Skip to main content

ழ கவிதைகள் - 5வது இதழ்





நீலமணி


சேரிகள்


சிறியார்க் கில்லாப் பெரியார் உறுப்பு
பச்சைத் தோரணம்.  பொற்கொடி முட்கள்
உற்றுழி உதவாது ஓடிப்போகிற
பட்டைப் போலவும் பருத்திபோ லவுமின்றி
ஒட்டிஉற வுகொளும் வெட்டிவேர், வேடர்
ஒட்டமுடி யாத தேனீ மொய்ப்பு.
ஆண்டவன் தந்த அத்தி இலை.  இது
இடையில் வந்நது.  மூலைகளில் ஒளியும்
இருட்டு, காலம் போர்த்திய பொன்னாடை
அழைப்பு விடுக்கும் பச்சை விளக்கு
பாடல் பெறாத்திருப் பதிகள்.  விழல்கள்
பாம்பின் பச்சைப் படம்.  உயிர் வேலி
சந்தன மரத்துப் புல்லுரு விக்கொடி
வீட்டு வாசலில் போட்ட கோலம்
சல்லிவேர்ச் சல்லடை.  மவுன சாட்சி
விளக்கடி நிழல்இது எப்பறவைக் கூடு?
தோள்மீ தமரும் வழக்கம் மாறி
தோளுள் அமர்ந்த பச்சைக் கிளிகள்
பிரியும் புத்தகப் பக்கங் களிடை
பையன் வைத்த நீலமயி லிறகு
பொன்னுலகத்து இருண்டகண் டங்கள்
மாம்ச ஒட்டடை.  ராமன் கோடுகள்
காலம் ஒட்டிய பச்சை ஸ்டாம்புகள்
சிறையின் கம்பிகள்.  தேதிமுத் திரைகள்
புழுக்க நேரத்துத் தோகை விசிறிகள்
தாரால் எழுதிய புரட்சிகோ ஷங்கள்
புரியாத அயல்மொழிக் கவிதைகள்.  பாசி
சாயம். தீவுகள்.  பொன்வேய்ந்த கூரை
இக்கறை களுக்குக் கடவுள் பொறுப்பு
வெற்றித் தலைவன் தோளில் கூட்ட
நீ வளர்த்த கறுப்புப் பூக்கள்
குறில் நிழல்கள்.  உப்புப் பயிர்கள்
தேகச் சுவரில் தட்டிய வரட்டிகள்
அடங்கி நடக்கும் அந்தப்புரப் பிறவிகள்
தான்தோன்றி விளைச்சல்.  கடித்தநா கவிஷம்
நிலவுக் கறை, பாலில் மிதக்கும் நஞ்சு
அடக்குமுறை எதிர்த்த புரட்சிக் கருங்கொடி
கருப்புக்கண் ணாடிகள் கடைசிச் செய்திகள்
அம்புப் படுக்கை ஆருக் காகவோ?
பர்த்தாவும் அகற்றாப் பர்தா.  சேரிகள்
ஆண்டவன் பரமண்டலத்துச் சாத்தான் காலனிகள்
பரபரப்பான செய்திப் பத்தி
இலையின் மூலையில் இருக்கிற ஊறுகாய்


  நீலமணி.

Comments