Skip to main content

அழுகையும் அவனின் நகைச்சுவையும்




நான் இழந்து விட்டேன்.

எல்லாவற்றையும் இனி

இழப்பதற்கு எதுவுமில்லை என

அழுதான் அவன்.

அவனைச் சுற்றிலும்

கல் நெஞ்சைக் காட்டி

கனத்துயர்ந்த மலைகள்.

பூமித் தாய்க்காய்

நீரில் நெய்த

வெள்ளிச் சேலையாய்

வளைந்தோடும் அருவிகள்.

இடைவிடாது காற்றை வீசி

ஏதோ சொல்லிக் கொண்டிருக்கும்

மரங்கள்.

இளமைத் துடிப்புடன்

அவனோடு

இடறி விளையாடும்

இளந் தாவரங்கள்.

வனப்பான நட்சத்திரங்களுடன்

வளைந்து விரிந்த

வானம்.

அவன் மனதை

விரித்து உலர்த்த

விரிந்த மயானம்.

மனதை ஈரப்படுத்திக்

கொண்டே இருக்கும்

பதமான நீர் துளிகள்.

சுற்றி இருக்கும்

இவை எல்லாவற்றையும்

பார்த்து அழுதான்.

கதறி கதறி

அழுதான்.

'' நான் இழ்ந்து விட்டேன்

எல்லாவற்றையும்.......

இனி இழப்பதற்கு

எதுவுமில்லை '' எனப்

புலம்பி அழுதான்.

சுற்றி இருக்கும் அனைத்தும்

அவனைப் பார்த்து

சிரித்தன.

அந்த சிரிப்பொலி மட்டும்

அவனுக்குக் கேட்கவே

இல்லை.


Comments