Skip to main content

அண்ணாச்சி விக்ரமாதித்யனுக்குஒரு திறந்த கடிதம்விளக்கு பரிசு பெற்ற பிறகு நீங்கள் அளித்த பேட்டியை (அம்ருதா பிப்ரவரி 2010) படிக்க நேர்ந்தது. பரிசுகளிலும் விருதுகளிலும் நம்பிக்கை உள்ளவர் நீங்கள் என்ற போதிலும் பரிசுகளுக்கு எந்த மரியாதையையும் தராதவன் என்ற போதிலும் முதலில் என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.


“நாங்கள் கண்ணதாசனின் பேரப்பிள்ளைகள்” என்ற அறிவிப்பைச் செய்து நவீன தமிழ் இலக்கியவாதிகளையும் இலக்கிய இயக்கங்களையும், அவர்களின் யத்தனங்களையும் மிக எளிமையாக சினிமாக்காரர்களின் வியாபரங்களுக்கு கீழ்மையானவையாக ஆக்கியிருக்கும் உங்கள் கவித்துவத்தை என்னால் வியக்காமல் இருக்க முடியவில்லை.


மேலும் உங்களின் “நாங்கள்” என்ற அறிவிப்பில் என்னைப் போன்றவர்களைச் சேர்த்து எழுத உங்களுக்கு யார் அனுமதியோ அல்லது உரிமையோ அளித்தது? தயை கூர்ந்து பதில் அளிப்பீர்களாக. வேண்டுமானால் நீங்களும் கலாப்ரியாவும் எந்த சினிமாப் பாடாலாசிரியருக்கு வேண்டுமானால் என்ன உறவாகவும் இருந்துவிட்டுப் போங்கள். உங்கள் விசுவாசிகளை மாத்திரமே அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.


மேலும் ஒரு சந்தேகத்தை நீங்கள் நிவர்த்திக்க வேண்டும். உங்கள் பட்டியலில் பிச்சமூர்த்தி, சுரா, அரூப் சிவராம்(பிரமிள்) ஞானக்கூத்தன் போன்றோர்கள் இடம் பெற்றுள்ளனர். உங்களுடைய உறவுமுறையை சிவராமுவும் சுராவும் எப்படி எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை எண்ணிப் பார்க்கிறேன். பாவம் ஞானக்கூத்தன்.


எண்ணிப் பார்ப்பது மிக ரஸமாக இருக்கிறது. சினிமாவுக்குப் பாட்டெழுதுபவரின் பேரப்பிள்ளைகள் எப்படி இத்தனை சிறுபத்திரிகையாளர்களைச் சுரண்டி வாழ்ந்திருக்க முடிந்திருக்கிறது?


அடுத்த கேள்வி மேலும் ரஸமானது. நீங்களும் கலாப்ரியாவும் பாடாலாசிரியர் வைரமுத்துவை மிகவும் சிலாகிப்பவர்கள். வைரமுத்துவிடம் பரிசு பெற்று ஜென்ம சாபல்யம் அடைந்தவர் கலாப்ரியா. மேலும் தமிழ்நாடு அரசாங்கம் எழுத்தாளர்களுக்கு அளித்த அனைத்து சலுகைகளையும் நேர்மையுடன் அனுபத்தவர் கலாப்ரியா.


நீங்களோ உங்கள் “கல் தூங்கும் நேரம்” தொகுதியை வைரமுத்துவுக்கு சமர்ப்பணம் செய்தவர். அப்படியானால் பாடாலாசிரியர் வைரமுத்துவுக்கும் நீங்கள் சிலாகிக்கும் சிறுபத்திரிகைக் கவிஞர்களுக்கும் என்ன உறவு முறை என்பதை வாசக உலகத்திற்கு அறிவித்து உபகாரம் செய்ய வேண்டும்- உங்களின் “நாங்களில்” நான் இல்லை என்ற போதிலும் கூட.


கண்ணதாசனோ கவியரசு, ஆனால் வைரமுத்துவோ அதற்கு மேலே ஏதோ ஒன்று சொல்கிறார்களே? நீங்கள் வைரமுத்துவுக்குப் பின்னால் எங்கே இருக்கிறீர்கள்-உறவு முறையிலும் கவித்திறனிலும்-என்பதை அடையாளப்படுத்துவதும் சிலாக்கியமாக இருக்கும். நீங்கள் மேற்காட்டுகிற பழைய இலக்கியங்களுக்கும் இன்றைய சினிமாப் பாடல்களுக்கும் என்ன தொடர்பினைக் கண்டீர்கள் என்பதைத் தெளிவிக்கும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது.


திராவிட இயக்கங்களும் இலக்கியமும் தொடர்பான கேள்விக்கு நீங்கள் தந்திருக்கும் சரித்திரபூர்வமான தரவுகள் அலாதியானவை. எந்தெந்த கட்சித் தலைவருக்கு என்ன முன்னொட்டு அல்லது பட்டம் என்பதையெல்லாம் வரிக்கு வரி எழுதி பரவசப் பட்டிருக்கிறீர்கள். குறிப்பிட்ட கட்சியின் தொண்டனால் கூட செய்ய இயலாத துல்லியத்திற்கு வரிக்கு வரி மறக்காமல் அடைமொழிகள் வாரியிரைத்து திராவிட கட்சித் தலைவர்களை சந்தேஷப்படுத்தியிருப்பதும் உங்களுடைய அடுத்த வெற்றியை நோக்கிய நகர்வாக இருக்க வேண்டும்.


சினிமாத்துறைக்காரர்களுக்கு செய்ததில் ஆயிரத்தில் ஒரு மடங்கு தமிழக முதலமைச்சர் நவீன படைப்பாளர்களுக்கு செய்திருப்பார் என்று நீங்கள் நம்பக் கூடிய ஆளா? மன்னிக்கவும் இலக்கியவாதியா?


எல்லோருக்கும் பட்டம் தந்திருக்கிறீர்கள். பாவம் காந்திக்கு மட்டும் மறுத்திருப்பது என்ன காரணமோ தெரியவில்லை. சி.மணியின் “மஹ்ஹான்” கவிதையை என் பொருட்டு நினைவு கூர்வீர்களாக. சினிமாக்காரர்களாலும் அரசியல்வாதிகளாலும் பட்டங்கள் இல்லாமல் ஒரு வினாடி கூட உயிர் தரித்து இருக்க முடியாது.


உங்களின் தெளிவு நோக்கிய சிந்தனை பேட்டியில் பிரகாசமடைகிறது. அதாவது அரிஸ்டாடில் சிந்தனையாளர் அல்லர். மாறாக ஒரு திராவிட கட்சியின் மேடைப் பேச்சாளர் சிந்தனையாளராய் ஆகிறார் உங்கள் பேட்டியில்.


சிந்தனையாளன் என்பவன் யார் என்பது பற்றிய குழப்ப இருளைப் போக்க வந்த பகலவன் தாங்களே என்பது இப்போதுதான் நிச்சயப்படுகிறது. பண்டித ஜவர்ஹர்லால் நேரு பற்றிய தங்களின் அவதானிப்பு மிக அபாரமானது. இந்தியா தொழில்மயமாதலைக் கண்டிக்கிறீர்களா அல்லது இந்தியா நவீனமானதைக் கண்டிக்கிறீர்களா?


இரண்டு அம்சங்களும் வேறு வேறு போலத் தோன்றினாலும் அவை இரண்டும் ஒன்றுக்குள் ஒன்று ஒன்று பிணைந்தவை. நவீனமாதல், நவீனத்தன்மை, நவீனத்துவம் இவை மூன்றும் குறைந்தபட்ச வேறுபாடுகளுடன் புரிந்து கொள்ளப்பட வேண்டியவை என்பதை தங்களுக்குச் சொல்ல வேண்டிய அவசியம் நேர்ந்து விட்டதே என்பதற்கு வருந்துகிறேன்.


உங்களுக்கு ஸ்வாதீனமில்லாத எல்லையில் பிரவேசிக்கையில் நீங்கள் நிலைதடுமாறுவது வெட்டவெளிச்சமாகிறது. இந்திய தேசீயப் பிரச்னைகளையும் தென்னிந்திய வரலாற்றில் திராவிட கட்சிகளின் பங்கினையும் எங்களைப் போன்றோர் மூக்கில் விரலை வைக்கிற மாதிரி விவரித்துச் சொன்ன நீங்கள் அரிஸ்டாடில் விவகாரத்தில் கோட்டை விட்டுவிட்டதும் எனக்கு வியப்புதான்.


ஏனென்றால் அத்தகைய விஷயங்களையும் கூட நீங்கள் திராவிட கட்சி ஏடுகளில் இருந்த படித்தறிந்திருக்க இயலும். கவிஞர்களைத் தனது லட்சிய அரசாங்கத்திலிருந்து வெளியேற்ற வேண்டுமென்று சொன்னவர் கவிஞர் பிளாட்டோ. அவர் அரிஸ்டாட்டிலின் குரு. பிளாட்டோவின் முக்கிய விவாதப் புள்ளிகளை அவரது “ரிபப்ளிக்” என்ற நூலில் தாங்கள் காணலாம் என்பதைத் தாழ்மையுடன் உங்கள் கவனத்திற்குக் கொணர விரும்புகிறேன்.


சலித்துக் கொண்டே 13 பக்கத்திற்கு மேலான ஒரு பேட்டியை அளித்திருக்கிறீர்கள். சலிப்பற்ற நல்ல மனோநிலையில் உங்களால் விஸ்தாரமான ஒரு பேட்டியை அளிக்க முடியும் என்பதில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.


கடைசியாக ஒரு சந்தேகத்தை நீங்கள் நிவர்த்தி செய்தால் மிகவும் சந்தோஷப்படுவேன். விளக்கு பரிசை உங்களுக்கு அளித்தவர்கள் திராவிடக் கட்சியினரா அல்லது . . . ? தவிரவும் உங்கள் பேட்டியை தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எடுத்துச் சொன்னால் அல்லது அவரது கண்ணில் பட வைத்தால் உங்களுக்கும் அதன் பின்விளைவாக நவீன தமிழ் இலக்கியத்திற்கும் ஏதாவது கிடைக்கக் கூடும் என்று எண்ணுகிறீர்களா?


மேலும் சிறந்த பரிசுகள் (சாகித்ய அகாடெமி மட்டும் போதாது.) உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு இத் திறந்த கடிதத்தை ஒரு முடிவுக்குக் கொணர்கிறேன்.


Comments