Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....17

கொஞ்ச நாட்களாய் இதைப் பற்றி எழுத வேண்டுமென்று யோசித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் நேரத்துடன் என்னுடைய போராட்டம் நின்று விடவில்லை.

பவித்திரா மெஸ்ஸில் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் செய்தியைக் கேள்விபட்டேன். சன் செய்தியில் திரும்ப திரும்ப அந்த சிடி ஓடிக்கொண்டிருப்பதாக. நித்யானந்தா பற்றிய சிடிதான் அது. அதைப் பார்த்தபோது எனக்குப் பெரிய அதிர்ச்சி எதுவுமில்லை. விகடனில் நித்தியானந்தா எழுதுவதை நான் படிக்கவே மாட்டேன். விகடனே தொடர்ந்து வாங்க மாட்டேன். எதாவது விகடன் இதழில் இதைப் பார்க்கும்போது என்ன அப்படி எழுதுகிறார் என்று யோசித்துக் கொண்டும் இருப்பேன்.

என் அலுவலகத்தில் வெங்கட்ராமன் ஒருவருக்கு நித்தியானந்தர் குரு. அவர் பதவி உயர்வுப் பெற்று பொறுப்பேற்கக் கூட நித்தியானந்தரிடம் அனுமதிப் பெற்றுதான் சேர்ந்தார். அவரைப் பற்றி உயர்வாக என்னிடம் சொல்வார். அப்ப கூட நித்தியானந்தரைப் பற்றி தெரிந்துகொள்ள எனக்கு ஆர்வம் ஏற்பட்டதில்லை. அதேபோல் எனக்கு தப்பாகக் கூட எதுவும் தோன்றாது. அவரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியபோது எனக்கு நித்தியானந்தரைப் பற்றி சாருநிவேதிதா எழுதியிருக்கிறாரே என்று தோன்றியது தவிர, நித்தியானந்தரைப் பற்றி எனக்கு ஒன்றும் தோன்றவில்லை. அவர் எழுதுகிற புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் ஏற்படவில்லை. அவர் பிரசங்கங்களைப் போய்க் கேட்க வேண்டுமென்றும் எண்ணம் ஏற்படவில்லை.

சில ஆண்டுகளுக்குமுன் ஈஷா யோகாவைப் பற்றி கேள்விபட்டேன். என் அலுவலக நண்பர் ஒருவருக்கு அலுவலகத்தில் அவரிடம் பணிபுரியும் பெண்ணிடம் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அந்தப் பெண் என்ன காரணத்தினாலோ அவரிடம் பேசுவதை விட்டுவிட்டது. அது என் அலுவலக நண்பருக்கு தாங்க முடியாத பிரச்சினை ஆகிவிட்டது. அவர் உடனே ஈஷா யோகாவில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். பின் எங்களிடமெல்லாம் ஈஷா யோகாவைப் பற்றி பிரமாதமாக சொல்வார். அப்போது என்ன இது போய்ப் பார்க்கலாமென்று போய்ப் பார்த்தேன். ஒரு வாரம் இருந்துவிட்டு வந்தபிறகு நான் பழையபடியேதான் இருந்தேன். என்னுடைய பிபி, சுகர் எதுவும் குறையவில்லை. அதுவும் நான் இருப்பதுபோல் என்னிடம் ஒட்டிக்கொண்டுதான் இருந்தது. ஈஷா யோகாவில் சொல்லிக் கொடுத்ததுபோல் மதியம் ஒரு தியானம் செய்ய அலுவலகத்தில் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பேன். முழுவதும் மௌனம். யாருடைய எண்ணமும் என்னுள் நுழையக்கூடாது என்று கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். என் அலுவலகத்தில் உள்ள கடைநிலை சிம்பந்தி, "சார் கண்ணை மூடிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார், பார்," என்றவுடன், என் கவனமெல்லாம் சிதறி அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று போய்விடும்.

சில நாட்களில் அதுவும் நின்றுவிட்டது. ஜக்கி வாசுதேவ் சொல்கிற விஷயமெல்லாம் ஜே.கே சொல்வதுபோல் எனக்குத் தோன்றும். அவருடைய நீண்ட வெண்ணிற தாடி எனக்கு ரஜீனிஷை ஞாபகப்படுத்தும். அவர் இளம் வயதில் பாம்பெல்லாம் பிடிப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். நானோ பாம்பைப் பார்த்து பயந்து ஓடுபவன். பந்தநல்லூரில் இருக்கும்போது நழுவி நழுவிப் போகும் பல பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். சிலசமயம் தெரியாமல் என் வண்டி பாம்பு மேல் ஏறி இறங்கும்.

எனக்கு என்ன தோன்றுகிறதென்றால் இவர்களுடன் சேரும் பணமும், புகழும்தான். அளவுக்கு மீறி சேரும் இந்த பணமும் புகழால் ஆபத்துதான்.

ஆன்மிக குருக்கள் இதிலிருந்தெல்லாம் தப்பித்ததே இல்லை. நித்தியானந்தரும் இதிலிருந்து தப்பித்ததில்லை. ஜே கிருஷ்ணமூர்த்தி அவருடைய புத்தக உரிமைக்காக ராஜகோபால் என்பவருடன் கோர்ட்டில் வழக்குப் போட்டு சண்டைப் போட்டிருக்கிறார். ஜே கிருஷ்ணமூர்த்தி மரணமடைந்தபிறகு அவரைப் பற்றி ராஜகோபால் பெண் கிருஷ்ணமூர்த்தியின் செக்ஸ் அனுபவங்களைப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதிவிட்டார். கிருஷ்ணமூர்த்தியின் கீர்த்தி அதனால் குறைந்துவிடவில்லை. யார் கிருஷ்ணமூர்த்தியின் பேச்சைக் கேட்டாலும் சில நிமிஷங்களில் கேட்பவர்கள் மெய்மறந்து போய்விடுவார்கள். அவரைச் சுற்றி பெண்கள் தானாகவே வசப்பட்டு விடுவார்கள். இதில் செக்ஸ் என்பது சாதாரண விஷயம். ஆனால் அவர் காவி உடை போடாத ஆன்மிகவாதி. அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. குடும்பம் என்று எதுவுமில்லை.

செக்ஸ் பற்றி அவரிடம் கேள்வி கேட்டபோது, பெண்ணுடைய ஸ்பரிசமே அந்த உணர்வைத் தூண்டிவிடும் என்று குறிப்பிட்டிருக்கிறார் ஒரு பேச்சில். கிருஷ்ணமூர்த்தி மரணம் அடைவது உறுதியானபோது, சென்னையில் நடந்த கடைசிக் கூட்டத்தில் வயதான அழகான யூவதிகள் பலர் அவர் பிரிவை நினைத்து அழுததை நான் கண்ணால் பார்த்திருக்கிறேன்.

இந்த விஷயத்தில் யூ ஜி கிருஷ்ணமூர்த்தி வெளிப்படையானவர். பெண்களிடம் தொடர்பு கொண்டதை வெளிப்படையாக எழுதியிருக்கிறார். திருமணமானவர். குடும்ப வாழ்க்கை வெறுத்துப் போய் தனியாகப் பிரிந்து விட்டார். பின் அவரைவிட் வயதான பெண்மணியுடன் சேர்ந்தே எல்லா இடங்களுக்கும் சென்றிருக்கிறார். யோகி ராம்சுரத்குமார் கூட குடும்பஸ்தர். வடநாட்டில் தன் குடும்பத்தை விட்டுவிட்டுத்தான் துறவியாக வந்துவிட்டார். அவர் குடும்பம் இன்னும் கூட இருக்கிறது. குடும்பத்துடன் ஆன்மிகம் பயற்சியைக் கொடுக்கும் பலரைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன். தியானதாரா என்ற புத்தகத்தில் பிரமிள் அப்பாதுரை என்பவரைப்பற்றி எழுதியிருக்கிறார். அவர் குடும்பஸ்தர். இன்று பணம் சம்பாதிக்கும் வழிகளில் ஆன்மிகமும் ஒன்று என்று ஆகிவிட்டது.

எல்லாரிடமும் தீராதப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஆன்மிக வாதிகளை எல்லோரும் நாடிப் போகிறார்கள். அவர்கள் கூறும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்கிறார்கள். அதேபோல் இந்த ஆன்மிகவாதிகளைச் சுற்றி சில அதிசயங்கள் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகின்றன. வள்ளலார் விளக்கை எரிக்க தண்ணீரைப் பயன்படுத்தினார் என்று அவருடைய வரலாறில் குறிப்பிடுகிறார்கள். அதேபோல் ஷ்ரீடி சாய்பாபா வரலாறிலும் நடந்ததாகச் சொல்லப்படுகிறது. இதெல்லாம் இட்டுக்கட்டிச் சொல்லப்படுகிற சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் வள்ளலார் கோர்ட்டுக்கு இழுத்தவர் ஆறுமுகநாவலர். வள்ளலார் கோர்ட்டுக்கு வந்தபோது, எல்லோரும் எழுந்து நின்றார்கள். ஏன்? தீர்ப்பு சொல்ல வேண்டிய judgeம் எழுந்து நின்றுவிட்டார். வழக்கு வள்ளலார் பக்கம் திரும்பி விட்டது.

பொதுவாக Public Sphere ல் நடப்பதை நான் எழுதுவதில்லை.Private Sphere ல் நடப்பதைத்தான் எழுதிக்கொண்டு போவேன். அப்படி நடப்பதை Public Sphere ஆக மாற்றுவதைத்தான் விரும்புவேன். இந்த முறைதான் மாற்றி எழுதியிருக்கிறேன்.

Comments