Skip to main content

துளிகள் 154 - மறக்க முடியாத க்ரியா...

அழகியசிங்கர்







காலையில் நா. கிருஷ்ணமூர்த்தி போன் செய்தார்.  ஒரு துக்கமான செய்தி.  க்ரியா ராமகிருஷ்ணன்  இன்று  காலை ஐந்து மணிக்கு மரணம் அடைந்து விட்டார் என்று அவர் கூறினார். வருத்தமாக இருந்தது. 

இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டவுடன் எனக்கு கரியா பற்றிப் பல ஞாபகங்கள் வந்தன.

ஆரம்பத்தில் கணையாழி, தீபம் படிக்க ஆரம்பித்த என் இலக்கிய ஆர்வம், ராயப்பேட்டையில் இருக்கும் க்ரியாவில் போய் நின்றது.

அங்குப் போய் க்ரியா புத்தகங்கள் மட்டுமல்லாமல் வேற புத்தகங்களையும் வாங்கிக் கொண்டு வருவேன்.  

சா.கந்தசாமியின்  'தக்கையின் மீது நான்கு கண்கள்' தொடங்கி பல்வேறு புத்தகங்களைச் சேகரிக்கத் தொடங்கினேன்.  மாதம் ஒரு முறையாவது அங்குப் போய் நிற்பேன்.

அங்குதான் சி சு செல்லப்பாவின் கதைகள் தொகுதி வாங்கியிருந்தேன்.  சி சு செல்லப்பாவை வெளியிட்ட கதைத் தொகுதிகள்.

அந்தத் தருணத்தில் க்ரியா புத்தகம் அற்புதமாக வித்தியாசமாக தயாரிக்கப்பட்டிருக்கும்.  ஆனால் விலை கூடுதலாக இருக்கும்.

முதன் முதலாக க்ரியாவின் தமிழ் அகராதி, டாக்டர் இல்லாத இடத்தில், ந.முத்துசாமி புத்தகங்கள், சி மணியின் வரும்போகும் கவிதைப் புத்தகம் எல்லாம் வாங்கிக் குவித்திருக்கிறேன். 

சுந்தர ராமசாமியின் ' ஜே ஜே சில குறிப்புகள்', ஆல்பர் கம்யூவின் 'அந்நியன்'. இன்னும் எத்தனையோ புத்தகங்கள்.  

கடையில் ராமகிருஷ்ணனைப் பார்ப்பேன்.  ஆனால் கிட்டப் போய் பேசியதில்லை.  ஒரு முறை அவர் வீட்டில்,   'ஜே.ஜே சில குறிப்புகள் புரியவில்லை.  என்ன நாவல் இது என்று கேட்டிருக்கிறேன்.'  ' நீங்கள் அதைப் படிக்க இன்னும் பக்குவமடையவில்லை,' என்றார்.

சமீபத்தில் சா.கந்தசாமியின் இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.  மிகச் சிறப்பாக இருந்தது.  அக் கூட்டத்திற்கு அவரைப் பேச அழைத்தது நா. கிருஷ்ணமூர்த்தி.

அவர் ஜாக்கிரதையாக இருப்பவர்.  எழுத்தாளர் சச்சிதானந்தம் இறந்த செய்தியைக் கூட அவரிடம் தெரிவித்தேன்.  அதைக் கேட்டு வருத்தப்பட்டார்.  
அவரும் கொராணாவால்  இறந்து போவார் என்று கற்பனை கூடச் செய்யவில்லை.

அவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிராத்திக்கிறேன். 

Comments