தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்
Comments