Skip to main content

ஆரோக்கியமேரி என்றழைக்கப்பட்ட மேரி ஃபிலோமினா





'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறிப்போன அன்று
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தை
அதிரச் செய்திருக்கக் கூடும்
சளி இறுகிச் சிதைத்த நெஞ்சுக் கூட்டோடு
வசதிகள் குறைந்த வவுனியா வைத்தியசாலை
பல நூறு கிலோமீற்றர்கள் தொலைவில் அவளை
கண்டிக்கு அனுப்பியிருந்தது
வானமும் அதிர்ந்த நாளதில்
உயர் மருத்துவம்
மகளை எப்படியும் காப்பாற்றிடும்
நம்பிக்கையும் ஜெபமாலையும் துணையாக
ஆச்சியும் வந்திருந்தாள்
பார்வையாள விருந்தினராக
இருவர் மட்டுமே உள்ளனுப்பப்படும்
அவர்களுக்கென்று யாரும் வராத
வாயிலையே பார்த்தபடி
எப்பொழுதும் கட்டிலருகே
மெலிந்த ஆச்சி அமர்ந்திருப்பாள்
குழாய்கள் வழியே வரும்
உயிர்க்காற்று, மருந்து, கரைசல் உணவு
எல்லாவற்றையும் ஏற்றிருக்கும் ஆரோக்கியமேரி
வற்றிய உடல் சுவாசத்துக்கு மட்டுமே அசைய
கண்களில் மீதமிருக்கும் உயிர்
யாரையோ தேடியபடி கண்மணியாயசையும்
அவர்களறியாச் சிங்கள மொழியை
தமிழுக்கு மாற்றிச் சொல்ல உதவப் போய்
அவ்விருவர் துயர் கதையறிந்தேன்
பிறப்பிடம்
யாழ்ப்பாணத்தினொரு கடற்கரைப் பிரதேசம்
தற்பொழுது முகாம் வாசம்
மேரிக்கு ஒரே மகன்
சென்ற வருடம் கடத்தப்பட்ட அவனுக்கு வயது பதினேழு
கணவனும் மற்ற உறவுகளும் போரில் இறந்திட
ஆச்சியும் அவளும் மட்டுமே மிச்சம்
ஷெல் பட்ட தொண்டையில் சத்திரசிகிச்சை
அதனோடு சேர்த்து சளி கட்டி சிக்கலாகி
வவுனியா ஆஸ்பத்திரியோடு சில மாதங்கள் வாசம்
அங்கிருந்து கண்டிக்கு வந்து
இன்றோடு பத்துநாள்
'தம்பி எங்களை வவுனியாவுக்கே
அனுப்பிவிடச் சொல்லுங்கோ
இஞ்ச மொழியும் தெரியேல்ல
கவனிக்கிறாங்களுமில்ல
பொட்டொன்றைக் கண்டால் போதும்
புலியென்று நினைப்பு இவங்களுக்கு
அங்கயெண்டாலும் அயல்கட்டிலுக்கு வாற சனம்
பார்த்துப் பேசிச் செல்லும்
மனசாரப் பேச்சை விட
மருந்தெல்லாம் எதுக்கு ராசா'
இரு வாரங்களின் பிற்பாடு
மீளப் போய்ப் பார்க்கையில்
அவர்களிருக்கவில்லை
மேரி ஃபிலோமினாவை மரணம் கூட்டிச் சென்று
ஒரு கிழமையாயிற்றென
மருத்துவத் தாதி கூறி நடந்தாள்
காப்பாற்ற வந்த உயிரைக்
காலனின் கையில் பறிகொடுத்த ஆச்சி என்னவானாள்
தெரியாத மொழி பேசும் சூனியப் பூமி
நெரிசல் மிக்க பெருநகரம் அவளை
எந்த வாய் கொண்டு விழுங்கியதோ....
எங்கே போனாளென
எவர்க்கும் தெரியாத  இருளை ஊடறுத்து
தளர்ந்த பாதங்களினால்
அழுதபடி நடந்தாளோ....
ஆரோக்கியமேரி என்றழைப்பட்ட மேரி ஃபிலோமினா
மரணித்தவேளையில்
'ஓ பரமபிதாவே'
துளி நம்பிக்கையும் சிதறுண்ட அந் நாளில்
ஆச்சியின் அழுகை ஓலம்
ஆஸ்பத்திரி வளாகத்தையே
அதிரச் செய்திருக்கும்

Comments