Skip to main content

ழ 5வது இதழ் - டிசம்பர் 1978 ஜனவரி 1979



காலம்

காளி - தாஸ்

யாரோ காலமானார் என்ற செய்தி
என் எதிரில்
நட்சத்திரமாகத் தொங்குகிறது
காலமென முதலில் உணர்ந்தவன்
கபாலச் சூடு பொரியும்
ஆன்மை நிறைந்தவனாக இருந்திருப்பான்
சில சமயத்தில் தோன்றுகிறது
காலம் நிர்ணயிக்கப் பட்டிருப்பது போல
ஆனால் பற்ற முடியாமல்
நழுவிப் போகிறது.
எங்கேயோ காத்திருக்கிறது?
காதலுடன் மெளனம் சாதிக்கிறது
காலம் காலமாகக்
கடல் ஒலிக்கிறது வெற்று
வெளியில் மேகம் சஞ்சரிக்கிறது கனத்த
காலப் பிரக்ஞையை எனக்குள் விதைத்து
விட்டார்கள்.  எவ்வளவோ காலம்
கடந்தும் அறிந்து கொள்ள என்னவென்று
அது-முளைக்கவே இல்லை.  ஆனால்
விலகாத கிரஹணமாக என்
எதிரில்
தொங்கிக் கொண்டேதானிருக்கிறது
யாரோ காலமான செய்தி.
நானும் ஒரு காலத்தில்
காலமாகி விடுவேனோ என்பதில்
மட்டும் முளைத்து விடுகிற
பயம்
சொட்டுச் சொட்டாய் உதிரக்
காத்திருக்கிறது - காலம் வராமல்........

Comments