இரண்டு முக்கிய ஆவணப்படங்களை நேற்று ஒளி பரப்பினோம். ஒரு படம் அசோகமித்திரன் அவர்களிள் ஆவணப் படம். இன்னொன்று ஞானக்கூத்தன் படம். அசோகமித்ரன் அவணப்படத்தை கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்கு முன் அம்ஷன்குமார் இயற்றி உள்ளார். இக் கூட்டம் டிஸ்கவரி புத்தக பேலஸில் நடந்தது.
அசோகமித்திரன் பிறந்தநாள் கொண்டாட்டமாக அவர் கேக் வெட்டினார். பின் அம்ஷன்குமார் அவர் ஆவணப்படத்தைத் தயாரித்த விதத்தைப் பற்றி தன் அனுபவங்களைளப் பகர்ந்து கொண்டார். இந்த ஆவணப்படத்தைத் தயாரிப்பதற்காக அசோகமித்திரன் வாழ்ந்த இடமான ஹைதராபாத்திற்கே சென்று எடுத்திருக்கிறார்.
அவர் ஆவணப்படத்தைப் பார்க்கும்போது அது ஒரு கதைபோல் எடுக்கப்பட்டிருந்தது. அம்ஷன் குமார் குறிப்பிட்டார். ஒரு ஆவணப்படத்தை எடுக்கும்போது அந்தப் படத்தின் முக்கிய நாயகரான அசோகமித்திரன் இருப்பது ஆவணப்படத்திற்கு அதிக வலு சேர்க்கும் என்று. அவரைப் பொறுத்தவரை இது எட்டாவது படம் என்றார். 30 நிமிடங்கள் போனதே தெரியாமல் சுவாரஸியமான படமாக அது இருந்தது குறிப்பிடத்தக்கது.
விஷ்ணுபுரம் இலக்கியம் சார்பாக வினோத் அவர்கள் ஞானக்கூத்தன் பற்றி ஒரு ஆவணப்படத்தை எடுத்திருந்தார். இது அவருடைய முதல் முயற்சி. 40 நிமிடங்களுக்கு மேல் இப்படம் எடுத்திருந்தார். சில குறைபாடுகள் இந்த ஆவணப்படத்தில் தெரிந்தாலும் திறமையாக எடுக்கப்பட்ட படம். அம்ஷன்குமார் படம் ஒரு கதைபோல் இருந்தது, ஆனால் வினோத் படத்தில் எல்லோருமு; மாறி மாறி ஞானக்கூத்தன் பற்றியும், அவர் கவிதைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பதாகப் பட்டது.
ஆவணப்படத்தில் பேச்சு என்பது முக்கியமாகப் படுகிறது. அம்ஷன்குமார் படத்தில் சற்று குறைவாகவும் ஞானக்கூத்தன் ஆவணப்படத்தில் சற்று தூக்கலாகவும் தெரிந்தது. மேலும் ஞானக்கூத்தன் கோயிலில் பேசுகிற பேச்சு சற்று இரைச்சலாக காதில் விழுந்தது. அதற்குக் காரணம் அந்தப் பகுதி எடுக்கும்போது எதிர் காற்று அடித்துக் கொண்டிருந்ததாக வினோத் குறிப்பிட்டார்.
இன்னும் சில இடங்களில் ஆவணப்படத்தில் உள்ள வெளிச்சம் சற்று குறைந்து போனது போல் தோன்றியது. ஆனாலும் வினோத் திறமையாக படத்தை எடுத்திருந்தார். அவர் குறைவாகவே இந்த ஆவணப்படத்தை எடுக்க பணம் செலவழித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த ஆவணப்படத்தைப் பார்க்க வினோத் குடும்பமே வந்திருந்தது. 'இந்தப் படம் பார்க்க ஒரு கவிதை மாதிரி இருந்தது,' என்று அசோகமித்திரன் தன் கருத்தை வெளிப்படுத்தினார்.
இந்த இரண்டு ஆவணப்படங்களைப் பார்த்து முடித்தவுடன், நான் க்ளிக் ரவி எடுத்த அசோகமித்திரன் 2012 என்ற விடியோ படத்தை யும் ஒளி பரப்பினேன். கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு மேல் எல்லோரும் பாரதியார் இல்லத்தில் பேசியதை நினைவு கூர்வது போல் இருந்தது அந்த விடியோ படம்.
இந்தத் தருணத்தில் எனக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. குறும்படம், ஆவணப்படம், விடியோ படம் மூன்றுக்கும் என்ன வித்தியாசம்.
குறும்படம் நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு கதையை அடிப்படையாக வைத்து எடுப்பது. அதில் எல்லாம் செயற்கையாக ஒரு காட்சியை உருவகப்படுத்த வேண்டும். படத்தில் ஆரம்பம் முடிவு எல்லாம் இருக்கும். ஒரு சினிமாவின் சிறு அம்சமாக அது தெரியவரும்.
ஆவணப்படம் என்பது யார் பேரில் படம் தயாரிக்கப் படுகிறதோ அவரைப் பற்றி பல விபரங்களுடன் படத்தை எடுக்க வேண்டும. இதில் பெரும்பாலும் உண்மை கலந்த விபரம் இருக்கும்.
மூன்றாவதாகிய விடியோ படத்தில் ஒரு காட்சி நம் முன் நடப்பதை அப்படியே பதிவு செய்வது. விடியோ படம் எடுப்பது செலவு குறைவு. அசோகமித்திரன் 2012 படம் எடுக்க நான் செலவு செய்த தொகை 6500 ரூபாய். ஆனால் குறும்படமும், ஆவணப்படமும் அதிகம் செலவு வைத்துவிடும். க்ளிக் ரவியால் பதிவு செய்யப்பட்ட விடியோ படத்தில் பேசுபவர்கள் பேச்சு தெளிவாக எல்லோருக்கும் கேட்கும்படி விழுகிறது. இது எனக்கு ஆச்சரியம். எடிட்டிங் அது இது என்று மண்டையைப் பிய்த்துக்கொள்ள வேண்டாம். என்னால் சுலபமாய் பல விடியோ படங்களை ஆவணப்படம் போல் எடுத்துவிட முடியும் என்று தோன்றுகிறது
.
அசோகமித்திரன் 2012 விடியோ படத்தில் கடைசி காட்சியில் அசோகமித்திரன் பேசுவதை எல்லோரும் ரசித்து சிரித்தோம்.
பொதுவாக மூன்று படங்களையும் எல்லோரும் ரசித்தோம். ஞானக்கூத்தன் ஆவணப்படத்தில் கடைசியில் ஞானக்கூத்தன் அவருடைய கவிதை வாசிப்பார். அதைக் கேட்டு எல்லோரும் ரசித்து கைத்தட்டினார்கள்.
அசோகமித்திரன் 2012 விடியோ படத்தில் கடைசி காட்சியில் அசோகமித்திரன் பேசுவதை எல்லோரும் ரசித்து சிரித்தோம்.
பொதுவாக மூன்று படங்களையும் எல்லோரும் ரசித்தோம். ஞானக்கூத்தன் ஆவணப்படத்தில் கடைசியில் ஞானக்கூத்தன் அவருடைய கவிதை வாசிப்பார். அதைக் கேட்டு எல்லோரும் ரசித்து கைத்தட்டினார்கள்.
தொடர்ந்து ஆவணப்படங்கள் இப்படி ஒளி பரப்ப முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். தமிழில் ஏகப்பட்ட ஆவணப்படங்கள் பலரால் எடுக்கப்படுகின்றன. மேலும் வேறு மொழி ஆவணப்படங்கள் சாகித்திய அக்காதெமி போன்ற அமைப்புகள் எடுத்துள்ளன. ஆனால் அவற்றை எல்லாம் ஒளிபரப்ப முடியுமா என்பது தெரியவில்லை.
Comments