Skip to main content

துளிகள் 157 - கட்டாயம் இந்தப் புத்தகத்தை ஒருவர் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்

அழகியசிங்கர்





தில்லியில் வசிக்கிற நண்பர் சுரேஷ் ஒரு நாள் போன் செய்து சில புத்தகங்களை வாங்கும்படி குறிப்பிட்டார். ஒரு புத்தகம்  தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) வரை உள்ள பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்கள் புத்தகம்.

சுரேஷ் டில்லியில் இருந்தாலும் இந்தப் புத்தகம் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறார்.  எனக்கு இந்தப் புத்தகம் பற்றி அவர் மூலம்தான் தெரிந்தது.

சுரேஷ் ஒரு நாளைக்கு 8 மணிநேரம் படிப்பதாகக் குறிப்பிட்டார்.   சமீபத்தில் அவர் சேகரித்து வைத்திருந்த 500 புத்தகங்களை நூல் நிலையத்தில் நன்கொடையாகக் கொடுத்துள்ளார்.  
 
சரி இந்தப் புத்தகத்திற்கு வருவோம். இந்த நூலின் தொகுப்பு ஆசிரியர்கள் சொர்ணவேல் ஈஸ்வரனும் நிழல் திருநாவுக்கரசும்.   

1931ஆம் ஆண்டிலிருந்து 1960 வரை வெளிவந்த பத்திரிகைகளில் வெளிவந்த விமர்சனங்களைத் தொகுத்துப் பல அபூர்வமான படங்களையும் சேர்த்துத் தயாரித்துள்ளார்கள்.  

சினிமா படங்களுக்கு விமர்சனம் எழுதிய முக்கிய எழுத்தாளர்கள்/விமர்சகர்களின் ஒரு சுருக்கமான பட்டியலைக் கொடுத்துள்ளார்கள்.

ரசிகன் (நாரண துரைக்கண்ணன் அவர்களின் புனைபெயர்)

சினிமா உலகம் (ஆசிரியர்/விமர்சகர் பி.எஸ் செட்டியார்)

ஸஞ்சயன் (பி எஸ் ராமைய்யாவின் புனைபெயர்)

புதுமைப்பித்தன்   

துருவன் (வல்ஙூக்கண்ணனின் புனைபெயர்)

துலாம் (துமிலனின் புனைபெயர்)

நிரூபணன் (தொ.மு.சி ரகுநாதனின் புனைபெயர்

இதேபோல் சினிமா விமர்சனங்களை வெளியிட்ட 26 பத்திரிகளின் லிஸ்ட் கொடுத்துள்ளார் 

தமிழ்நாடு முழுவதும் பல இடங்களுக்குப் போய் இந்த நூலிற்காக எல்லாவற்றையும் சேகரித்து சினிமா விமர்சனங்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

கொஞ்சம் யோசித்துப் பார்க்கும்போது இந்தத் தொகுப்பு ஆச்சரியத்தைத் தருகிறது.

இன்று சினிமாப் பார்த்து விமர்சனம் எழுதுபவர்கள் இந்தப் புத்தகத்தைக் கட்டாயம் வாங்கி வைத்துக்கொண்டு வாசிக்க வேண்டும்.

காளிதாஸ் என்ற படத்தைப் பற்றி கல்கி கிருஷ்ணமூர்த்தி வேடிக்கையாக விமர்சனம் எழுதி உள்ளார்.  இவர் அந்தப் படத்தைப் பார்த்ததைப் பற்றி ஒரு இடத்தில் இப்படி எழுதியிருக்கிறார்.

இந்தப் படத்தை ஒரு நண்பருடன் போய்ப் பார்த்ததைப் பற்றி கல்கி இப்படி எழுதியிருக்கிறார். 

பார்த்தேன்.  கண்ணில் ஜலம் வரும்வரை பார்த்தேன்.  திரையில் விழுந்து சலன ஒளி வைர நகைகளின் ஜொளிப்பு, தூய வெள்ளைப் பற்களின் பளபளப்பு வீசியவற்றினால் கண் கூசும் வரையில் பார்த்துப் பிரமித்து நின்றேன் என்று எழுதியிருக்கிறார்.  ஒவ்வொரு கட்டுரையையும் படிக்கும்போது வியப்பாக இருக்கும்போல் தோன்றுகிறது. 

கல்கி ஆனந்தவிகடன் பத்திரிகையில் நவம்பர் 10, 1931ல் எழுதியிருக்கிறார்.   

சொர்ணவேல் எழுதியதைப் படிக்கும்போது சினிமா விமர்சனம் செய்யப்படுகிற படத்தைப் பார்க்கப் பிடிக்கவில்லையென்றால் படத்தில் எதாவது குறை இருந்தால் விமர்சகர் அந்தப் படத்தை ஒரு வழி பண்ணிவிடுவார்கள் போலிருந்தது.  இந்தப் புத்தகத்தின் மூன்றாவது கட்டுரையின் தலைப்பு கௌசல்யா - கலைக்கொலை என்ற தலைப்பில் சினிமா உலகம் என்ற பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவந்துள்ளது.  இக் கட்டுரை 1935ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.

முழுவதும் இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு இன்னொரு கட்டுரை எழுதுகிறேன்.  இந்தப் புத்தகத்தை நீங்கள் கட்டாயம் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.  

தமிழ் சினிமா விமர்சனங்கள் (1931-1960) தமிழ் சினிமா நூறாவது ஆண்டு வெளியீடு.  விலை ரூ.590.  வெளியீடு : நிழல் - பதியம் பிலிம் அகாடமி தொடர்புக்கு : 94444 84868.  முதல் பதிப்பு : பிப்ரவரி 2020.
  
 
  
   

Comments