Skip to main content

சில குறிப்புகள்...1



அழகியசிங்கர்


    21.09.2013 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மையிலாப்பூரில் உள்ள கோகுலே ஹாலில் ஆரம்பித்து 80 ஆண்டுகள் முடிந்த மணிக்கொடி பத்திரிகைக்கு ஒரு கூட்டம் நடந்தது.  மணிக்கொடி எழுத்தாளர் சிட்டியின் புதல்வர் போனில் அழைத்ததால் சென்றேன்.  அரங்கத்தில் மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் இடம் பெற்றிருந்தனர்.  சிதம்பர சுப்பிரமணியன் புதல்வர்கள், இராமையாவின் புதல்விகள், சிட்டியின் புதல்வர்கள், சி சு செல்லப்பாவின் புதல்வர் என்று பலர் கலந்து கொண்டார்கள்.  கி.அ சச்சிதானந்தம், ம ராஜேந்திரன், மூத்த எழுத்தாளர் நரசய்யா, பேராசிரியை செந்தமிழ்ச் செல்வி என்று பலர் கலந்துகொண்டு மணிக்கொடி பத்திரிகைப் பற்றி பேசினார்கள். 

    நான் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த காலத்தில் மறைமலைநகர் நூலகத்திற்குச் சென்று மணிக்கொடி இதழ்களைப் பார்த்திருக்கிறேன்.  மணிக்கொடி எழுத்தாளர்களான சி சு செல்லப்பா, சிட்டி அவர்களுடன் பேசிப் பழகியிருக்கிறேன்.              கூட்டத்திற்கு பொருத்தமே இல்லாமல் சுப்பு என்பவர் பேசிக்கொண்டிருந்தார்.  பின்னார் மணிக்கொடி சம்பந்தமாக மேலே அறிவித்த பேச்சாளர்கள் ஒவ்வொருவராகப் பேசினார்கள்.  6 மணிக்கு ஆரம்பித்த கூட்டம் 8.30 வரை முடிவடைந்துள்ளது.
 
    தமிழ்ப் பேராசிரியை மணிக்கொடி பற்றி ஆராய்ச்சி செய்து பட்டம் பெற்றவர்.  அது குறித்து எழுதும்போது மணிக்கொடி பற்றி தெரிந்துகொள்ள அவர் செய்த முயற்சிகளைப் பற்றி பேசினார்.  மணிக்கொடி என்பது பத்திரிகை மட்டும் அல்ல.  ரத்தமும் சதையும் கொண்ட அதில் ஈடுபட்ட எழுத்தாளர்களின் வாழ்க்கையும் அதில் அடங்கும். 

    சி சு செல்லப்பாவைப் பார்த்து பேசி அவருடைய ஒத்துழைப்பைப் பெறுவதைப் பற்றியும் பேராசிரியைப் பேசினார்.  வராவின் மனைவியைச் சந்தித்த விபரத்தையும் சுவாரசியமாக தெரிவித்தார். 

    மணிக்கொடி என்ற பத்திரிகை 17.09.1933 அன்று தோன்றியது. அதேபோல் 34 ஆண்டுகளுக்கு முன், செப்டம்பர் 17, 1899 அன்று வ.ரா பிறந்தார்.  பத்திரிகையை ஆரம்பிக்க காரணமானவர் ஸ்டாலின் சீனிவாசன் என்பவர். ஆங்கிலத்தில் அப்செர்வர் என்ற பத்திரிகையைப் பார்த்துவிட்டு தமிழில் அப்படி ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.  டி எஸ் சொக்கலிங்கம்தான் பத்திரிகையை நடத்தியவர்.  பின்னால், பம்பாயில் நடந்துகொண்டிருந்த ப்ரி பிரஸ் ஜரனலுக்கு சீனிவாசன் போய்விட்டார்.  அதன்பின் வ.ரா.மணிக்கொடியின் ஆசிரியராக மாறினார்.  சொக்கலிங்கத்திற்கும் வராவிற்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமையால், வ ராவை ஆசிரியர் பொறுப்பிலிருந்து விடுவித்துவிட்டார் சொக்கலிங்கம்.  பின், இலங்கையில் வந்து கொண்டிருந்த வீர கேசரியின் நாளிதழுக்கு வரா ஆசிரியராக பணியாற்ற சென்றுவிட்டார்.  சொக்கலிங்கம் எதிர்பாராதவிதமாக வ.ராவை பத்திரிகையிலிருந்து நீக்கியதை அவரால் நம்ப முடியாமல் இருந்தது.  கப்பலோட்டிய தமிழன் வ வு சிதம்பரம் பிள்ளையால் வீரகேசரியில் வராவிற்கு ஆசிரியர் பொறுப்பு கிடைத்தது.

    நான் சனிக்கிழமை இந்தக் கூட்டத்திற்குப் போனபோது மணிக்கொடியைப் பற்றி என்னன்ன தகவல்கள் கிடைக்குமென்றுதான் போனேன்.  வராவின் மணிக்கொடி தமிழ் பத்திரிகை உலகில் ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது என்பதை மறுக்க முடியாது.

    கி.அ சச்சிதானந்தம் பேச ஆரம்பித்தபோது அவர் மணிக்கொடியை பி எஸ் ராமையாவிலிருந்து தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.  மணிக்கொடி என்ற பத்திரிகை ஸ்டாலின் சீனிவாசன், வ ரா, பி எஸ் ராமையா என்று பலரால் ஆசிரியப் பொறுப்பில் தொடங்கப்பட்டது.  அதில் ஈடுபட்ட பலரும் பண பலம் இல்லாவிட்டாலும் மன பலம் கொண்டவர்கள்.  பி.எஸ் ராமையா காலத்தில் மணிக்கொடியில் வெளிவந்த பல சிறுகதைகள் உலகத் தரத்தில் பேசக்கூடியவை.  காந்தி காலத்தில் சுதந்திரத்திற்கு முன் தோன்றிய மணிக்கொடி, சுதந்திரத்தைப் பற்றியோ காந்தியைப் பற்றியோ பெரிதும் பேசவில்லை.

    கி அ சச்சிதானந்தம் மணிக்கொடி எழுத்தாளர்களில் சி சு செல்லப்பா, மௌனி, ந.பிச்சமூர்த்தி, சிட்டி என்று வெகுசிலருடன் தான் பழகியிருப்பதாக குறிப்பிட்டார்.  ஸ்டாலின் சீனிவாசன் தமிழில் திறமையாக எழுதக் கூடியவர் என்று கி அ சச்சிதானந்தம் தெரிவித்தார்.அவர் எழுத்துகள் புத்தகமாக வரவேண்டுமென்ற தன் ஆதங்கத்தைவெளிப்படுத்தினார்.  பி எஸ் ராமையா மணிக்கொடி காலம் என்ற தொடரை தீபத்தில் எழுதுவதற்கு, சி சு செல்லப்பாவும் கி அ சச்சிதானந்தமும்தான் காரணம் என்பதைக் குறிப்பிட்டார்.  எப்போதும் சிசு செல்லப்பாவுடன் சுற்றிக்கொண்டிருப்பவர், பீகாக் பதிப்பகத்தை சி சு செல்லப்பாவின் புத்தகம் கொண்டு வர பயன்படுத்தியதாகக் குறிப்பிட்டார். 

    அடுத்தது கணையாழி ஆசிரியரும், முன்னாள் தஞ்சை பல்கலைக் கழக துணை வேந்தருமான ம ராஜேந்திரன் அவர்கள் பேசினார்.  கி அ சச்சிதானந்தம் கூறிய மணிக்கொடி என்பது ராமையாவின் காலத்திலிருந்து தொடங்குவதிலிருந்து ஆரம்பமாகிறது என்ற கருத்தை மறுத்தார்.  எப்போதும் கொடி என்றால் துணிக்கொடியைத்தான் குறிப்பிடுவோம்.  எப்படி மணிக்கொடியாக மாறியது என்பதை புதுவித விளக்கத்துடன் தெரிவித்தார்.  அதாவது பாரதியார் மணிக்கொடி என்ற வார்த்தைப் பிரயோகத்தை தன் கவிதைகளில் பயன்படுத்தியிருக்கிறார், அதனால் மணிக்கொடி என்ற பெயர் பாரதியாரின் பெயரிலிருந்து கிடைத்திருக்கும் என்றார்.  üஇங்கே மணிக்கொடி எழுத்தாளர்களின் உண்மையான வாரிசுகள் இருக்கிறார்கள்.  நாங்கள் அவர்களைப் படித்து அவர்களைப் பின்பற்றி வந்த வாரிசுகள்,ý என்று முடித்தார்.

    உரைநடையை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டுமென்பதை மணிக்கொடி காலத்தைச் சேர்ந்த படைப்பாளிகள் விவாதித்துப் பயன்படுத்தினார்கள் என்றார்.  அதாது ஒரு வரி என்பது மூன்று மூன்று வார்த்தைகள் கொண்டே முடிந்து விடும் என்றார்.  சிக்கனமாக வரி அமைப்பை கொண்ட வாக்கியத்தை மணிக்கொடி எழுத்தாளர்கள் கண்டு பிடித்ததாகக் குறிப்பிட்டார்.  ஸ்டாலின் சீனிவாசன் எழுதிய உரைநடை வாக்கியங்களை ம ராஜேந்திரன் படித்துக் காட்டினார். சமஸ்கிருத மரபையும், தமிழ் மரபையும் கலந்து தமிழுக்குப் பெருமை சேர்க்கும் விதமாக மணிக்கொடி இதழ் அமைந்ததாக ம ரா தெரிவித்தார்.

    கூட்டம் முடிவில் பேச வந்தவர் எழுத்தாளர் நரசய்யா.  அவருக்கு 80 வயது.  புதுமைப்பித்தனைத் தவிர எல்லா மணிக்கொடி எழுத்தாளர்களுடனும் பழக்கம் உண்டு என்றார்.  மணிக்கொடி என்ற பெயர் கம்பராமயண செய்யுளிலிருந்து வந்தது, பாரதியாரிடமிருந்து வரவில்லை என்ற ம ராஜேந்திரன் கூற்றை மறுத்தார்.  மணிக்கொடி எழுத்தாளர்கள் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணத்தில் எழுத்துத் துறைக்கு வரவில்லை என்று குறிப்பிட்டார்.  மணிக்கொடி பதிப்பாளர் சொக்கலிங்கத்திற்கும், வ ராவிற்கும் கருத்து வேறுபாடு இருந்தாலும், தினமணி இதழிற்கு ஆசிரியராக சொக்கலிங்கம் இருக்கவேண்டுமென்று வ ரா குறிப்பிட்டதாக நரசய்யா குறிப்பிட்டார்.  அரசியல் நோக்கத்துடனோ இலக்கிய நோக்கத்துடனோ கொண்டு வரப்பட்ட பத்திரிகை இல்லை மணிக்கொடி என்றார்.   பத்திரிகை ஒன்று வரவேண்டுமென்ற முயற்சிதான் அது என்றார்.  ஸ்டாலின் சீனிவாசன் எழுத்தை அவரும் பாராட்டினார். 

    என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் சித்தார்த்தன் என்பவர்.  'சாம்ராட் அசோகன்' என்ற வரலாற்றுப் புதினத்தை 4 பாகங்கள் எழுதி உள்ளார்.  அவர் என் கையில் ஸ்வாமிநாத ஆத்ரேயா எழுதிய மாணிக்க வீணை என்ற புத்தகத்தை படிக்கக் கொடுத்தார்.  என் நண்பர் ஆர் வெங்கடேஷ் அவருடைய நாவல் இடைவேளை என்ற புத்தகத்தைப் படிக்கக் கொடுத்துள்ளார்.  இக் கூட்டத்திற்கு வந்ததில் இரண்டு புத்தகங்கள் படிக்கக் கிடைத்தன. 

    கூட்டம் முடிந்தவுடன் நரசய்யாவைக் கேட்டேன்.  ஏன்  மணிக்கொடி எழுத்தாளர்களில் க.நா.சு என்ற பெயரை யாரும் உச்சரிக்கவில்லை என்று கேட்டேன். 

    '\இது முதல் கூட்டம்.  இன்னும் தொடர்ந்து சில கூட்டங்களைக் கொண்டு வர உள்ளோம்," என்றார் சிட்டியின் புதல்வர்.  மணிக்கொடி எழுத்தாளர்களின் வாரிசுகள் யாராவது மணிக்கொடி எழுத்தாளர்களைப் பற்றி பேசியிருக்கலாம்

    நான் வீட்டிற்கு வரும்போது மணி 9 ஆகிவிட்டது.  நான் இருந்த பகுதியில் மழை பெய்து விட்டிருந்தது.  நான் இக் கூட்டத்தைப்பற்றி பதிவு செய்ய வேண்டுமென்று பதிவு செய்து விட்டேன்.  இன்னும் சில தினங்கள் சென்றால், சொல்ல வேண்டிய பலவும் மறந்து போய்விடும்.

Comments

S Venugopalan said…
VERY GOOD WRITE UP AND I READ IT ONLY NOW!EXCELLENT ONE!TX A LOT!
CHITTI VENU!