Skip to main content

செப்டம்பர் மாத இலக்கியக் கூட்டம்






சா கந்தசாமி
யைத் தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம். எதைப் பேசினாலும் கருத்து முரண்பாடு இக் கூட்டங்களில் முக்கியமான அம்சம். அப்படி இருந்தால்தான் கூட்டம் சிறக்கும். பேசுபவரின் கருத்தையை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்பது இல்லை. பேசுபவர் புதிய எல்லையில் கேட்பவரைக் கொண்டு செல்கிறார். அதை வைத்துக்கொண்டு மற்றவர்கள் சிந்திக்கிறார்கள்.

யவனிகா ஸ்ரீராமை தற்போதைய கவிதைகளைப் பற்றி பேசும்படி கேட்டுக்கொண்டேன். அவர் இன்றைய நிலையில் கவிதைகள் எப்படியெல்லாம் வெளி வருகின்றன என்று பேச ஆரம்பித்தார். இன்றைய கவிதையில் குடும்பம் இல்லை என்றார். யாரும் குடும்பத்தைப் பற்றி கவிதைகள் எழுதுவதில்லை என்றார். குடும்பத்தோடுதான் எல்லோரும் இருக்கிறோம். ஆனால் யாரும் குடும்பத்தை கவிதையில் கொண்டு வரவில்லை என்றார்.

என்னால் இக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. என்னைப் போன்ற பலரின் கவிதைகளில் குடும்பம்தான் கருப்பொருளாக உள்ளது. என் ஆரம்ப கவிதையில் அம்மா இல்லாத குடும்பத்தைப் பற்றி எழுதியிருப்பேன். வயது முற்றிய பாட்டியை முற்றத்தில் தூக்கி எறிவதைப் பற்றி கவிதை எழுதியிருப்பேன். மேலும் ஆர்.ராஜகோபாலன், ஞானக்கூத்தன், எஸ் வைத்தியநாதன், காளி-தாஸ் முதலிய கவிஞர்கள் குடும்பத்தைப் பிரதானப் படுத்தி எழுதியுள்ளார்கள். எழுதிக்கொண்டும் இருக்கிறார்கள்.

தொடர்ந்து யவனிகா ஸ்ரீராம், இன்றைய கவிதைகளில் தத்துவம், பெரிய கோட்பாடுகள் போன்றவை இல்லை என்றார். எப்போதோ கவிதையிலிருந்து தத்துவம், கோட்பாடுகள் போன்றவை உதிர்ந்து போய்விட்டன. எனக்குத் தெரிந்து ஒரு கவிஞர் ஜே கிருஷ்ணமூர்த்தியின் தத்துவத்தில் ஆழ்ந்து கவிதை எழுதுவதிலிருந்து விலகியும் போய்விட்டார். உண்மையில் தத்துவம் கவிதை எழுதுபவருக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

யவனிகா ஸ்ரீராம் சொன்ன இன்னொரு முக்கியமான விஷயம். கவிதையில் பாலியல் சமாச்சாரங்கள். இப்போதைய கவிதைகளில் இதையெல்லாம் தைரியமாக எழுதுகிறார்கள். முன்பு மறைத்த விஷயம் இப்போது வெளிப்படையாக இடம் பெற ஆரம்பித்து விட்டது. குறிப்பாக பெண் கவிஞர்கள் முன்பைவிட இப்போது அதிகம் எழுதுகிறார்கள். இக் கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். முன்பு மூடி மறைத்த விஷயமெல்லாம் கவிதையின் பாடுபொருளாக மாறி உள்ளது. இதை ஆபாசம் என்று எடுத்துக்கொள்ள முடியாது.

முன்பெல்லாம், கவிதையில் படிமம் முக்கிய அம்சமாக இருந்தது. இப்போது எழுதப்படுகிற கவிதைகளுக்கு படிமம் தேவையில்லை என்றார் யவனிகா ஸ்ரீராம். கவிதையின் இந்தத் தன்மையை .நா.சு எப்போதோ தகர்த்துவிட்டார் என்றேன் நான். அவர் கவிதைகளில் படிமம், உவமை எதுவுமில்லை. கவிதையைப் படிக்கிறபோது தென்படுகிற இறுகியத் தன்மை எப்போதோ போய்விட்டது.

கூட்டம் முடியும்போது மணி இரவு 9 ஆகிவிட்டது. இறுதியில் யவனிகா ஸ்ரீராமின் கவிதை வாசிப்புடன் கூட்டம் இனிதாக முடிந்தது. என்க்கு ஞாபகத்தில் உள்ள இந்த விஷயங்களை உடனடியாக எழுதாவிட்டால், பின்னால் மறந்து போய்விடும்.

மிகக் குறைவான பேர்கள் கூட்டத்திற்கு வந்தாலும், ஒரு நல்ல அனுபவமாக இக்கூட்டம் போய்க் கொண்டிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.











Comments