Skip to main content

துளி : 43 - எது சுலபமானது?






அழகியசிங்கர்


இந்த ஆண்டும் தினமணி கதிர் - சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் இரண்டாவது முறையாக என் கதைத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  இந்த அமைப்பிற்கு என் நன்றியை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒவ்வொரு ஆண்டும் சிறுகதைப் போட்டி ஒன்றை வைத்து அதற்கென்று ஒரு லட்சம் ரூபாய் ஒதுக்க வேண்டுமென்று நினைக்கும் எழுத்தாளர் சிவசங்கரியைப் பாராட்டுகிறேன்.  இந்தத் திட்டத்திற்கு தினமணி கதிரும் உறுதுணையாக இருப்பதற்குப் பாராட்டப்பட வேண்டும்.  
தமிழில் இதெல்லாம் நடந்தால்தான் நம்பிக்கை தரும் எழுத்தாளர்கள் தோன்றுவார்கள்.  ஆனால் வாசகர்கள் யார்? அவர்களின் எண்ணிக்கையை எப்படிக் கூட்டுவது என்பது தெரியவில்லை.
அமெரிக்காவில் நான் தங்கியிருக்கும் பீனிக்ஸில் தமிழ் சங்கம் என்று எதாவது இருக்கிறதா என்று ஆராய்ந்தேன்.  பெரிய ஏமாற்றம்தான் எனக்குக் கிடைத்தது. தமிழ் மொழி தெரிந்தும் தமிழில் பேசாதவர்கள்தான் இங்கு இருக்கிறார்கள்.  இங்குள்ள தமிழ்ச்சங்கம் தமிழ் சொல்லிக்கொடுக்கிறார்கள்.  தமிழில் பேசுபவர்களே தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் எங்கே தமிழ்ச் சிறுகதையோ கவிதையோ படிக்கப் போகிறார்கள்?
ஆனால் தமிழில் எழுதப்படும் கதைகளையோ கவிதைகளையோ அல்லது கட்டுரைகளையோ யாரும் பேசத் தயாராக இல்லை.  தமிழ் மட்டுமல்ல வேறு மொழிகளிலாவது எதாவது பரிமாற்றம் நடக்கிறதா என்றால் இல்லை. 
இன்று தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி பல குடும்பங்களிலிருந்து பலர் கலந்து கொண்டார்கள்.  அவர்களில் தமிழில் பேசுபவர்கள் மிகக் குறைவு.  தெலுங்கில் பேசுபவர்களும் இந்தியில் பேசுபவர்களும் அதிகம்.  ஆனால் அந்தந்த மொழிகளில் சிறப்பாகப் பேசப்படும் கதைகளைப் பற்றியோ கவிதைகளைப் பற்றியோ யாரும் கவலைப்படவில்லை.  நான் இதைப் பற்றிப் பேசினால் என்னை ஒரு வழி பண்ணியிருப்பார்கள். பெரும்பாலான நேரத்தை வெட்டியாகப் பேசியும், உணவுபண்டங்களைத் தின்று கொண்டும் விளையாடிக்கொண்டும் இருந்தார்கள்.
மராட்டி மொழி பேசும் ஒருவரிடம் பேசினேன்.  üஉங்கள் மொழியில் நீங்கள் படித்த சிறுகதையோ கவிதையோ சொல்ல முடியுமா?ý என்று கேட்க நினைத்துப் பேசாமலிருந்தேன்.   அவருக்கும் அதற்கும் ரொம்ப தூரம் மாதிரி தெரிந்தது.  யாருக்கும் அதுமாதிரியான சிந்தனை சிறிதும் இல்லை.  கேளிக்கை நடக்கும் இந்த இடத்திற்கு புத்தகம் எடுத்துக்கொண்டு வராமல் இருந்துவிட்டேனே என்று தோன்றியது.  எடுத்துக்கொண்டு வந்திருந்தால், கொஞ்சம் அரட்டை, கொஞ்சம் விளையாட்டு, கொஞ்சம் உணவு பின் புத்தகம் படிப்பது என்று பொழுதைக் கழித்திருப்பேன். நான் கிட்டத்தட்ட காலையிலிருந்து மாலைவரை கேளிக்கையைப் பார்த்துக்கொண்டும் அதில் பங்கு கொண்டும் இருந்தேன்.

Comments