Skip to main content

எதையாவது சொல்லட்டுமா.........69



21ஆம் தேதி ஜனவரி மாதம் சீர்காழி கிளையிலிருநந்து  எனக்கு விடுதலை தந்துவிட்டார்கள்.  திடீரென்று திரும்பவும் சென்னை என்பதை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வாரம் ஒருமுறை நான் சென்னைக்கு வராமலிருக்க மாட்டேன்.  திரும்பவும் சென்னையில் என் வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பது திகைப்பாகவே இருந்தது.

காலையில் 9 மணிக்கு பஸ்ஸைப் பிடித்து ரம்மியமான வயல்வெளிகளைப் பார்த்தபடி மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்குச் செல்வது அற்புதமான அனுபவமாக இருக்கும். அதை திரும்பவும் இனிமேல் நினைத்துப் பார்க்க முடியாது. 

என்னால் மறக்க முடியாத இன்னொரு இடம் திருவல்லிக்கேணி.  நான் இங்குதான் கோஷ் மருத்துவமனையில்தான் பிறந்தேன். நான் மாம்பலவாசியாக மாறினாலும், திருவல்லிக்கேணிக்கு அடிக்கடி வருவேன்.  என் நண்பர்கள் இங்குதான் அதிகம்.  மேலும் விருட்சம் அச்சடிக்கிற இடமும் திருவல்லிக்கேணிதான். 

நான் கல்லூரியில் முதலில் காலடி எடுத்து வைத்தபோது, கணக்கு என்றால் ஒன்றும் தெரியாது.   அதைக் கற்றுக்கொள்ள திருவல்லிக்கேணியில் உள்ள என் உறவினர் வீட்டிற்கு வருவேன். ஒரு குறுகலான சந்தில்தான் அந்த வீடு. என் பெரியப்பா பையன் மாடிக்கு என்னை அழைத்துக்கொண்டு போவார்.  அங்கு டிரிகனாமென்டிரி கற்றுக்கொள்வேன்.

ஒருமுறை என் பெரியப்பா பையன் சில தாள்களில் எழுதி மறைத்து வைத்துக்கொண்டிருந்தார்.  நான் ஆவலாக என்னவென்று பார்க்க முயற்சி செய்தேன்.  'ஐயோ ஐம்பது' என்கிற அவருடைய கதை.  முத்து முத்தான கையெழுத்தில் தாளின் ஒரு பக்கத்தில் கதையை எழுதியிருப்பார்.  அவர் எழுதுகிற மாதிரி என்னால் முதலில் எழுத வராது.  கதை என்று எதாவது எழுத ஆரம்பித்தால் அது கோணலாகப் போகும்.  என்னவென்று சொல்லத் தெரியிவில்லை என் பெரியப்பா பையன் தொடராத ஒன்றை நான் இன்னும் எழுத்து மூலம் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.

என் பெரியப்பா பையன் மலர்த்தும்பி என்ற சிற்றேட்டைத் துவங்கினார்.  அதுதான் எனக்கு சிறுபத்திரிகை தொடர ஒரு காரணம்.

பல ஆண்டுகள் கழித்து என் பெரியப்பா குடும்பம் திருவல்லிக்கேணியிலிருந்து போனபிறகு கூட என் வாழ்க்கை திருவல்லிக்கேணியில் தொடராமலில்லை.  கணையாழி என்ற பத்திரிகையில் ஒருமுறை கவனம் என்ற பத்திரிகைப் பற்றி விளம்பரம் வந்திருந்தது.  அந்த கவனம் என்ற சிற்றேடை வாங்குவதற்கு திரும்பவும் நான் திருவல்லிக்கேணி வந்திருக்கிறேன்.  ஆர். ராஜகோபாலன் வீடைத் தேடிக் கண்டுபிடித்து கவனம் இதழை வாங்கிப் படித்திருக்கிறேன்.   அப் பத்திரிகை மூலம் பல எழுத்தாள நண்பர்களைச் சந்தித்திருக்கிறேன். 

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வைத்தியநாதன் என்ற நண்பரை மயிலாப்பூரில் சந்தித்து பின் திருவல்லிக்கேணியில் உள்ள கடற்கரைக்குச் செல்வேன். ஞானக்கூத்தன், ஆனந்த், ராஜகோபாலன், ரா ஸ்ரீனிவாஸன், காளி-தாஸ், வைத்தியநாதன் என்று பல நண்பர்களைச் சந்திப்பேன். 

ஒருமுறை பார்த்தசாரதி கோயில் பிரகாரத்தைச் சுற்றிக்கொண்டிருந்தேன்.  கூட ராஜகோபாலன், வைத்தியநாதன்.  அங்குதான் நரசிம்மரின் இன்னொரு பெயரான அழகியசிங்கர் என்ற பெயரைக் கண்டுபிடித்தேன்.  அதுமுதல் என் படைப்புகள் இன்னமும் அந்தப் பெயரில்தான் வந்து கொண்டிருக்கிறது. 

விருட்சம் என்ற பத்திரிகைக்கும் பெரிய தெருவில் உள்ள சேகர் அச்சகத்திற்கு நெருங்கிய பிணைப்பு உண்டு.  இப்போதோ அந்தத் தெருவில் இருக்கும் எங்கள் வங்கிக்கிளைக்கு நான் தினமும் டூ வீலரில் வந்து கொண்டிருப்பேன் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. இன்னும் திருவல்லிக்கேணியின்  மகிமையைப் பற்றி தொடர்ந்து எழுதுவேன்.

Comments

பிறந்த இடத்திலேயே பெரும்பணி செய்வது பிறவிப்பயன்தான்... இளமை நினைவுகளோடு இன்னும் உற்சாகமாய் இயங்குங்கள்...
Chandran Rama said…
welcome back to Chennai...