Skip to main content

ஆ. கிருஷ்ண குமார்.

ஊதா நிற தொங்கட்டான்
----------------------------------------------


தொங்கட்டான்கள்
அழகானவை

தொங்கட்டான்களுக்கு
பாரம் குறைவு

தொங்கட்டான்களில்
கருமை இளஞ்சிவப்பு
ஊதா
நிறங்கள்
எதனோடும் ஈடு சொல்ல இயலாதவை

இதன்
பொருட்டே
தொங்கட்டான்களை
வலிந்து சூட்டிக்கொள்கிறேன்.

கூர் மழுங்கிய
கரு நிற தொங்கட்டானின்
சிமிட்டலில்
மெல்லிய கருணை
பிறந்து அழியும்

இளஞ்சிவப்பு நிற தொங்கட்டானின்
குறுகுறுவென்ற
ஆட்டலில்
அருவ இசையொன்றின் பிரதியை
உணரலாம்

பிடித்து சூட்டுவதால்
ஊதா நிற தொங்கட்டான்
காதகேசம் சிக்கி
நெருடும்.

பிரக்ஞை சிதறிய
ஒரு சிறு கணத்தில்கூட
அவை
இருப்பையே தெரிவிப்பதில்லை
என்பதால்
எனக்கு முக்கியமாகிறது.

கடைசியாக
ஒரு நாள்
உணர்ந்தறிந்தேன்
அவை பார்ப்பதற்காக
மட்டுமே
அழகானவை என்றும்
பாம்படங்களின்
தோற்றம் என்றும்

Comments