Skip to main content

மொழிபெயர்ப்புக் கவிதை





சந்தேகம்

நட்சத்திர இதழ்கள் முடிச்சவிழ்க்கும் பனியூறும் இரவில்

தொலைதூர தேசமொன்றில் அவளின்னும் உறங்காதிருக்கலாம்

நிலவு வெள்ளி எழுத்தாணியால் மென்மையான சொற்தொடர்களைப் பின்னும்

இரவு ஒரே ஒரு கவிதையென அவள் உணரக் கூடும்

இறந்தகாலத்தை அணைத்தபடி மனமுறங்கும் திசையில்

கவியுணர்வுகள் விசிறிபோலாகி அசைதல் கூடும்

பழக்கப்படாத ஒழுங்கையினூடு அவளிடமிருந்து எனக்குக் கிட்டாத

எனது வாழ்வையும் எடுத்துக் கொண்டு அவள் அடிக்கடி செல்லக் கூடும்

அழும்போது கவிழ்ந்த அவளது கீழுதடு உருவாக்கிய

பெரிய சோகப் பெருமூச்சுக்கள் காற்றுவெளியெங்கும் இருக்கக் கூடும்

இரு கைகளையும் இணைத்து இயற்றிய கவிதையற்ற வாழ்வைக்

கழிக்க இயலாதென அவளுக்கும் தெரிந்திருக்கக் கூடும்

மிக நீண்ட பிரயாணத்தினிடையில் தனித்த திக்குகளில்

துடைத்துக் கழுவியதுபோல என்னை நினைக்கக்கூடும்

எங்களுக்குச் சொந்தமான இறந்தகாலத்தின் அடியிலிருந்து தோன்றிவரும்

சிறு துயரத் துளியொன்று நிலத்தில் விழக் கூடும்

மூலம் - மஹிந்த ப்ரஸாத் மஸ்இம்புல


Comments