Skip to main content

துளி : 42 - நான்கு மதிப்பெண்களுக்கு மேல்..







அழகியசிங்கர்







அமெரிக்கா போகிறேன் என்று எழுத்தாளர் கந்தசாமியிடம் சொன்னபோது, 'நிறையா பொழுது கிடைக்கும்யா புத்தகங்கள் படிக்கலாம், எழுதலாம்,' என்றார்.  அவர் ஒவ்வொரு முறை அயல்நாடு செல்லும்போது ஒரு புத்தகம் எழுதாமல் வர மாட்டார்.  அவர் சொன்னதில் எழுதுவதில் முன்னே பின்னே இருந்தாலும், புத்தகங்களைப் படிக்கிறேன்.  இதே சென்னையில் இவ்வளவு தூரம் படித்திருக்க மாட்டேன்.  
அதேபோல் அதிகமாக தமிழ் சினிமாக்களைப் பார்க்கிறேன்.  பொதுவாக சென்னையில் இருக்கும்போது யாராவது சொன்னால்மட்டும் தியேட்டரில் போய்ப் படம் பார்ப்பேன்.  தியேட்டரில் படம் பார்ப்பது அவதியாக இருக்கும். இங்கு  நெட்டில் சுலபமாக (பணம் கட்டியிருப்பதால் விளம்பரங்களைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம்) படங்களைப் பார்க்கிறேன்.  தினமும் குறைந்தது ஒரு படமாவது பார்க்காமல் இருக்க மாட்டேன்.  
இன்தூசம் ஒவ்வொரு படத்திற்கும் மதிப்பெண்கள் கொடுத்திருக்கிறது. ஐந்து மதிப்பெண்களில் நான்கு மதிப்பெண்கள்  மேல் வாங்கும் படங்கள் எல்லாம், எல்லாவிதங்களில் பார்க்க சிறப்பாக இருக்கிறது.  ஐந்து கட்டங்களாகப் பிரித்து மதிப்பெண்கள் தருகிறார்கள். 1. நடிப்பு 2. சிரிப்பு 3. காதல் 4. கதை 5. படத்தின் உருவாக்கம் என்று.
நான்கு மதிப்பெண்கள் வாங்கும் படங்கள் மட்டுமல்ல 3லிருந்து 4க்குள் வாங்கும் படங்களும் சிறப்பாக உள்ளன.  நான் முதலில் புத்தகங்கள் படிப்பதில் தீவிரமாக இருந்தவன், சினிமா பார்ப்பதில் தீவிரமாக மாறிவிட்டேன். தினமும் ஒரு படமாவது பார்த்துவிடுவேன்.  
முழுவதும் தமிழ் சினிமாப்படங்கள்தான் பார்க்கிறேன். பார்க்கப் பார்க்க எதாவது தோன்றினால் எழுதலாம் என்று  தோன்றியது.  பாலா இயக்கிய நாச்சியார் என்ற படத்திற்கு 4 மதிப்பெண்கள் மேல் குறிப்பிட்டிருந்தார்கள்.  எனக்குப் பொதுவாக பாலா படங்களைப் பார்ப்பதற்குத் தயக்கம் ஏற்பட்டு விடும்.  ஆனால் 4 மதிப்பெண்களுக்கு மேல் என்பதால் நாச்சியார் படத்தைப் பார்த்தேன்.  பாலா இயக்கிய இப்படத்தின் மீது அளவுகடந்த மதிப்பு கூடி விட்டது.  
அதேபோல் யூ டர்ன் என்ற படம் பார்த்தேன்.  என்னடா இருக்கப்போகிறது இந்தப் படத்தில் என்றுதான் பார்த்தேன்.  படத்தைப் பார்த்தவுடன் ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார்களே என்று தோன்றியது.  ஒரு சில இயக்குநர்களின் பெயர்கள் மட்டும் தெரிகிறது.  ஆனால் பல புதியவர்கள் வந்திருக்கிறார்கள்.  அவர்கள் பெயர்கள்  அவ்வளவாய் தெரியவில்லை.
இப் படங்கள் எல்லாவற்றையும் சப்டைட்டிலுடன் காட்டுகிறார்கள். உலகம் முழுவதும் எல்லா மொழிபேசுபவர்களும் இப்படங்களைப் பார்த்து ரசிக்க முடியும் என்று தோன்றுகிறது.  தமிழ் படங்களைப் பார்ப்பதுபோல் மற்ற மொழிப்படங்களையும் பார்க்கலாமென்று நினைக்கிறேன்.  ஆனால் தமிழிலிலேயே அதிகமாகப் படங்கள் பார்க்க வேண்டியிருப்பதால், மற்ற மொழிப் படங்களை முயற்சி செய்யவில்லை.
சென்னையில் உலகத் திரைப்பட விழாக்கள் நடக்கும்போது கட்டாயம் பல படங்களைப் பார்த்துவிடுவேன்.  இந்த ஆண்டு அவற்றைப் பார்த்தபோது  கொஞ்சம் வெறுப்புதான் தோன்றியது.  ஆனால் இப்போது பார்க்கும் தமிழ் படங்கள் மீது எனக்கு வெறுப்பு ஏற்படவில்லை.  ஒரு படம் பார்த்தவுடன் இன்னொரு படம் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் ஏற்படுகிறது.  

Comments