Skip to main content

நான்,பிரமிள்,விசிறி சாமியார்.......10




பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருக்கும்போது சிலசமயம் பிரமிளிடம் கேட்பேன். கவிதை எப்படி இருக்க வேண்டும்? என்று. பிரமிள் எளிதில் பதில் சொல்லமாட்டார். கேட்காததுபோல் இருப்பார். பின் சொல்வார், 'உயிருள்ளதாக இருக்கவேண்டும்,' என்று. பின் அதைப் பற்றி தொடர்ந்து விளக்கமாக எதுவும் சொல்லமாட்டார். எனக்கு அவர் சொன்னதைக் கேட்டு இன்னும் சில கேள்விகள் எழும். உயிருள்ளதாக இருக்க வேண்டுமென்பது சரி, எப்படி அதைக் கண்டு பிடிப்பது. பிரமிளின் இன்னொரு பழக்கம். அவர் யாரையும் மதிப்பதில்லை. சிலர் பெயர்களைக் கேட்டால் கடுமையாக தாக்க ஆரம்பித்துவிடுவார். ஒரு சிறு பத்திரிகை என்றால் குறைந்த பட்சம் 1000 பேர்களுக்குள்தான் வாசிப்பார்கள். பிரமிள், 'படிப்பவர் எண்ணிக்கை அதிகமானால் அது சிறு பத்திரிகை இல்லை,' என்பார்.

பிரமிளும் நானும் ஒருநாள் நடந்துபோய்க் கொண்டிருந்தோம். தியோசிபிகல் சொசைட்டி முழுவதும் சுற்றி வந்தோம். அங்குள்ள விதவிதமான மரங்களைப் பற்றி பிரமிள் பலவிதமாக சொல்லிக்கொண்டே வந்தார். அவர் மரங்களைக் காட்ட காட்ட நான் அப்போதுதான் அதை புதிய விதமாக அறிந்து கொண்டதுபோல் தோன்றியது. ஒவ்வொரு மரத்தின் விசேஷத்தைப் பற்றி விவரமாகச் சொல்வார். பலமுறை அவர் அங்கு வந்து போனவராகத் தோன்றியது.

ஒரு இடத்தில் நின்றார். அங்கு ஒரு பெரிய மரம் இருந்தது. அந்த மரத்தைப் பற்றி விவரித்து வந்தவர், அங்குள்ள ஒரு பெரிய பாறாங்கல்லை எடுத்துப் புரட்டினார். பாறாங்கல்லின் அடியில் ஒரு கருத்தத் தேள் இருந்தது. பார்த்தவுடன் நான் திகைத்துவிட்டேன். தேள் என்றார் பிரமிள். என்னடா இது வம்பாப் போச்சு என்று தோன்றியது. இவரோடு சுற்றினால் தேள் எல்லாம் தட்டுப் படுகிறது. பின் ஒரு வற்றிய குளத்தை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். பிரமிள் ஒரு காகிதத்தில் அவர் பெயரை எழுதி சுருட்டி அந்தக் குளத்தில் வீசி எறிந்தார். பின் என் பெயரையும் எண் கணிதப்படி எழுதி வீசி எறிந்தார். எண் கணிதப்படி பிரமிளிடம் யாராவது அறிவுரைக் கேட்டால் தொலைந்தோம். தமிழ் எழுத்தாளர்களின் பலருடைய பெயர்களை அவர் அப்படித்தான் மாற்றியிருக்கிறார். என் ஜெயராமன் என்ற பெயரை நாராணோ ஜெயராமன் என்று மாற்றியிருக்கிறார். சங்கர் என்ற பெயரை சுப்பரபூ சங்கர் என்று மாற்றியிருக்கிறார். இப்படிப் பெயரை மாற்றி எழுத ஆரம்பித்தவர்கள் எல்லாம் பின்னால் எதுவும் பெரிதாக எழுதாமல் போய்விட்டார்கள் என்று தோன்றுகிறது. என் பெயரையும் விஸ்வ ரூப கிரி என்று வைத்துக்கொள்ள சொன்னார். அவர் என்னை கிண்டலடிப்பதுபோல் தோன்றியது.

ஒருநாள் வீட்டிற்கு வந்தார். 'இன்னிக்கு முக்கியமான நாள்,' என்றார். 'என்ன?' என்று கேட்டேன். 'என் பிறந்தநாள்,'. ஏனோ அவர் எத்தனாவது பிறந்தநாள் என்பதைக் குறிப்பிடவில்லை. நான் சரவணா ஓட்டலுக்கு அழைத்துப்போய் டிபன் வாங்கித் தந்தேன். பொதுவாக பிறந்தநாள்கள் ஞாபகத்தில் இருப்பதில்லை. இன்று என் பிறந்தநாள் என்று கூட நினைக்காமல் பல ஆண்டுகளைக் கடத்தியிருக்கிறேன்.

நடந்து போய்க்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருமுறை குறிப்பிட்டார். அவர் தலை முடியை அவர்தான் திருத்தம் செய்து கொள்வாராம். எனக்கு கேட்க ஆச்சரியம். 'இன்னொருவர் என் தலையைப் பிடிப்பது எனக்குப் பிடிக்காது.' பிரமிளுக்குக் கோபம் வந்தால் கண்டபடி திட்டிவிடுவார். ஒரு திறமையான கலைஞன் வசிப்பதற்கு உகந்த இடம் இல்லை. பொது கழிப்பறை உள்ள இடத்திற்குப் பக்கத்தில் அவர் ஒரு அறையில் குடியிருந்தார். யாரும் அவரை அந்த இடத்திற்கு வந்து பார்க்க மாட்டார்கள். மழைக் காலத்தில் அங்கு வசிக்கவே முடியாது. அப்படிப்பட்ட மோசமான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்த பிரமிளை ஒரு இலக்கிய நண்பர் அமெரிக்காவில் உள்ள நிலையை ஒப்பிட்டு ஏதோ சொன்னார். அதைக் கேட்டவுடன், பிரமிளுக்கு படு பயங்கரமாக கோபம் வந்து அந்த இலக்கிய நண்பரை ஒரு வழி பண்ணிவிட்டார். திட்டோ திட்டு என்று திட்டி விட்டார்.

(இன்னும் வரும்)






Comments