Skip to main content

ஏப்ரல் 20ஆம் தேதி....


.


அழகியசிங்கர்





ஒருநாள் மாலை நேரத்தில் பிரமிள் வீட்டிற்கு வந்தார். என் கையைக் குலுக்கினார்.  'இன்று ஒரு முக்கியமான நாள்,  உமக்குத் தெரியுமா?' என்று கேட்டார்.  எனக்கு ஒன்றும் புரியவில்லை.  'என்ன?' என்று கேட்டேன்.  'என்னுடைய பிறந்த நாள் இன்று,' என்று சொன்னபோது, ஆச்சரியமாக இருந்தது.
பொதுவாகச் சந்தித்துக்கொண்டாலும் ஒருவருக்கொருவர் பிறந்த தின வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை.
பிரமிளும் நானும் சரவணபவன் ஓட்டலுக்குச் சென்று பிறந்த தினத்தைக் கொண்டாடினோம்.
எழுத்தாளர் க நா சு ஜனவரி மாதம் 31ஆம் தேதி 1912ல் பிறந்தவர்.  அவருடைய 100வது வயது 2012ல் முடிவடைந்தது.  என் நண்பர் ஞானக்கூத்தன் அவர்கள் அவருடைய பிறந்த தினம் வருகிறது அதை முன்னிட்டு எதாவது கூட்டம் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.  
அந்தத் தருணத்தில் நான் சென்னையில் இல்லை.  மயிலாடுதுறையிலிருந்தேன்.  என்னால் க நா சுக்கு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்ய முடியவில்லை.  ஞானக்கூத்தனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.  இந்தத் தருணத்தில் நான் ஒன்றே ஒன்றுதான் செய்ய முடிந்தது.  க.நா.சு கவிதைகளைச் சிலவற்றை அச்சிட்டு அன்று இலவசமாக எல்லோருக்கும் கொடுத்தேன்.  என்ன கொடுமை என்றால் பலருக்கு க.நா.சு என்றால் யார் என்று தெரியவில்லை. எல்லோருக்கும் விளக்கம் கொடுத்துவிட்டு க.நா.சு கவிதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தேன்.
நான் அப்போது பஸ்ஸில் மயிலாடுதுறையிலிருந்து சீர்காழிக்கு பஸ்ஸில் சென்று கொண்டிருப்பேன்.  பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருக்கும்.  ஆனால் யாரிடம் க நா சு கவிதைகள் புத்தகத்தைக் கொடுப்பது?  யாராவது எதாவது தமிழ் பத்திரிகையைப் படித்துக்கொண்டு வந்தார்கள் என்றால் அவரிடம் கவிதைப் புத்தகத்தை நீட்டுவேன்.  என்னிடமிருந்து புத்தகம் வாங்குபவருக்கு ஒன்றும் புரியயாது.  üüஇதெல்லாம் வேண்டாங்க,ýý என்பார்கள்.  üüஇது இலவசமாகத் தருகிறேன்.   சும்மா படிங்க.. தமிழில் முக்கியமான எழுத்தாளர்,ýý என்று கூறி புத்தகத்தை நீட்டுவேன்.   உண்மையில் நான் க நா சு வுக்கு கூட்டம் நடத்த முடியாவிட்டாலும், அவருடைய நூற்றாண்டு வயதைக் கொண்டாடிவிட்டேன்.
இப்போது என்னுள் ஒரு கேள்வி எழுகிறது.  நம்மில் எத்தனைப் பேர்கள் படைப்பாளிகளைப் பாராட்டுகிறோம்.  பாரதியாரை நாம் காலம் காலமாகக் கொண்டாடுகிறோம்.    அதேபோல் இன்னும் சில படைப்பாளிகளையும் ஞாபகப்படுத்திக் கொள்கிறோம்.  பொதுவாக தமிழ் மொழிக்குச் சிறப்புச் செய்த பல எழுத்தாளர்களை நாம் ஏன் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகிறோம்.  சில தினங்களாக இந்தக் கேள்வி என்னுள் எழாமல் இல்லை.  குறிப்பாக எழுத்தாளர்களின் பிறந்த நாளை மட்டும் கவனத்தில் கொண்டு கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறேன்.  கொண்டாடுதல் என்றால் என்ன?  ஒரு கூட்டம் போட்டுப் பேசுவதல்ல. 
நாம் ஒவ்வொருவரும் அந்த எழுத்தாளரின் பிறந்த தினத்தின்போது நம் இடத்திலிருந்து நினைவுக் கூர்போம்.  அவருடைய படைப்பை ஒன்று எடுத்துப் படிப்போம்.  அவருடைய படைப்பைப் பற்றி முகநூலிலோ அல்லது நண்பர்களிடையோ பகிர்ந்து கொள்வோம்.
இது நான் மட்டும் செயல்படுத்தக் கூடிய ஒன்று இல்லை.  எல்லோரும் சேர்ந்த இயங்க வேண்டும்.  முதலில் எழுத்தாளர்களின் பிறந்தத் தினங்களைக் கண்டுபிடித்துக் குறிப்பிட வேண்டும்.  அந்தத் தினத்தின்போது அவரது படைப்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்தால் ஒரு லிஸ்ட் தயாரிப்போம்.  எந்தந்த எழுத்தாளர்கள் எப்போது பிறந்தார்கள் என்று.  
அந்த வகையில் பிரமிள் 1939ஆம் ஆண்டு 20 ஏப்ரல் தினம்.  அவர் உயிரோடு இப்போது இருந்திருந்தால் 80 வயது முடிந்திருக்கும்.  இந்தத் தருணத்தில் அவருடைய கவிதை மூலம் அவரை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

கீழே குறிப்பிடப்பட்ட கவிதை ஆத்மாநாம் இரங்கல் கூட்டத்தில் பிரமிள் வாசித்த ஆத்மாநாம் கவிதை. நான் அவசரப்பட்டு ஆத்மாநாம் கவிதையை பிரமிள் எழுதியது என்று தெரிவித்து விட்டேன்.

சிகரெட்டிலிருந்து
வெளியே
தப்பிச் செல்லும்
புகையைப் போல்
என் உடன்பிறப்புகள்
நான் 
சிகரெட்டிலேயே
புகை தங்க வேண்டுமெனக்
கூறவில்லை
வெளிச் செல்கையில்
என்னை நோக்கி
ஒரு புன்னகை
ஒரு கை அசைப்பு
ஒரு மகிழ்ச்சி
இவைகளையே
எதிர்பார்க்கிறேன்
அவ்வளவுதானே

ஒரு முறை முதல் இதழ் விருட்சத்தில் நான் பிரமிளை கவிதைத் தரும்படி கேட்டேன்.  அவர் ஒரு கவிதையைப்   மனசிலிருந்து சொல்ல  என்னை எழுதச் சொன்னார்.  அந்தக் கவிதையின் பெயர் கிரணம். அவர் சொல்ல சொல்ல நான் எழுதினேன்.
அந்தக் கவிதை இதுதான் :

விடிவுக்கு முன் வேளை
ஆகாயத்தில் மிதக்கின்றன
நாற்காலி மேஜைகள்
ஊஞ்சல் ஒன்று
கடல்மீது மிதக்கிறது
அந்தரத்து மரச் சாமான்களைச்
சுற்றிச் சுற்றிப் பறக்கிறது
அசிரீரிக் கூச்சல் ஒன்று
சிறகொடித்து கிடக்கிறது
ஒரு பெரும் கருடப் பட்சி
கிழக்கு வெளிறிச்
சிவந்து உதித்த மனித மூளைக்குள் 
வெறுமை ஒன்றின் இருட் குகை
குகைக்குள் கருடச் சிறகின்
காலை வேளைச் சிலிர்ப்பு
ஆகாயத்தில்
அலைமேல் அலை.
மௌனித்தது 
அசரீரிக் குரல்..

இந்தத் தவறை முகநூலில் சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு என் நன்றி.
          


Comments