எதையாவது சொல்லட்டுமா....18
போன சனிக்கிழமை (13.03.2010) எழுதியிருக்க வேண்டும். இந்தச் சனிக்கிழமைதான் எழுதுகிறேன். சனிக்கிழமை எப்போதும் நான் சென்னையை நோக்கிக் கிளம்பி விடுவேன். பின் ஞாயிறு கிளம்பி இங்கு வந்துவிடுவேன். வழக்கம்போல் 13ஆம் தேதி மதியம் சீகாழி கிளையிலிருந்து வாசலில் வந்து நின்றேன். எனக்குப்பிடித்தமான வசீகரமான பெண் பெயரில் ஓடும் பஸ் வந்து கொண்டிருந்தது. பெரும்பாலும் இந்தப் பஸ்ஸில் யாரையும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆன் லைனின் பதிவு செய்யவேண்டும். ஏசி வண்டி. விலை அதிகம். தேர் மாதிரி தெரு முழுவதையும் அடைத்துக்கொண்டு அந்த வண்டி வந்து கொண்டிருந்தது. கை காட்டினேன். நிற்காமல் போய் விடுவார்கள் என்றுதான் நினைத்தேன். டிரைவர் நிறுத்தினான்.
'சீட் இருக்கிறதா?' என்று கேட்டேன். 'இருக்கிறது,' என்றான். நான் இன்று சென்னை போகப்போகிறோம் என்ற நினைப்பில் ஒரு பை நிறைய நவீன விருட்சம் 75 - 76 இதழ் பிரதிகளை அடுக்கிக் கொண்டேன். அதைத் தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு சீகாழியில் மேற்குறிப்பிட்ட பஸ்ஸில் ஏறினேன். இப்படி அதிகமாக மீந்துபோகும் இதழ்களை ஒன்றாக்கி ஒரு புத்தகமாகக் கொண்டு வருவது என் வழக்கம். மேலும் விருட்சம் இதழிற்கும் இந்தப் பஸ்ஸில் ஏறி வருவதற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை இனிமேல்தான் சொல்லப் போகிறேன். பஸ்ஸில் எப்போதும் 2 டிரைவர்கள் இருப்பார்கள். வசீகரமான பெண்ணின் பெயரைக் கொண்ட இந்தப் பஸ்ஸில் சென்னை வர ரூ350 தரவேண்டும். ஏசி. பயணிகளுக்கு ஒரு சின்ன பாட்டிலில் தண்ணீர் கொடுப்பார்கள். ஆனால் இன்னொருமுறை கேட்டால் கொடுக்க மாட்டார்கள். எண்ணி வாங்கியிருப்பதாக சொல்வார்கள். சிதம்பரம் போனபிறகுதான் என்னிடம் டிக்கட் பணம் வாங்கினான். ஆனால் டிக்கட் கொடுக்கவில்லை. வேகம் என்றால் வேகம் அப்படி ஒரு வேகத்தில் வண்டி பறந்து கொண்டிருந்தது. இவ்வளவு பெரிய வண்டியில் வேகத்துடன் வண்டியில் போக முடிகிறதே என்ற சந்தோஷம் என்னிடமிருந்தது. சன்னல் வழியாக எட்டிப் பார்க்கும்போது, கடைகள், வீடுகள் பறந்து கொண்டிருந்தன. ஒரு டிரைவர் போய் இன்னொரு டிரைவர் வண்டியை எடுத்து ஓட்டிக்கொண்டிருந்தான். வேகம். வண்டி ஒரு சிற்றுண்டி சாலையில் நின்றது. டீ பிஸ்கட் கொறித்தேன். பின் வண்டி கிளம்பிற்று. வண்டி திரும்பவும் வேளாங்கண்ணிக்கு சென்னையிலிருந்து வரவேண்டும். சீக்கிரம் போக வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். வண்டியிலிருந்தவர்கள் அரைத் தூக்கத்திலிருந்தார்கள். நான் வைத்திருக்கும் விருட்சம் பை வண்டி திரும்பினால் இப்படி சாயும், அப்படித் திரும்பினால் அப்படி சாயும். அதைச் சரிசெய்தால் 75 - 76 இதழ் என்னைப் பார்த்து இளிக்கும். வண்டி மகாபலிபுரம் நோக்கி வந்துவிட்டது. அப்போதுதான் டிரைவர் பெரிய பிரேக் போட்டான். வண்டியில் உள்ள பெண்கள் கத்த ஆரம்பித்துவிட்டார்கள். என்னுடைய விருட்சம் அடங்கிய பை டிரைவர் இருக்குமிடத்திற்கு போய் விழுந்து, அதில் உள்ள விருட்சம் இதழ் பிரதிகள் சிதறி விழுந்தன. வண்டிக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை. டிரைவர் சமாளித்துக்கொண்டு ஓட்டிக்கொண்டிருந்தான். கிளீனர் ஐயோ என்றான். பின்னால் படுத்துக்கொண்டிருந்த இன்னொரு டிரைவர் எழுந்து வந்து விட்டான். என்ன ஆயிற்று என்று கேட்டேன். யாரும் சரியாக பதில் சொல்ல வில்லை. வண்டி எதன் மீதோ மோதி விட்டது. கிளீனரிடம் கேட்டபோது அவன் சரியாய் பதில் சொல்லவில்லை. ஆனால் அவன் முகம் பீதியில் வெளிறியிருந்தது. நான் விருட்சம் இதழ் பிரதிகளைப் பொறுக்கிக் கொண்டு என் இடத்திற்கு வந்தேன். ''வண்டி மாடுமேல் மோதி விட்டிருக்கும்,'' என்றார் பக்கத்தில் இருந்தவர். பின் இருக்கை அருகில் வைத்திருநந்த விருட்சம் சாக்குப்பையை டிரைவர் பக்கத்தில் கொண்டு போயிற்று என்றால் என்ன ஆயிருக்கும். டிரைவர் அழுத்தமானவன். வண்டியை எங்கும் நிறுத்தாமல் ஓட்டிக்கொண்டு வந்து கொண்டிருந்தான். மகாபலிபுரம் அருகிலுள்ள செக்போஸ்டில் வண்டியை போலீஸ்காரர்கள் நிறுத்தினார்கள். டிரைவரை தனியாக இறங்கச்சொல்லி கழுத்தில் கையைப் போட்டு அழைத்துப்போனார்கள். வண்டியை ஓரமாக நிறுத்தினார்கள். நாங்களும் கீழே இறங்கினோம். பின்தான் தெரிந்தது வண்டி யாரோ பெண் மீது இடித்து விட்டது. அந்தப் பெண் அந்த இடத்திலேயே இறந்து விட்டாள். சிவராத்திரி அன்று அந்தப் பெண்ணிற்கு இப்படி ஒரு கொடூரமான மரணம் நிகழ்ந்து விட்டது. அங்குள்ள ஊர்க்காரர்கள் சுமோ வண்டியில் எங்கள் வண்டியைப் பிடிக்க வந்தார்களாம். வண்டி மட்டும் அங்கு இருந்தால் வண்டியை உடைத்திருப்பார்கள். டிரைவரை அடித்துக் கொன்றிருப்பார்கள் என்று சொன்னார்கள். இந்த விபத்து குறித்து செய்தி எந்த செய்தித் தாளிலும் வரவில்லை.வழக்கம்போல் போகும் பெரியார் பஸ்ஸில் ஏறி சென்னை வந்து சேர்ந்தேன்.இந்த விபத்து குறித்து நான் இன்னும் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். - சில தினங்களுக்குமுன் வசீகரமான பெண்பெயர் கொண்ட அந்த நிறுவன பஸ் ஒன்று வைதீஸ்வரன் பாதை ஓரத்தில் உடைந்து ஓரமாகக்கிடந்தது. -அதிகமாக பிரதிகள் மீந்துபோன நவீன விருட்சம் இதழை மாயவரத்திலிருந்து சென்னைக்கு தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு போனேன். அந்த இதழ் 75-76. ஜøலை மாதம் 2007ல் வெளிவந்த இதழ். அதில் இப்படி எழுதியிருக்கிறேன். சென்னையிலிருந்து கும்பகோணம் வரை ஒரு பாசஞ்சர் வண்டி வந்து கொண்டிருந்தது. பிராட்கேஜ் வருவதால் அது நின்று விட்டது. அதன் விளைவு பஸ்ûஸ நம்ப வேண்டி உள்ளது. பொங்கல் போன்ற விசேஷ தினங்களில் ஏகப்பட்ட பஸ்கள் விடுவார்கள் பொங்கல் அன்று மயிலாடுதுறையிலிருந்து சென்னைக்கு வரும் சொகுசு செமி டீலக்ஸ் பஸ் ஒன்றில் பயணம் செய்து வந்த என் பெண், அவள் கணவர், பேத்தி என்று எல்லோரும் பெரிய விபத்திலிருந்து தப்பினார்கள். அதை நினைத்துப் பார்த்தாலே பயங்கரமாகத் தோன்றுகிறது. முதலைப் பண்ணை என்ற இடத்திற்குப் பஸ் வந்தபோது, டிரைவர் கண் அசந்ததால் பஸ் நிலை தடுமாறி அங்குள்ள மின்சாரக் கம்பத்தில் இடித்து (நல்லகாலம் மின்சாரம் கட் ஆகிவிட்டது) தலைக்குப்புற கவிழ்ந்தது. பாண்டிச்சேரியில் ஏறிய ஒரு இன்ஜினியர் இறந்து விட்டார். கிளீனருக்கு கால்கள் இரண்டும் துண்டித்துவிட்டன. இது குறித்து சில கேள்விகள் : - விபத்து ஒரு சுழற்சி மாதிரி. உலகம் முழுக்க அது நடந்துதான் தீரும். யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்படி சொல்வது சரியா? - பெரிய வண்டிகள் நம்முடைய சாலையில் ஓட்டிச் செல்லும்போது வேகமாக ஓட்டக் கூடாது. அதனுடைய ஸ்பீடை கட்டுப்படுத்த வேண்டுமா? - வண்டி ஓட்டும் டிரைவர் குடித்துவிட்டு வண்டி ஓட்டுபவரா? - வண்டியில் பயணம் செய்யும் பயணிகளிடமும் இன்சுரன்ஸ் வசூல் செய்தால் (மிகக் குறைவான தொகை), இது மாதிரியான விபத்து சமயத்தில் பயணிகளுக்கு மருத்துவ செலவிற்குப் பயன்படும். - டிரைவர் சிலசமயம் க்ளீனரிடம் கொடுத்து வண்டியை ஓட்டிச் சொல்கிறாரா? - டிரைவருக்கு போதிய அளவு ரெஸ்ட் கொடுக்கப்படுகிறதா? - இதுமாதிரி விபத்துக்களை ஏன் பேப்பரில் விளம்பரப் படுத்தக்கூடாது? - நான் வந்த வண்டி தெருவில் வரும்போது தெருவை முழுவதும் எடுத்துக்கொண்டு விடுகிறது. பாதசாரிகளுக்கு நடக்கக்கூட இடமில்லை. - அவசரம் அவசரம் என்றதால்தான் என் வண்டி மோதியது. அவ்வளவு அவசரம் தேவையா?
Comments