வலி
தேநீர் விருந்தொன்றில் சந்தித்தேன்
அந்த இளைஞர்களையும் யுவதிகளையும்.
இன்முகத்தோடு வேலைகளை
இழுத்துப் போட்டுச் செய்தார்கள்.
வேடிக்கைப் பேச்சால்
விருந்தினர்களைக் கவர்ந்தார்கள் .
“பக்கத்தில் குடிவந்திருக்கிறார்கள்
புலம் பெயர்ந்தவர்கள்”
தணிந்த குரலில் குனிந்து என்னிடம்
நண்பர் சொன்னது
காலிக் கோப்பைகளை எடுக்கவந்தவன்
காதுகளில் விழுந்து விட
புன்முறுவலுடன் நகர்ந்தான்.
‘கலவரங்களில்
குடும்பங்களை
இழந்தவர்கள்’
ஏறிட்டே பார்க்க இயலவில்லை
அறிந்த பின்
அந்தப் பிரகாசமான முகங்களை.
வரலாற்றின்
கருப்புப் பக்கங்களால் காயப்பட்டவர்கள்,
போதுமென்கிற அளவுக்கு
வாழ்நாளின் பெருந்துயர்களைப்
பார்த்து விட்டவர்கள்
ஒருபொழுதும் அதைப் பற்றி பேசமட்டுமல்ல
காட்டிக்
கொள்ளவும்
விரும்புவதில்லை என்று புரிந்தது.
விருந்தின் முடிவில் அவர்கள் பாடிய பாடல்
என் நாடி நரம்புகளிலிருந்து வெளியேற
ஒரு யுகம் ஆகலாம்.
அப்படி இருக்கையில்
அவர்களும் அழக் கூடும்
தம் நண்பர்களும் உடனில்லாத..
யாரும் பார்க்காத பொழுதுகளில்
Comments