அழகியசிங்கர்
எனக்குத் தோன்றும் ஒரு தீபாவளி மலர் தயாரிப்பது என்பது எவ்வளவு சிரமமான விஷயம் என்று. தமிழைத் தவிர வேற எந்த மாநிலமோ தீபாவளி மலரைப் போன்ற ஒரு மலரைத் தயாரிக்கிறார்களா என்பது தெரியவில்லை . யாராவது தெரிந்தால் சொல்லவும்.
இந்தக் கொரானா காலத்தில் கூட தீபாவளி மலர்கள் வருவது ஆச்சரியமாக இருக்கிறது. அதைக் கொண்டு வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அமுதசுரபி மலரைப் பார்க்கும்போது அப்படிப்பட்ட எண்ணம்தான் தோன்றியது.
ஒரு தீபாவளி மலரின் விலை ரூ.150 லிருந்து ஆரம்பமாகும் என்று நினைக்கிறேன். ஆனால் அதன் உண்மையான செலவு அதிகமாகத்தான் இருக்கும்.
ஆனால் தீபாவளி மலர்களைக் காப்பாற்றுவது விளம்பரங்கள். ஒவ்வொரு தீபாவளி மலர்களைப் புரட்டும்போது அதன் வழவழப்பான் தாள்களில் அச்சில் பார்ப்பது மகிழ்ச்சியான ஒன்று.
இந்த முறை அமுதசுரபி தீபாவளி மலரில் என் நண்பர் ஐராவதம் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதைப் பிரசுரித்த அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணனுக்கு என் நன்றி.
ஐராவதம் பற்றி ஒன்று சொல்ல வேண்டும். அவருக்குத் தீபாவளி மலர் என்றால் உயிர். ஆனால் புதியதாகத் தீபாவளி மலரைக் கடையில் வாங்கிப் படிக்க மாட்டார். ஆனால் விலை குறைவான தீபாவளி மலர்களை வாங்குவார். அதைவிட லென்டிங் லைப்ரரியில் வாங்கி வாசிப்பார்.
அவருடைய படைப்புகள் எதாவது ஒன்று தீபாவளி மலர்களில் இடம் பெற வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருந்தார். அது குறித்து வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அந்த ஆதங்கம் உள்ளுக்குள்ளேயே அவரிடமிருந்ததை அறிவேன். ஆனால் என்ன பண்ணுவது அவர் ஒரு எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது.”
அந்தக் காலத்தில் கசடதபற , கவனம் , பிரஞ்ஞை போன்ற சிறு பத்திரிகைகளில் எழுதி பிரபலமிழந்த எழுத்தாளர் அவர்.
அவருடைய ஏக்கத்தைப் பூர்த்தி செய்யும் விதமாக அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அந்தக் கட்டுரையில் அவருடைய கவிதையை (கசடதபறாவில் வெளிவந்தது) கொண்டு வந்தேன். அமுதசுரபி தீபாவளி மலரில் இதைப் பார்க்கலாம்.
Comments