Skip to main content

காதலுக்குப் பின் என் அடையாளம்


                                                   


உன்னைச் சிந்தித்து
ஒரு பறவையின் சிறகினில் அமர்ந்திருப்பேன்
அது
உன் ஊருக்குள் வந்திடுமென்றால்
அங்கு நான் குதித்திடுவேன்

ஊர் வாசி ஒருவனின் தலையில்
காகம் பீச்சுவது எப்படி?
அப்படி என் வருகை
இராணுவ வீரனின் ஆடையில் அலையும்
சிறுவர்களிடம்தான்
உன் முகவரியை கேட்டு எழுதியெடுப்பேன்

ஊருக்குள் பறந்து திரிந்ததில்
பசியெடுத்துவிட்டது
பறவைகள் உண்பதையெல்லாம்
என்னால் உண்ண முடியாதுபோயிற்று
அதோ
மொட்டைத் தலை பொருத்திய ஒருவன்
சூடான கஞ்சி விற்றுவருகிறான்
கண்டு ஒரு கிளாஸ் அருந்திட
பயமெனக்கு

யாரோ!
என்னையும் சுட்டுப் பொசுக்கிவிடுவாரோ
என்ற பயமெனக்கு

இதையெல்லாம் கதைக்க
உன் அருகில் உரசி அமர்ந்திட முடியவில்லை
பஸ்ஸில் பயணிப்பதுபோல்
நடுவில்
சிறுவனுமில்லை,சிறுமியுமில்லை,பிள்ளைக்காரியுமில்லை

ஊரில் கடும் மழையாம்
வானொலி சொல்கிறது
பெய்யட்டும்
என் கடிதங்களையெல்லாம் நீரில் விட
இலேசாக இருக்குமுனக்கு

ஒரு காலம்
சோடா மூடிகளை தட்டையாக்கி,நூலும் கட்டி
மின்சாரமில்லாத மின் விசிறி செய்தாயே
அதன் காற்றில்
உன் கேசத்திலொன்று ஆடியது
என் மார்பினில் வளர்ந்திருக்கும் உரோமங்களோடு போட்டியிட்டு

இதையெல்லாம்
உன்னில் உரசி உரசி கதைப்பதற்கு
அதிக நேரமெடுக்கும்
அதற்குள் நான் இந்த ஊரில் இருக்கமாட்டேன்

அவர்கள்
அடையாள அட்டை பரிசோதனை நடத்துகிறார்கள்
என்னிடம் கேட்டால்
என்ன சொல்ல
என் அடையாளம் நீதான்

Comments