Skip to main content

எதையாவது சொல்லட்டுமா? ....101

 எதையாவது சொல்லட்டுமா? ....101

 அழகியசிங்கர்
 
 
 எனக்கு கார் வாங்கும் எண்ணமே நானோ கார் பற்றிய விளம்பரம் பார்த்தவுடன்தான் தோன்றியது.  ஒரு லட்சம் ரூபாய்ககு ஒரு காரா என்ற வியப்புத்தான் அதற்குக் காரணம்.  ஆனால் நான் முயற்சி செய்தபோது அதன் விலை ஒரு லட்சத்து முப்பத்திரண்டாயிரம் ரூபாய் வரை போய்விட்டது. 

 வேளச்சேரியில் உள்ள அந்தக் கடையின் முன்னால் நாநோ காரை எடுத்துக்கொண்டு வரும்போது, நான், மனைவி, மாமியார் மூவரும் கார் முன்னால் நின்று ஒரு போட்டோ எடுத்துக்கொண்டோம். அந்த மாதிரி போட்டோவை கார் விற்பவர்களே எடுத்து எங்கள் கையில் கொடுத்தார்கள். 

 காரை எடுத்துக்கொண்டு போக ஒரு டிரைவரை ஏற்பாடு செய்தேன்.  அவருக்கு ரூ.200 கொடுத்தேன்.  காரை க்ரோம்பேட்டை வரைச் சென்று என் மனைவியின் இளைய சகோதரி வீட்டிற்குப் போனோம்.  üüநானோ வாங்கிவிட்டேன்.  நானோ வாங்கிவிட்டேன்,ýý என்று பெருமை அடித்துக் கொண்டேன்.

 அதன் பின் தான் பிரச்சினை ஆரம்பித்தது.  காரை எடுத்துக் கொண்டு போய் என் பெண் வீட்டில் போய் வைத்தேன்.  என் வீட்டில் காரை நிறுத்த ரோடிற்குத்தான் செல்ல வேண்டும்.  போஸ்டல் காலனியில் நாங்கள் இருந்தபோது எங்கள் இடம் ஒரு குறுகிய இடம். டூ வீலரை வைத்துக்கொள்ளவே இடம் போதாது. 

 நான் அப்போது மயிலாடுதுறையில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  வாரம் ஒரு முறை சென்னை வருவேன்.  பெண் வீட்டிற்குச் சென்று நானோ காரை கற்றுக்கொள்ள முயற்சி செய்வேன்.  என் மருமகன்தான் எனக்குக் கற்றுக்கொடுக்க வருவார்.  அவருக்கு என்கூட வந்து கற்றுத் தரவே விருப்பம் இருக்காது.  அதனால் பல வாரங்கள் விட்டுப் போய்விடும். 

 பின் நான் இருக்கும் இடத்திற்கு நானோ காரை எடுத்துக் கொண்டு வந்தேன்.  நான் ஓட்டவில்லை.  யார் மூலமோ? வாசல் கேட் வழியாக வண்டியை வைத்தேன்.  காலையில் எழுந்து ஓட்டலாம் என்று வண்டியைத் தொட்டேன்.  நானோ கார் முன்னால் இன்னொரு கார் நின்றிருந்தது.  பின் பக்கமாக வண்டியை தள்ளும்போது, வண்டி பின்னால் உள்ள கார் மீது மோதி விட்டது.  என் நானோ காருக்கு ரோஷம் அதிகம்.  அது அதன் பின்னால் அசையாமல் நின்று விட்டது.

எடுத்துப் போக ஆள் கூப்பிட வேண்டியாகி விட்டது.  பணம பழுத்து விட்டது.
 நான் மயிலாடுதுறையிலிருந்து சென்னை வந்து விட்டேன்.  நானோ டூ வீலரில் போவேன்.  நானோ காரோ வாசலில் என்னைப் பார்த்து ஏக்கத்துடன் நின்று கொண்டிருக்கும். 

 அதன் பின் நாங்கள் வேற வீடு மாறினோம்.  கார் வைத்துக்கொள்ளும்படி ஒரு வீடு.  அங்கு போனபின்தான் நான் காரை ஓட்டக் கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். 

 காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு போகும்போது திக் திக் என்று அடித்துக் கொள்ளும். 

 வண்டியை கேட் வழியாக மெதுவாக மெதுவாக இறக்குவேன்.  அதற்குள் மனதிற்குள் ஆயிரத்தெட்டு கற்பளைகள் ஓடும்.  எங்காவது கார் இடித்து விடுமோ என்ற விபரீத கற்பனைதான்.

 இப்படியாக சிரமப்பட்டு நானோ காரை எடுத்துக்கொண்டு பெண்கள் படிக்கும் கார்ப்பரேஷன் பள்ளி உள்ள இடத்தில் வைத்துவிட்டு வாக் போவேன்.  அப்போது என் கற்பனை முழுவதும் காரை ஓட்டுவது பற்றி இருக்கும்.

 ஒருமுறை நானோ காரை இரண்டாவது கேட் வழியாக உள்ளே வைக்க முயற்சிக்கும்போது கேட்டின் மீது நன்றாக இடித்து விட்டது.  அதன் சத்தம் பயங்கரமாக இருந்தது.  சத்த அதிர்வில் தெரு விளக்கு உடைந்து கீழே விழுந்து விட்டது.  கேட் சரி செய்ய 2000 ரூபாய் ஆயிற்று.  ஆனால் நானோ காருக்கு ஒன்றும் ஆகவில்லை.  அந்த விபத்தைப் பார்த்துவிட்டு என் மனைவி பயந்தே விட்டாள்.

 நான் காரை அப்படியே வைத்துவிட்டு வழக்கமாக பயன்படுத்தும் டூ வீலரை பயன் படுத்தினேன்.  ரொம்ப மாதஙகள் நானோ காரை எடுக்கவே எனக்கு விருப்பமில்லை.

 பிறகு ஒருநாள் காரை எடுத்தபோது, கார் நகரவில்லை.  காரின் பாட்டரி போய்விட்டது.  செலவு. 

 இப்படி பயந்தபடி காரை ஓட்டினால் என்ன ஆவது?  ஒரு முறை என் சகோதரன்தான் என்னை திட்டினான்.  'தைரியமாக காரை எடுத்து ஓட்டிக்கொண்டு அடையாரில் உள்ள என் வீட்டிற்கு வா.' என்றான். 

அவன் சொன்னபடி காரை ஓட்டிக்கொண்டு போனேன்.  அப்படிச் சென்றதால் தைரியம் கொஞ்சம் துளிர்த்தது.  ஆனாலும், அவனைப் போல் தைரியமாக காரை என்னால் எடுத்துப் போக முடியவில்லை.  அவனிடம் சைக்கிள் இல்லை, டூ வீலர் இல்லை, இரண்டு கார்கள் மட்டும்தான் உண்டு.  தெரு முனைக்குக் கூட காரை எடுத்துக்கொண்டு போவான். 

 எனனிடமும் சைக்கிள் இல்லை.  ஆனால் டூ வீலர் உண்டு .  எப்போதும் டூ வீலரை எடுத்து எடுத்து ஓட்டுவேன்.  உண்மையில் இப்போது சைக்கிள் இருந்தால் என்னால் ஓட்ட முடியாது.  இதை நினைத்து நான் வருத்தப்படுவதுண்டு.  அதேபோல் என் சகோதரனால் டூ வீலரைக் கூட ஓட்ட முடியாது.  

 இந்தத் தருணத்தில்தான் என் நானோ காரை சர்வீஸிற்குக் கொடுத்தேன்.  அந்த இடத்தில் புது நானோ கார் வாங்கிக் கொள்கிறீரா என்று பேரம் நடந்தது.  நானும் யோசித்து நானோ டுவிஸ்ட் என்ற காரை வாங்கினேன்.  மொத்தம் இரண்டு லட்சம் பழைய காருடன் சேர்த்துக் கொடுத்தேன்.  பலவிதங்களில் இந்த புது நானோ டுவிஸ்ட் பிரமாதமாக இருந்தது.  எளிதாக திரும்ப பவர் ஸ்டிரிங். ஏசி.  உண்மையில் ஓட்ட ரொம்ப பிடித்திருந்தது.  எனக்குப் பிடித்த கலரில் நானோ வாங்கினேன்.

 அதை எடுத்துக்கொண்டு ஓட்டினேன்.  இப்போது எதற்காக இதையெல்லாம் சொல்கிறேன் என்றால் ஆயிரம் கிலோமீட்டார்கள் ஓட்டிவிட்டேன். ஏப்ரல் மாதம் இறுதியில்தான் இந்த வண்டியை வாங்கினேன். இன்னும் கூட மேட்டில் வண்டி போய்க்கொண்டிருக்கும்போது நிற்கும்படி நேர்ந்தால் முன்னாலும் பின்னாலும் வண்டிகள் அணிவகுத்து நின்று கொண்டிருந்தால், என் வண்டியை லாவகமாக எடுத்துக்கொண்டு போக எனக்கு தைரியம் இருக்காது என்று நினைக்கிறேன்.

 கார் வைத்திருக்கும் ஒவ்வொருவரையும் பார்த்து அது மாதிரி சந்தர்ப்பத்தில் எப்படி காரை ஓட்டுவது என்று பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
 ஒவ்வொரு வாரமும் நான் காரை எடுத்துக்கொண்டு மடிப்பாக்கம் உள்ள என் பெண் வீட்டிற்குச் செல்வேன்.  கூட வரும் என் மனைவி பயந்தபடி வருவாள். 
 
 
"ஒன்றும் ஆகாது.  உன் பயத்திற்கு அளவே இல்லை," என்பேன். 

 காரை ஓட்டிக்கொண்டு போகும்போது என்னைத் தாண்டிப் போகும் வாகனங்களை விட்டுவிடுவேன்.  சிலசமயம் சைக்கிளில் செல்பவன் கூட என்னை தாண்டிப் போவான்.  பாதசாரிகளை கவனித்தபடியே செல்வேன்.  ஆட்டோ, வாடகை வண்டிக்காரர்களை எல்லாம் மரியாதையோடு நடத்துவேன்.  பல்லவன் வந்தால் முதலில் மரியாதைக் கொடுத்து அனுப்புவேன்.  40 கிலோ மீட்டர் வேகத்தில்தான் வண்டியை ஓட்டுவேன்.

 வண்டியை வீட்டில் ஏற்றுவதும் இறக்குவதும் முன் இருந்த அச்சம் எனக்கு இப்போது இல்லை.  முன்பு பழைய நானோ காரில் நான் ஆயிரம் கிலோ மீட்டர் கூட எட்டவில்லை.  ஆனால் புதிய நானோ டுவிஸ்டில் ஆயிரம் கிலோ மீட்டர்கள் தாண்டி விட்டேன். 
 

Comments

சார்...தாங்கள் இப்போது ஆயிரம் கிமீ ஓட்டிய அபூர்வ சாரதி ஆனதில் மிக்க மகிழ்ச்சி.. ஒரு தடவை உங்கள் நானோ காரில் நானும் வந்த போது நீங்கள் ஓட்டிய லாவகம் இன்னும் நினைவில் இருக்கிறது...